AnalysisWorld

கலாச்சாரப் புரட்சி 2.0 | கன்ஃபூசியஸ் இன்ஸ்டிடியூட் மூலம் சீனமயமாக்கலும் இந்தோனேசியாவில் அதிகரிக்கும் சீன எதிர்ப்பும்


மாயமான்

சமீப காலங்களில் இந்தோனேசியாவில் சீனாவின் அரசியல், பொருளாதார நிலைகொள்ளல் மிகவேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, சீனா தற்போது இந்தோனேசியாவின் முன்னணி வர்த்தக பங்காளியாகவும் இரண்டாவது பெரிய முதலீட்டாளராகவும் வந்திருக்கிறது.

தென் / தென்கிழக்காசியப் பிராந்தியத்திலுள்ள பர்மா, சிறீலங்கா ஆகிய நாடுகளில் கையாள்வதைப் போல, இந்தோனேசியாவுடன் நெருக்கத்தை உண்டுபண்ணுவதற்கு சீனா கலாச்சார இராஜதந்திரத்தைப் பாவித்து வருகிறது. எப்படி மாவோ சேதுங் கம்யூனிஸ்ட் ஆட்சியை விரிவுபடுத்த கலாச்சாரப் புரட்சி என்ற ஆயுதத்தைப் பாவித்தாரோ அதுபோல் சீனாவின் இன்றய தலைவர் ஜின்பிங் உலகில் சீனாவின் ஆட்சியை விரிவுபடுத்த மீண்டுமொருதடவை கலாச்சாரத்தை கலாச்சாரத்தைப் பாவித்து வருகிறார்.

கலாச்சாரம் என்ற பெயரில் முதலில் புகுத்தப்படுவது மொழி. வறுமையான, அபிவிருதியடைந்து வரும் நாடுகளின்மீது கடன் சுமைகளைச் சுமத்தி, அந்நாடுகளின் அரசியல் தலைவர்களை ஊழல்களில் சிக்கவைப்பதன் மூலம் மெளனிக்க வைத்து, தனது மொழியையும் கலாச்சாரத்தையும் திணிக்க முயன்று வெற்றியும் கண்டு வருகிறது சீனா. கன்ஃபூசியஸ் இன்ஸ்டிடியூட் என்ற கலாச்சார நிலையங்களை இந்நாடுகளில் நிறுவுவதன் மூலம் தன் முதற் கருவியாக சீனா பாவிப்பது கல்வி.

இலங்கையில் க.பொ.த. உயர்தர பாடத்திட்டத்தில் சீன மொழி இருப்பதாகச் சமீபத்தில் செய்தி ஒன்று வந்தது. தெரு வழிகாட்டிப் பதாகைகளில் சீன மொழி புகுந்து தமிழைத் துரத்திவிட்டது. தென்னாபிரிக்காவில் சீன மொழி உத்தியோகபூர்வ மொழியின் அந்தஸ்தை எடுத்துவிட்டது. இந்தோனேசியாவில் தற்போது கன்ஃபூசியஸ் இன்ஸ்டிடியூட் மூலம் மொழிக் கல்வி, கலாச்சாரப் பகிர்வு என மக்களிடையே சீனமயமாக்கல் விரைவாக்கப்பட்டு வருகிறது.

2004 ம் ஆண்டிலிருந்து, 140 நாடுகளில் 500 கன்ஃபூசியஸ் நிலையங்களைச் சீனா நிறுவியிருக்கிறது. மண்டாரின் மொழி, சீன கலாச்சாரம் ஆகியற்றைப் போதிப்பதே இந் நிலையங்களின் நோக்கம். இந்தோனேசியாவின் பிரபல பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவற்றோடு இணைந்து இயங்கும் 6 கன்ஃபூசியஸ் நிலையங்களை உருவாக்கியதன் மூலம் மண்டாரின் மொழிக் கல்வியை ஊக்குவித்து வருகிறது.2011 இல் சூளவேசியிலுள்ள ஹசானுதீன் பல்கலைக்கழகத்துடன் சீனாவின் ஜியாங்சி மாகாணத்திலுள்ள நான்சாங் பல்கலைக்கழகம் கல்வித் தொடர்புகளை ஏற்படுத்தி மாணவர் பகிர்வு திட்டங்களின் கீழ் மண்டாரின் மொழியைப் புகட்டி வருகின்றது. 2011-2015 ஆண்டுகட்கிடையில் ஹசானுதீன் பல்கலைக்கழகம் 2,000 மாணவர்களை சீனாவுக்கு அனுப்பியிருக்கிறது.

இதே போன்று, இந்தோனேசியாவின் இதர பல்கலைக்கழகங்களான பாண்டுங்கிலுள்ள மாரநாத பல்கலைக்கழகம், ஜாகர்த்தாவிலுள்ள அல் அசார் இந்தோனேசியா பல்கலைக்கழகம், மேற்கு காளிமாந்தனிலுள்ள தாங்ஜுங்புர பல்கலைக்கழகம், சூரபாயவிலுள்ள சூரபாய மாநில பல்கலைக்கழகம், கிழக்கு ஜாவாவிலுள்ள முகம்மதிய மலாங் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கன்ஃபூசியஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு மொழிக்கல்வி அளிக்கப்படுகின்றது.

