OpinionSri Lanka

கருணா விவகாரம் | எப்படிச் சுழற்றப் போகிறார்கள் ராஜபக்சக்கள்?

மாயமான்

‘கொறோணாவை விட நான் மோசம்’ என்று கருணா தெரிவித்திருந்த விடயம் தொடர்பாக ராஜபக்ச தரப்பு அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக கருணா தெரிவித்திருந்த கருத்து நேற்று தென்னிலங்கை ஊடகங்களில் பிரதான செய்தியாகப் பிரசுரமாகியிருந்தது. ஆனால் அது பாதுகாப்பு படைகள் மற்றும் தீவிர சிங்கள இனவாத சக்திகளின் மத்தியில் கருணா மற்றும் விடுதலைப் புலிகள் மீதான காயத்தை மீண்டும் கிளறிவிடுவதாக அமைந்துவிட்டதோ என ராஜபக்ச தரப்பு அங்கலாய்க்கிறது எனத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் கருணாவின் பங்கு எத்தகையது என்பது விவாதத்துக்குரிய விடயமாக இருந்தாலும் போரின் பின்னான அரசியல் காய்நகர்த்தலின் மூலம் தமிழ் மக்கள் மீதான ஜனநாயகப் போரை வென்றதில் கருணாவுக்கு கணிசமான பங்குண்டு.

‘ஆனையிறவுச் சமரில் நாங்கள் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொன்றோம்’ என்று கூறும் அவரது குரலில் வந்திருக்கும் இச் செய்தி 2020 பாராளுமன்றத் தேர்தலில் எப்படியான விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பது ராஜபக்ச தரப்புக்கு தலையிடியைத் தரும் விடயமாக மாறியுள்ளது.



காரைதீவு உள்ளூராட்சிச் சபையின் தலைவர் “கருணா அம்மான் கொறோணாவைவிட மோசமானவர்” எனத் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் முகமாகக் கருணாவின் பேச்சு அமைந்திருந்தது.

ஏற்கெனவே ‘600 பொலிஸ்காரர்களைக் கொன்ற’ விடயம் தொடர்பாக, கருணாவைக் கைதுசெய்யவேண்டுமென்ற குரல்கள் தென்னிலங்கையில் பல தடவைகள் ஒலித்திருந்தன. விமல் வீரவன்ச போன்ற சிறீலங்கா பொதுஜன பெரெமுன கட்சியைச் சேர்ந்த சிலர் கருணாவுக்குப் பக்கத்தில் ஆசனத்தில் அமர மறுப்பவர்கள் என்ற செய்திகளும் முன்னர் கசிந்திருந்தன. இந்த நிலையில், கருணாவைத் தொடர்ந்து ‘பாவிக்க முடியும்’ என்ற நம்பிக்கையில் ராஜபக்ச தரப்பு இந்த அதிருப்தியாளரைச் சமாளித்துக்கொண்டு வந்திருந்தது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் கருணாவுக்குத் தேசியப்பட்டியலின் மூலம் நியமனம் கொடுத்து, உதவியமைச்சர் பதவிகளை வழங்கியதன் மூலம், அவரது பாவனைக்கு ராஜபக்ச தரப்பு பிரதியுபகாரம் செய்துவந்தது. இந்த தடவையும் ராஜபக்ச தரப்புத் தனக்கு நியமனப்பட்டியலில் இடம் தருவதாகக் கேட்டிருந்தும் தான் மக்களின் ஆணையோடுதான் பாராளுமன்றம் வருவேன் எனக்கூறி அக்கோரிக்கையை மறுத்துவிட்டதாக கருணா தெரிவித்திருந்தார். இதில் பகுதி உண்மை இருந்தாலும், இதுகூட ராஜபக்ச தரப்பின் காய்நகர்த்தலின் பிரகாரம் நடைபெறும் ஒரு விடயமாகவே பார்க்கப்பட வேண்டும்.

