இலக்கியம்

கலித்தொகை 94

வலையில் பிடித்தது


மருதம், குறளனும் கூனியும் சொன்னது

மருதன் இளநாகனார்

பாடல்:

குறளன்:

என் நோற்றனை கொல்லோ?
நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன், நின்றீத்தை!
கூனி:

அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான் 5
ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே! நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை; நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று?

குறளன்:

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப் 10
பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்;
நீ நல்கின் உண்டு என் உயிர்.

கூனி:

குறிப்புக் காண் வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை
இல்லத்து வா என மெய் கொளீஇ, எல்லா நின் 15
பெண்டிர் உளர் மன்னோ? கூறு!

குறளன்:

நல்லாய் கேள்! உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்தன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்; அருளீமோ, 20
பக்கத்துப் புல்லச் சிறிது.

கூனி:

போ சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு இனித், தொக்க
மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங்கொடி போல,
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்
புரப்பேம் என்பாரும் பலரால், பரத்தை என் 25
பக்கத்துப் புல்லீயாய் என்னுமால், தொக்க
உழுந்தினும் துவ்வாக் குறுவட்டா! நின்னின்
இழிந்ததோ கூனின் பிறப்பு?…………………………

குறளன்:
……………………………………………………….கழிந்து ஆங்கே
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும், உற்றீயாக்
கூனி குழையும் குழைவு காண்! 30

கூனி:

யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி,
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண், கவர் கணைச்
சாமனார் தம் முன் செலவு காண்.

குறளன்:

ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் 35
உசாவுவம் கோன் அடி தொட்டேன்.

கூனி:

ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன், ஏஎ!
பேயும் பேயும் துள்ளல் உறும் எனக்
கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல்;
தண்டாத் தகடு உருவ வேறு ஆகக் காவின் கீழ்ப் 40
போதர் அகடு ஆரப் புல்லி முயங்குவேம்,
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்து விட்டாங்கு.

பொருள்:

என்ன நோன்பு இயற்றினாயோ தெரியவில்லை. நீருக்குள்ளே நிழல் வளைந்து தெரிவது போல வளைந்து மெல்லழகுடன் உடல் சுருங்கி நடந்து செல்கிறாய். உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். சற்று நில்.

அம்மாடியோ! காணும் பெருமிதத் தோற்றம் இல்லாத குறளனே! ஒரு நாழிப் பொழுதில் ஆண்டலைப் பேய்க்குப் பிறந்த குட்டிப் பயலே! எம்மையா தடுத்துக் கேட்கின்றாய்? உன்னைப் போன்றாரை யாரானும் தீண்டுவரோ?

(சிறந்த படை – ஏர்) நிலத்தில் எறிந்த கலப்பை போல் உடல் மடங்கி, முடங்கி கட்டி வைத்திருக்கும் கலப்பை போல் நெறித்துக்கொண்டிருக்கும் உடம்பு கொண்டவளே! நான் பொறுத்துக்கொள்ள முடியாத காம நோயை உண்டாக்கியிருக்கிறாய். அதனைப் பொறுத்துக்கொண்டு நிற்க முடியவில்லை. நீ உன்னை எனக்குக் கொடுத்தால்தான் என் உயிர் நிற்கும்.

குறி பார்க்கும் சூதாட்டப் பலகையை எடுத்து நிறுத்தியது போன்ற குறள் உருவம் கொண்டவனே! கல்லாக் குறளனே! நண்பகல் வேளையில் வந்து என்னை உன் இல்லத்துக்கு வா என்று அழைக்கிறாயே! என் உடம்பைத் தொட்டு இழுக்கிறாயே! உன் பெண்டாட்டி இருக்கமாட்டாளா?

நல்லவளே கேள். உன் முதுகுக்கு மேலை நடுப்பகுதி உயர்ந்துள்ளது. நிற்கும் கொக்கு போல் வளைந்துகொண்டு நிற்கிறாய். உன் மார்பகத்தை நான் தழுவ வேண்டும் என்றால் உன் நெஞ்சு நிமிரவேண்டும். முதுகினையும் தழுவ முடியவில்லை. கிச்சுக்கிச்சுப் பண்ணியும் தழுவ முடியவில்லை. உன் அருளைக் காட்டு. பக்கத்தில் நின்று தழுவிக்கொள்கிறேன்.

போ, சீச்சீ, முரிந்துபோன  மகனே, இனி நீ விலகு. வளைந்த மரத்தில் ஏறியிருக்கும் பூங்கொடி போல நான் இருக்கிறேன். வறுமை ஒன்றும் இல்லாத உடம்பினை உடையவர் என்னை தழுவிக்கொண்டு பாதுகாப்பேன் என்று சொல்பவர் பலர் உண்டு. பரத்தன் ஒருவன் என் பக்கவாட்டில் இருந்து தழுவட்டுமா என்கிறான். சுளுந்து (துவ்வா உழுந்து) போல் இருக்கும் குறள் வட்டா, கூன் பிறப்பு உன்னைக் காட்டிலும் இழிந்ததா? நான் உன் வலையில் வீழ்வேன் என்று என் பின் வராதே. இப்படிக் கூனி குழைந்து பேசினாள்.

நான் விரும்பவில்லை என்று சொல்கிறேன். ஆமையைத் தூக்கி நிறுத்தியது போலக் குறளன் தன் தோள்களை வீசிக்கொண்டு  நான் விலக்கினாலும் விலகாமல் தன் காம நடை போட்டுக்கொண்டு வருகிறான். அழகே இல்லாத சாமனார் போலக் குறளன் நடந்து வருகிறான் (காமன் = அழகன், சாமன் = அழகே இல்லாதவன், காமனின் அண்ணன் | சீதேவி  = அழகி, மூதேவி = அழகே இல்லாதவள், சீதேவியின் அக்கா)

ஓ ஓ நமக்குள் ஒருவர் ஒருவரைப் பார்த்துச் சிரித்துக்கொள்ளலாமா? உன் மேன்மையான அடிகளைத் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.
அப்படியே ஆகட்டும். பார்ப்பதற்கு இனிய மார்பினை உடையவனே! நான் அடங்கிவிட்டேன். ஏ! பேயும் பேயும் துள்ளித் திரிகின்றன என்று கோயிலுக்குச் செல்பவர் நம்மைக் கண்டு சிரிக்காமல் இருக்க வேண்டும். தடையில்லாத தகடு போன்ற உருவம் கொண்டவனே, வேறொரு காட்டுக்குச் செல்வோம். அங்கே வயிறு நிறையும்படி ஆரத் தழுவி மகிழ்வோம். குடவோலையைக் கட்டி ஊரவைப் பெருமக்கள் கூடத்துக்குள் காப்பிட்டு கட்டி வைத்திருப்பது போல் நம் உறவு இருக்கட்டும்.

‘அடியோர் பாங்கினும் வினை வல பாங்கினும், கடி வரை இல புறத்து என்மனார் புலவர்’ என்பதனால், அடியோராகிய கூனும் குறளும் உறழ்ந்து கூறிக் கூடியது

மூலம்: தமிழ்க்கனல் பதிவிட்டவர் கவிகை