ColumnsNewsசிவதாசன்

கலிபோர்ணியாவின் அடுத்த ஆளுனர் இலான் மஸ்க்?

சூடு பிடிக்கும் ட்றூடோ / ஹிட்லர் ஒப்பீடு

சிவதாசன்

கனடிய பாரவண்டி ஓட்டுனர்களின் நகர் முடக்க விடயத்தில் தன் ருவிட்டர் மூலம் கருத்துத் தெரிவித்த ரெஸ்லா நிறுவன அதிபர் மீது உலகின் பல பாகங்களிலுமிருந்து கண்டனங்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம்போல் ருவிட்டரால் அவசரமாகச் சுட்டுவிட்டுப் பின் மானபங்கப்படுவதில் துரும்பருக்கு அடுத்தபடியாக (இப்போதைக்கு) இருப்பவர் மஸ்க். துரும்பரைப் போல் அபாண்டமாகச் சொத்தைச் சேர்க்காவிடினும், ருவீட்டுகளினால் பங்குச் சந்தைகளை ஏற்றி இறக்கி இலாபம் தேடும் ஒருவர் என்ற வகையில் மஸ்க்கும் ஒரு ‘பொறுக்கி’தான். அதனால் கலிபோர்ணியாவின் அடுத்த ஆளுனராக மஸ்க் வந்தால் ஆச்சரியப்படக் கூடாது. (அமெரிக்காவில் பிறக்காத அமெரிக்கர்களுக்கு அதியுச்ச பதவி ஆளுனர் தான்). அதனால் இப்போதே அவரை மஸ்க்கர் என்று மரியாதையாக அழைக்கிறேன்.

ட்றூடோ சில பல அநியாயங்களைச் செய்திருக்கலாம். போற்றிப் புகழுமளவுக்க அவர் புனிதரல்ல. ஆனால் பாரவண்டிக்காரர் விடயத்தில் அவரை ஹிட்லருக்கு சமமாகக் கூறினால் அது ஹிட்லரைப் புனிதராக்குவதற்குச் சரி. தான் ட்றூடோவை அவமானப்படுத்தி விட்டேனென்று மஸ்க்கர் நினைக்கலாம். அதனால்தான் உலக யூத அமைப்புகள் மஸ்க்கர் மீது பாய்ந்து விழுகிறார்கள். உலகத்தின் hacker களின் கூடமென வர்ணிக்கப்படும் இஸ்ரேலிடமிருந்து புறப்படும் கட்டளைகளால் இனித் தானியங்கி ரெஸ்லாக்கள் திசை திருப்பப்பட்டால் அதற்கு அவர் இன்னுமொரு ருவிட்டர் செய்தி மூலம் ஜக்மீட் சிங்குக்கு ஒரு மீம் அனுப்பலாம். யார் கண்டது?

மஸ்க்கரின் ட்றூடோ மீதான ருவிட்டர் செய்தி இப்போது அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் screen shot பரவலாக உலாவுகிறது.

தற்போது அழிக்கப்பட்டுவிட்ட அவரது குறுஞ்செய்தியில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவை ஹிட்லருக்கு ஒப்பிட்டு விபரித்திருந்தார். இதில் ஹிட்லரின் படத்தின் மேல் “என்னை ஜஸ்டின் ட்றூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்து, என்னிடம் ஒரு வரவு செலவுத் திட்டம் இருந்தது” (Stop comparing me to Justin Trudeau. I had a Budget” என வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. “விசரன் அதில ஸ்டீஃபன் ஹார்ப்பருடைய படத்தைப் போட்டிருக்கலாம்” என்று நம்ம கன்சர்வேட்டிவ் ஆதரவாளர்கள் புழுங்குவதும் தெரிகிறது.

துரும்பரின் ருவீட்டுகளைப் போலவே இதுவும் அவருடைய விவேகத்தை எடைபோடும் அல்லது நிதானமற்ற செயற்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு விடயமாகவே பார்க்கப்படும். இக்காரணங்களுக்காக அவர் நிச்சயமாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் அங்கத்தவராக வருவதற்கான, பணம் உள்ளிட்ட, அத்தனை தகமைகளையும் வைத்திருப்பதாக நிரூபித்திருக்கிறார். இனி அவர் தனது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தை தெனாபிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு மாற்றுவதற்கு ஏதாவது வழிசெய்யவேண்டும். அதுவரை அவர் கலிஃபோர்ணியாவின் ஆளுனராக வந்து தனது confederation flag மீதான / ஹிட்லர் மீதான விசுவாசத்தை நிரூபிக்கலாம்.

