கர்மவினை


சிவதாசன்

“கொழும்பில் குண்டு வெடிப்பை யார் செய்தார்கள் என்பது பிரச்சினை இல்லை. அதில் பலியானவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்”

Anton Balasingam
Anton Balasingam

தமிழர் கூட்டணிப் பேச்சாளர் ஒருவர் இப்படிப் பேசியிருந்தால் பொறுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது நெடுமாறன், வீரமணி,, வை.கோ, கலைஞர் பேசியிருந்தால்கூடப் பொறுத்துக் கொண்டிருக்கலாம். குறைந்த பட்சம் கனடாவின் அதி உத்தம பொன்னாடைப் பேச்சாளர்கள் பேசியிருந்தாற்கூடப் பொறுத்துக் கொண்டிருக்கலாம்.

பொறுக்க முடியவில்லையே! பேசியவர் புலிகளின் பேச்சாளர் பாலசிங்கமாச்சே!

அற்புதமான பேச்சு! ஆனால் ஒரு அரசியல்வாதியின் பேச்சு.

காமினி திசநாயகா போன்றவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதைச் சொல்ல வந்தால் அதற்கு ஏன் இப்படி ஆலாபரணம்? காமினியை நாங்கள் தான் கொன்றோம். அவர் போன்ற ஆட்கள் இரத்தக் கறை படிந்தவர்கள். இனியாவது தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முனையுங்கள் என்று புலிகளின் வீரத்தோடு அடித்துச் சொல்ல வேண்டியது தானே!

ஒரு வேளை புலிகள் ஆயுதங்களை வைத்துவிட்டு அரசியலுக்குத் திரும்பப் போகிறார்கள் இப் பேச்சு கட்டியமாக அமையப் போகிறதோ? துப்பாக்கிகளை வைத்துவிட்டு சோடாப் போத்தல்களையும் சைக்கிள் செயின்களையும் புலிகள் கையேந்தப் போகிறார்களா? கரும்புலிகள் எல்லோரும் தலைவருக்காகத் தீக்குளிக்க வேண்டும் என்று சொல்ல முனைகிறாரா?

புலிகள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. ஆனால் பாலசிங்கத்தின் இந்தப் பேச்சுக்கும் முட்டாள் தனத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது போல நாலு பேர் நாளைய சரித்திரத்தில் எழுதி விட்டால்?

நடக்கவும் கூடாது. நடக்க விடவும் கூடாது.



அப்போ இப்படியான பேச்சுக்களை அவர் பேசக் கூடாது – அதை யாராவது எழுதிக் கொடுத்தாற்கூட!

“ யாழ்ப்பணேங்கிலும் குண்டி வீச்சை எவங் செய்தாங் எம்பது பிரஸ்னே இல்லேங். இப்படீங் குண்டி வீச்சுக்களாலே எப்படிப் பட்டவங்க் செத்து போனாங் எம்பதை நாம் நெனச்சுப் பாக்கணுங்” என்று இராணுவத் தரப்பில் யாராவது கேட்டால் அதற்கு பாலசிங்கம் என்ன சொல்வார்?

இரண்டு தரப்பிலுமே அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஓரிரு மனிதர்களின் கர்ம வினைக்காக அப்பாவி மனிதர்களின் மரணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் யாழ்ப்பாணத்து மக்களிடையே கர்ம வினைகளுடன் எவருமே இல்லை என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

முடியுமா?

தாயகம் 16-12-94