கருணா, முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 4 பேருக்கு பிரித்தானியா பயணத்தடை
இலங்கையில் நடைபெற்ற இனப்போரின்போது மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக இருந்தார்கள் எனக்கூறி நான்கு பேருக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளது. வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம், கெளரவ பா.உ. டேவிட் லம்மி மற்றும் டார்லிங்டனின் பரோனெஸ் சப்மான் ஆகியோரால் இன்று (மார்ச் 24) இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இனப்போரின் போது கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயல்கள் ஆகியன தொடர்பாக பின்வரும் நான்கு நபர்களுக்கு பிரித்தானியாவிற்குள் நுழைவதற்குத் தடையும், அவர்களுடைய சொத்துக்களின் மீதான முடக்கமும் அமுல்படுத்தப்படுமென பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சு அறிவித்துள்ளது:
1- முன்னாள் படைத்தலைவர் சவேந்திர சில்வா
2 – முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொட
3 – முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியா
4 – விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்குமாகாணத் தளபதி கருணா அம்மான்
நடைபெற்ற இனப்போரின்போது இந்நால்வரினாலும் மேற்கொள்ளப்பட்டதெனக் கருதப்படும் குற்றச்செயல்களுக்கான விசாரணைகள், தண்டனைகள் எதையும் இலங்கை அரசு இதுவரை முன்னெடுக்காத நிலையில் பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தைப் பிரயோகிக்க பிரித்தானிய அரசு இந்நடவடிக்கையை எடுத்திருக்கிறது என வெளிவிவகார , பொதுநலவாய அமைச்சின் செயலாளர் டேவிட் லம்மி தெரிவித்திருக்கிறார். இதே வேளை கடந்த ஜனவரி மாதம் இலங்கை சென்றபோது இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கதறீன் வெஸ்ட் அவர்கள் இலங்கையின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வடக்கின் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு மற்றும் உள்ளக வரி அறவீடு தொடர்பிலான தொழில்நுட்ப உதவி போன்ற பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளில் பிரித்தானியா பலவகையான உதவிகளை இலங்கைக்குச் செய்து வருவதைச் சுட்டிக்காட்டிய அதே வேளை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மூலம் சரவதேசம் மேற்கொள்ளும் பொறுப்புக்கூறல் முயற்சிகளையும் இலங்கை உதாசீனம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தவே இப்பயணத்தடை அறிவிக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