ஹிட்லரைப் புகழும் ஒவ்வொரு தருணமும் அவரின் கொலைவெறியினால் மாண்டுபோன அத்தனை உயிர்களின் ஆன்மாக்கள் மீது இன்னுமொரு தடவை ஈட்டி பாய்ச்சும் வேதனையை அந்த உயிர்களின் உறவுகள் அனுபவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால் மஸ்க்கரின் இந்த ருவீட் உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இது தொடர்பாக அவர் மன்னிப்புக் கேட்கவேண்டுமென அமெரிக்க யூதர் சங்கம் (American Jewish Committee) கேட்டிருக்கிறது. அமெரிக்க மற்றும் உலக யூதர் சங்கங்கள் விடுத்த அழைப்புக்கு மஸ்க்கர் பதிலேதும் தரவில்லை. மாறாக, “நாஜி ஜேர்மனியின் பொருளாதார மீட்பு பற்றிய வரலாற்றை வாசித்து பூரன விளக்கம் பெறுங்கள்” என அவர் தனது ருவிட்டர் மந்தைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கெல்லாம் பதிலளித்து மாமரத்துக் குரங்காக ட்றூடோ இருப்பார் என நான் நினைக்கவில்லை. ஆனால் பழி வாங்குவதில் அவரும் குறைந்தவரல்ல என்பதை மஸ்கர் உணர்ந்து வைத்திருப்பது நல்லது.

பாரவண்டிக்காரர் விடயத்தில் இந்தளவு அனுதாபம் இந்த பில்லியனதிபதிக்கு எப்படி வந்தது என்ற சூட்சுமம் விளங்கவில்லை. 95% மக்களது சுதந்திரத்தை மதிக்காது 5% வண்டிக்காரர் ஒரு ஜனநாயக அரசின்மீது போடும் நிபந்தனைகளையும், வண்டிகளைக் கொண்டு நகர்களை முடக்குவதையும் எந்த பொருளாதாரப் புத்தகத்தில் மஸ்க்கர் வாசித்தார் எனத் தெரியாது. கீனீசியன் பொருளாதரத் தத்துவத்தில் அதற்கு இடமிருப்பது போல் தெரியவில்லை. ஒரு குடியரசுக்கட்சிக் காரரிடம் அதை எதிர்பார்ப்பதும் கூடாது. ஆனால் அமெரிக்காவின் மூதலீட்டு கட்டுப்பாட்டு நிர்வாகமான Securities and Exchange Commission உடனான தொடரும் தகராற்றினால் ‘less government’ என்ற கோட்பாட்டைப் பிடித்துக்கொண்டு அலையும் குடியரசுக் காரர் மீது அவருக்கு தீராக் காதல் பொங்கியெழுந்திருக்கலாம். 2018 இல் அவர், செய்த ருவீட்டுகளினால் ஏற்பட்ட பங்குச்சந்தைத் தளம்பல்களால் அவரும் அவரது நிறுவனமான ரெஸ்லாவும் தவறான வழிகளில் இலாபம் சம்பாதித்தமைக்காக $40 மில்லியன்களை இக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துக்குத் தண்டமாகச் செலுத்தியிருந்தனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து மஸ்க்கர் அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது திருத்தத்தின் (தனிமனித சுதந்திரத்திற்கான பாதுகாப்பு) திடீர்க்காதலனாகிவிட்டார் என்கிறார்கள். இதைத் தொடர்ந்து அரசாங்கங்கள் மீதான அவரது வெறுப்பு அதிகரித்து இறுதியில் கனடிய பாரவண்டிகளில் அவர் ஏறவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்து சமயத்தில் வரும் படிப்பினைகளுக்கான புராணக்கதைகளில், முறைப்படி தவம் செய்யும் அசுரருக்கு, தேவருக்கு வழங்கும் அதே வரங்களை சிவபெருமான் வழங்குவார் எனவும் ஆனால் “தவறான வழிகளில் உங்கள் சக்திகளைப் பிரயோகித்தால் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்” என்ற நிபந்தனையுடன் அவ்வரங்களை வழங்குவார் (conditional agreement) எனவும் கூறப்படுகிறது. மஸ்க்கரும் நாஜி ஜேர்மனியின் பொருளாதார வரலாறு போன்ற நூல்களைப் படித்து, $236 பில்லியன் (காகிதப்) பெறுமதியுள்ள உலகின் அதியுயர் பணக்காரராக வந்திருக்கிறார். அவருடைய கடுந்தவம் பலனைக் கொடுத்திருக்கிறது. ஆனால் வரத்திற்கான நிபந்தனைகளை அவர் காப்பாற்றுவாரா என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. அமெரிக்க ஆண்டவர் நம்ம சிவபெருமான் மாதிரி soft ஆன ஆள் இல்லை என்பதை அவர் மனதில் வைத்திருக்க வேண்டும்.

ரெஸ்லா பங்குகளில் முதலீட்டவர்களுக்கு எனது முன்கூட்டிய அனுதாபம்.