NewsWorld

கல்யாண மண்டபத்தில் குண்டு வெடிப்பு – 63 பேர் மரணம் | ஆப்கானிஸ்தானில் சம்பவம்!

பிந்திய செய்தி: குண்டுவெடிப்பிற்கு ஐசிஸ் உரிமைகோரியுள்ளது

சனி, இரவு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றின்போது தற்கொலைதாரி ஒருவரின் குண்டு வெடித்ததால் 80 பேர் கொல்லப்பட்டும், 180 பேர் காயமுற்றும் உள்ளனர். 1000 பேருக்கு மேல் கல்யாண மண்டபத்தில் இருந்ததாகவும் அறியப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

குண்டு வெடிப்பிற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என உள்ளக அமைச்சர் நுசரட் றஹிமி தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரெஸ் தெரிவிக்கிறது.

இச் சம்பவத்துக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என தலிபான் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இப்பகுதியில் பெருமளவு ஷியா பிரிவினர் வாழ்வதாகவும் தலிபான்கள் மற்றும் ஐசிஸ் அமைப்புகள் இப்பிரிவினரைத் தாக்குவது வழக்கமெனவும் அறியப்படுகிறது

கல்யாண மண்டபங்கள் அதிக மக்கள் கூடிக் குலாவும் இடமாகையால் தற்கொலைக் குண்டுதாரிகள் அப்படியான இடங்களைத் தாக்குகிறார்கள். கடந்த நவம்பரில் இன்னுமொரு கல்யாண மண்டபம் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானபோது 55 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். முகம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்றய நிகழ்வில் முஸ்லிம் மத குருக்களும், கல்விமான்களும் சமூகமளித்திருந்தார்கள்.

இதே வேளை அமெரிக்காவும் தலிபான்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதோடு தற்போதய ஆப்கானிய அரசு பேச்சுவார்த்தைகளில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதும் குழப்பநிலைக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க-தலிபான் பேச்சுவார்த்தை ஓரளவுக்கு வெற்றிபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறதெனவும் கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வரும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் எனவும் மக்கள் நம்புவதாகத் தெரிகிறது.

உலக நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ஆப்கானிஸ்தானை ஏவுதளமாகப் பாவிக்கக்கூடாது என்ற நிபந்தனையிலேயே அமெரிக்கா தனது படைகளை மீளழைக்கும் எனவும் இதற்கு தலிபான் இணங்கியிருக்கிறது எனவும் தெரிய வருகிறது. இருப்பினும் இந்த வருட ஆரம்பத்தில் பொதுமக்களைப் பாதுகாப்போம் எனத் தலிபான்கள் வாக்குறுதி கொடுத்திருந்தும் அவர்களது தாக்குதல்கள் பொதுமக்கள் மீதும், அரச படைகள் மீதும் தொடர்கின்றன.

சென்ற வருடம் மட்டும் 900 குழந்தைகள் உட்பட,800 பொதுமக்கள் தலிபான், அமெரிக்கப் படைகள், ஐசிஸ் சார்ந்த குழுக்கள் போன்றவர்களால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.