கறுப்பு ஜூலை
தலையங்கம்
42 வருடங்கள் முடிந்துவிட்டிருக்கின்றன. நீதி, நியாயம் இன்னும் விலகியே நிற்கிறது. அணுகவேண்டியவர்கள் அக்கறையில்லாதிருக்கிறார்கள்.
உலக வரலாற்றில் இப்படிப் பல கறுப்பு மாதங்கள் நடைபெற்றுள்ளன. மக்களுக்குள் இயல்பாக எழும் சிறு நெருப்புக்களுக்கு தீனி போட்டு கொழுந்தெரியச் செய்யும் வித்தைகளை அறிந்தவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே. ஆர்மீனியப்படுகொலைகள், யூதப் படுகொலைகள் போன்றவை சமீபத்தியவை. எண்ணிக்கையில் வேறுபட்டாலும் கொடூரத்தில் எநதப் படுகொலைகளும் வேறுபடுவதில்லை. என்னதான் நினைவு கூர்ந்து அழுது புலம்பி அடுத்த சந்ததிகளுக்கு அறிவூட்டிச் சென்றாலும் அரசியல்வாதிகள் என்றொரு குலம் இருக்குமட்டும் இதை நிறுத்த முடியாது. இது ஜனநாயகத்தின் தவறு. அரசனொருவனோ, சர்வாதிகாரி ஒருவனோ எடுக்கும் முடிவுக்கும் ஆயிரமாயிரம் அரசியல்வாதிகள் தனித்தனியாக எடுக்கும் முடிவுக்கும் வித்தியாசமிருக்கிறது. ஜனநாயகம் ஒவ்வொரு அரசியல்வாதிகளினதும் கைகளில் ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. ஹிட்லருடன் ஒரு படுகொலை நிறுத்தப்பட்டது. ஜூலைப் படுகொலையும் காசா படுகொலையும் ஜனநாயகத்தின் கூட்டு முயற்சி. அதை இலகுவில் நிறுத்த முடியாது.
கறுப்பு ஜூலை உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது. 42 வருடங்கள் முடிந்தும் நினைவுகூரல் மட்டும் தான் தொடர்கிறது. அதற்கப்பால் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் ஒரு தீர்ப்பை வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இரு தரப்பினரும் மெளனம் சாதிக்கிறார்கள். அரசியல்வாதிகள் அடுத்த படுகொலைக்கான தருணத்திற்காகக் காத்திருக்கலாம். இந்நிலையில் உலகின் பல்வேறு நகரங்களிலும் பாட்டுக்கள், மேளங்கள், தாளங்களுடன் இப்படுகொலைகளை நினைவுகூரும் தமிழர்களைப் பார்க்க அருவருப்பாகவிருக்கிறது.
இன்னுமொரு இரணகளம் தவிர்க்கப்படவேண்டுமானால் பேசுங்கள். அல்லது பேசாமலிருங்கள்.