ராஜபக்சக்களின் காய்நகர்த்தல்

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், இந்தத் தடவை தனது சொந்த அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் குதித்திருக்கிறார். கருணாவின் சொந்த ஊரான கிரான், கல்குடா மாவட்டத்தில் அடங்குகிறது. ஆனாலும் அவர் ஏன் அம்பாறை மாவட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பது ஆச்சரியமான விடயமல்ல.

அம்பாறை மாவட்டத் தமிழ் வாக்காளர்கள் இதை ராஜபக்சக்களின் இன்னுமொரு காய்நகர்த்தலாகத்தான் பார்க்கிறார்கள்.



அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகள் 95,000. இதில் 90,000 வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறுமாயின் அதற்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புண்டு. இதனால் சிங்களப் பிரதிநிதி ஒரு ஆசனத்தை இழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். மாறாக,15,000 வாக்குகளைக் கருணாவால் பிரித்தெடுக்க முடியுமானால், கூட்டமைப்பின் ஒரு ஆசனம் சிங்களவர் ஒருவருக்குப் போய்விடும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் கருணா களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உபகாரம் எப்படியாவது கிடைக்குமென்பது கருணாவுக்கு நன்றாகவே தெரியும். எனவே, மேலுள்ள ஒலித்துண்டில் கருணா சொல்வது போல, “ராஜபக்சவின் கோரிக்கையை நான் மறுத்துவிட்டேன், மக்களின் ஆணையுடன் பாராளுமன்றம் வருவேன்” என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.

ஆனால் அத்தோடு நிறுத்தாமல் ‘கருணா கொறோணாவை விடக் கொடியவன்’ என்ற வீரப் பிரதாபம் கொஞ்சம் அதிகப்படி. இது சிங்கள இனவாதிகளினதும், இராணுவத்தினதும் ரணங்களை மீண்டும் கிளறும் விடயம். ராஜபக்சக்களின் வாக்கு வங்கியை இது சிறிதளவிலேனும் பாதிக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாசவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ, கருணா கொடுத்திருக்கும் இப் பொல்லைத் தென்னிலங்கயில் கொண்டோட வேண்டும். ஆனால் அவர்களுக்கு அந்தத் திராணியில்லை. ஜனாதிபதி தேர்தலின் போது “நான் என் உயிரைக் கொடுத்தாவது சவேந்திர சில்வாவைக் காப்பாற்றுவேன்’ என்று சொன்ன சஜித் பிரேமதாசாவுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்திருந்தும், ராஜபக்சக்கள் கருணாவுக்குக் கொடுக்கும் பிரதியுபகாரமளவுக்குக் கூட , வார்த்தையளவிலேனும் அவரால் எதையும் கொடுக்க முடியுமென்பது சந்தேகமே.

இந்த நிலையில், இப்போது இருக்கக்கூடிய உண்மையான, துணிச்சலான ‘எதிர்க்கட்சி’ மங்கள சமரவீர ஒருவர்தான். ஆனால் அவரது வாக்காளர்கள் இப்போதுதான் பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கருணாவின் இந்தப் பேச்சு, அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள வாக்காளர்களை அதிகம் பாதிக்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகள் முயன்றால் சிங்கள மக்களைக் குழப்பும் விடயமாக இத மாற்றி ராஜபக்சக்களின் வாக்கு வங்கியின் மூலமோ, நீதிமன்றங்களின் மூலமோ, கொஞ்சமேனும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தமிழ்த் தலைமைகள் இதை முற்றாக நிராகரிப்பது எப்போதுமே நன்மை பயக்கும். ராஜபக்ச தரப்பு இதை மேலும் தமிழர் மேலான துவேசமாக மாற்றிப் புதிய மொந்தையில் பழைய கள்ளைத் தென்னிலங்கையில் விற்று மூன்றிலிரண்டு இலட்சியத்தைத் துரிதப்படுத்தலாம்.