இப் பல்கலைக் கழகங்கள் மண்டாரின் மொழியைக் கற்பிப்பதுடன் பல்வேறு வழிகளில் சீனக் கலாச்சார ஊடுருவலையும் மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் இந்தோனேசியா மீது ஒருவித மென்னதிகாரத்தை (soft power) சீனா பிரயோகித்து வருகிறது.

எதிர்ப்பு

சீனாவின் இந்த அதிவேக கலாச்சார ஊடுருவல் அதன் நோக்கத்துக்கு எதிரான விளைவுகளைத் தோற்றுவித்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. சமீபத்தில், சீனாவின் நோக்கத்தை அறிந்த இந்தோனேசிய மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். இதனால், சீனாவின் பொருளாதார, முதலீட்டுத் திட்டங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நிலை உருவாகி வருகிறது.

இந்தோனேசியாவில் வாழும் சிறுபான்மைச் சீன இனத்தவர் மீது காட்டப்பட்டு வரும் இனக்குரோதம் அதன் டச்சு காலனித்துவ காலத்திலிருந்து தொடர்கிறது.

1960 களில் சீனக் கம்யூனிஸ்ட்டுகள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள் என்ற சந்தேகத்தில் பல இலட்சக்கணக்கான சீன வம்சாவளியினர் கொல்லப்பட்டனர். 1998இல் ஜனாதிபதி சுஹார்ட்டோவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ந்த இனக் கலவரத்தின்போது பல சீன வம்சாவளியினர் கொல்லப்பட்டிருந்தனர். அப்போது ஏற்பட்டிருந்த ஆசிய பொருளாதாரச் சீர்கேட்டுக்கு சீன வம்சாவளியச் சேர்ந்த பெருவணிகர்கள் மீது குற்றம்சாட்டி அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன. 1000 பேர்வரை கொல்லப்பட்டும் 100 பெண்கள வரை பலாத்காரப் பாலியல் ஈடுபாட்டுக்கும் உட்படுத்தப்பட்டுமிருந்தனர்.இச் சீன விரோதம் இப்போதும் மக்களின் உணர்வுகளில் இருக்கிறது. கோவிட்-19 வைரஸின் பரவலுக்குப் பின், ‘சீன வைரஸைக் கொண்டுவந்தமைக்காக’ சீன இனத்தவர் மீது மரண தண்டனை விதிக்கும்படி பலர் சமூக வலைத் தளங்களில் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

உள்ளூர் மக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக, மேற்கு சுமாத்திராவில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த 170 சீன சுற்றுலாவாசிகள் வந்த அன்றே சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மாணவர்களுக்கு மண்டாரின் கல்வியைப் புகட்டியதைத் தவிர இந்தோனேசியாவில் சீனாவின் மென்னதிகார முயற்சி அதிகம் வெற்றியளிக்கவில்லை. மாறாக சீனாவுக்கும் சீனருக்கும் எதிரான குரோதத்தையே அது வளர்த்து வருகிறது. பல்கலைக் கழகங்கள் இருக்கும் நகர்ப்பகுதிகளில் சீன எதிர்ப்பு குறைவாக இருப்பினும், கிராமிய மட்டங்களில் சீனாவின் இத் திட்டம் வெற்றியளிக்கவில்லை.

இச் சீன எதிர்ப்பு இதர தென்னாசிய நாடுகளுக்கும் பரவுமா என்பதுவே இப்போது கேட்கப்பட்டு வரும் கேள்வி. தென்சீனக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்களும் இராணுவ விஸ்தரிப்பும் காலக்கிரமத்தில் இப்பிராந்தியம் முழுவதும் சீன எதிர்ப்பு பரவுவதற்கான சாத்தியங்களே உண்டு.

அதே வேளை, அமெரிக்கா கன்ஃபூசியஸ் இன்ஸ்டிடியூட்டை ஒரு வெளிநாட்டு கொள்கை பரப்பும் ஸ்தாபனம் என அறிவித்துள்ளது.

சமீபத்தில் இலங்கைக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ விஜயம் செய்தபோது “இலங்கைக்கும் எங்களுக்கும் இடையில் 2000 வருட கலாச்சாரத் தொடர்பு இருக்கிறது. இலங்கையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம்” என்று சீனா எச்சரித்திருந்தது. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றின் மூலமாக அபிவிருத்தி, கடன், முதலீடு எனப் பலவகையான அதிகார அழுத்தங்களையும் பிரயோகிக்க முயந்று வெற்றிகண்டும் வருகிறது. ஆனால் இந்தோனேசியாவைப் போல சீன எதிர்ப்பலை இங்கு இப்போதைக்கு உருவாகும் என்ற அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.