கலே கரையில் தவம் கிடக்கும் அகதிகள் | வெற்றி இல்லையேல் வீண் மரணம்
ஆங்கிலக் கால்வாயில் அகதிகளின் கல்விக் கனவு: “அங்கே போனால் நன்றாகப் படிக்கலாம்”
அக்டோபர் 23, 2019 அன்று இங்கிலாந்தின் எஸெக்ஸ் சிறு நகரில் குளிரூட்டப்பட்ட பாரவூர்தியொன்றினுள் 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அனைவரும் இங்கிலாந்திற்குள் களவாக நுழைய முற்பட்ட வியட்னாமிய அகதிகள்.
![Refugees in Calais are trying to escape devastating living conditions in French camps and believe the UK would offer them more security [Courtesy of Adrian Abbott]](https://www.aljazeera.com/mritems/imagecache/mbdxxlarge/mritems/Images/2019/11/26/95bd40dd4684481eb023ec6466af3ed1_18.jpg)
பிரான்ஸ் நாட்டில் தங்கியிருக்கும் பல அகதிகள் பலரும் இதே விதியை எதிர்நோக்கலாமென அஞ்சுகிறார்கள் அகதிகளுக்கு உதவி புரியும் அமைப்புகள்.
கலே (Calais) பிரான்ஸின் வடபகுதியிலுள்ள துறைமுக நகரம். அங்கு பல நூற்றுக்கணக்கான அகதிகள் இன்கிலாந்திற்குள் நுழைவதற்காகத் தருணத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காவற்துறை அவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் வாழுமிடங்கள் மிக மோசமான நிலையிலிருக்கின்றன. அனைவரும் உயிரே போனாலும் இங்கிலாந்திற்குள் நுழைவதற்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களில் நூற்றுக் கணக்கானோர் குழந்தைகள்.

கலேயில் அகதிக் குழந்தைகள் [நன்றி: உலக மருத்துவம்]
பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்குமிடையில் இருக்கும் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்திற்குள் நுழைய அவர்கள் பல வழிகளிலும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் எப்படியானாலும் தமது நாட்டை விட்டுப் போனால் போதும் என்கின்ற மனநிலையில் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை இருக்கிறது.
சமீபத்தில் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டு கடலில் அமிழவிருந்த ஈராக்கிய அகதி ஒருவரை இங்கிலாந்தின் படகொன்று காப்பாற்றியது.
குளிர் தொடங்கியதும் முகாமகளில் வாழும் பலர் அதைத் தாங்கமுடியாது அவதிப்படுகிறார்கள். இந்த மாதம் 25 வயதுடைய நைஜீரிய அகதியொருவர் குளிர் போக்க மூட்டிய நெருப்பின் புகையைச் சுவாசித்ததால் மரணமடைந்தார்.
“ஏன் இப்படியான உயிராபத்து நிறைந்த முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள்” என்று கேட்டதற்கு “ஒன்றில் போக வேண்டும் அல்லது சாக வேண்டும். எங்களுக்கு வேறு தேர்வேதும் இல்லை” என அவர்கள் பதிலளித்தார்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.
34 வயதுடைய யூசுஃப் எரித்திரியாவைச் சேர்ந்தவர். பிரான்ஸுக்கு வர அவருக்கு 2 வருடங்கள் பிடித்திருக்கிறது. கலேயில் ஆறு மாதங்களாக வாழ்கிறார். நிலைமைகள் மிக மோசம். எல்லா இடங்களிலும் எங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் எங்கே போவது? என்கிறார்.
” எரித்திரியாவில் எங்களால் வாழமுடியாது. கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கிறார்கள். நான் ஆங்கிலம் பேசுவேன் என்பதால் இங்கிலாந்துக்குப் போவதையே விரும்புகிறேன். பிரான்ஸ் காவற்துறை எங்களை மிக மோசமாக நடத்துகிறது. அவர்கள் எங்கள் கூடாரங்களையும் உடமைகளையும் எடுத்துவிடுகிறார்கள். குளிருக்குப் போடுவதற்கு எங்களிடம் காலுறைகள் கூட இல்லை”.
“நான் லிபியாவினூடாக வந்து கடலைக் கடந்து இத்தாலிக்குப் போனேன். இங்கிலாந்திற்குள் பார வண்டிகளில் ஒளிந்திருந்து போவதற்கே நான் முயற்சி செய்கிறேன். உயிருக்கு ஆபத்தெனினும் முயற்சி எடுப்பது நல்லது. வெற்றி அல்லது மரணம். அவ்வளவுதான்”
24 வயதுடைய மேர்டல் இறாக்கைச் சேர்ந்த குர்திஷ் இனத்தவர். கலேயில் ஆறு மாதங்களாக இருக்கிறார். இங்கிலாந்திற்குள் நுழைய ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறார். நான் நல்ல சப்பாத்து அணிந்துகொண்டும், கைத் தொலைபேசி வைத்திருப்பதும் இங்குள்ள காவற்துறையினருக்குப் பிடிப்பதில்லை. “எனது உறவினர் இங்கிலாந்திலுள்ளனர். நான் அவர்களிடம் போகவேண்டும். ஐசில் உடன் எனக்குப் பிரச்சினை. அதனால் தான் நான் குர்திஸ்தானை விட்டு வெளீயேறவேண்டி வந்தது” என்கிறார் அவர்.
சிலர் ஆப்கானிஸ்தானியர் ஈரான், துருக்கி, கிரீஸ், சிலோவேக்கியா, சேர்பியா எனப் பல நாடுகளைக் கடந்து வந்திருக்கிறார்கள். எல்லோரது நோக்கமும் இங்கிலாந்து போவதுதான். பலர் காடுகளிலும், ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகிலும் தூங்குகிறார்கள். அங்கேயே நெருப்பை மூட்டிச் சமையல் செய்வதும், குளிர் காய்வதுமாக இரவைக் கழிக்கிறார்கள். விடிய எழுந்தவுடன் காலை உணவை முடித்துவிட்டு பார வண்டிகள் ஏதும் அகப்படுமா என முயற்சிப்பார்கள். வெற்றி பெறுபவர்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். தோற்பவர்கள் பெருவிரல்களில் இலக்கமிடப்படுகிறார்கள்.
