கலையரசன் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் தெரிவு
ஆகஸ்ட் 11, 2020: அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற தவராஜா கலையரசன், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்கிறார்.
ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்களது விருப்பம் இதுவேயாயினும், தமிழரசுக் கட்சி, தேர்தலில் தோற்ற, தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கே தேசியப் பட்டியல் நியமனம் கொடுக்கப்பட வேண்டுமென தீர்மானித்ததாகவும், இதனால் கட்சிக்குள் உட்பூசல்கள் தோன்றியதாகவும் பேசப்பட்டது. இந் நிலையில், தற்போது கலையரசனின் நியமனம் வர்த்தமானி மூலம் அறிவித்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியமன உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் தம்மோடு கலந்தாலோசிக்காது மாவை சேனாதிராஜாவைத் தேர்ந்தெடுத்ததாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருந்தன.
கலையரசனின் தேர்வின் மூலம் அம்பாறை மாவட்டத்துக்குத் தமிழர் பிரதிநிதி இல்லை என்ற குறை இப்போது நீக்கப்பட்டுள்ளது.