கலைஞர் கருணாநிதிக்கு மரீனா கடற்கரையில் நினைவுத் தூபி!
39 கோடி ரூபா செலவில் தமிழ்நாடு அரசு எழுப்புகிறது
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் நினைவாக மரீனா கடற்கரையில் 39 கோடி ரூபா செலவில் நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து நேற்று (24) சட்ட சபையில் அறிவிக்கும்போது “எனது தந்தையார் கருணாநிதி அவர்கள் தனது வாழ்வின் 80 வருடங்களைப் பொதுவாழ்வுக்காக அர்ப்பணித்துள்ளார். அவரது சிந்தனைகளையும், சாதனைகளையும் எதிர்காலச் சந்ததிகள் அறிந்துகொள்ள வேண்டும்” என தி.மு.க. தலைவரும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.கே.ஸ்டாலின் தெரிவ்த்தார்.
“கருணாநிதி ஒரு பன்முக ஆளுமையைக் கொண்ட ஒருவர். தமிழ் சினிமாவில் கதை வசனம் எழுதுவதில் தனது முத்திரையைப் பதித்த அவர் சட்ட சபை அங்கத்தவராக 60 வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். அவரைப் போல் இதுவரை எவரும் சிகரத்தைத் தொட்டவர் எவருமில்லை இனிமேலும் எவரும் வரப்போவதுமில்லை” என ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மரீனா கடற்கரையில் அமைந்துள்ள 2.21 ஏக்கர்கள் அண்ணா நினைவுத் திடலில் இன் நினைவுத் தூபி அமைக்கப்படவுள்ளது. இதற்கான வரைகலை வடிவமொன்றை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்டிருந்தார்.