Spread the love

மாயமான்

கொறோணாவை விட நான் ஆபத்தானவன்…” என்ற கருணாவின் பேட்டி தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இவ்விவகாரம் கருணாவைப் பாதிப்பதைவிட, தமிழ் மக்களையே பாரதூரமாகப் பாதிக்கப் போகிறது. ராஜபக்சக்களின் ‘மூன்றில் இரண்டு’ கனவை இலகுவாக நனவாக்க அவர்கள் கைகளில் நழுவி விழுந்திருக்கிறது இக் கருணா விவகாரம்.

இடறிவிழப்போகும் எதிர்க்கட்சிகள்

கருணாவின் பேட்டி குறித்து எதிர்க் கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு போர்க்கொடி தூக்கியுள்ளன. இது குறித்த சஜித் பிரேமதாச, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய மூன்றும் கருணாவின் ‘ ஆனையிறவுக் கொலைகள்’ பற்றிய விடயத்தைத் தமது தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாவிக்க முனைகின்றனர். ஆனால் ராஜபக்ச தரப்பு இவ்விடயத்தில், வழக்கம்போலவே, முந்திவிட்டது.சஜித்தினது கருதுக்கும், ஜே.வி.பி. யினது கருத்துக்கும் எதிராகக் கருணா இன்று தெரிவித்துள்ள கருத்துக்கள் இவ்விரண்டு கட்சிகளின் வாக்கு வங்கிகளை மிக மோசமாகப் பாதிக்க வாய்ப்புண்டு. கொழும்பிலிருந்து வரும் ஆங்கில ஊடகமான ‘டெய்லி மிரருக்கு’ கருணா வழங்கிய பேட்டியில், சஜித்தின் தந்தையார் ரணசிங்க பிரேமதாச அவரது காலத்தில் (ஐ.தே.கட்சி) பலமிழந்து போயிருந்த விடுதலைப் புலிகளை, ஆயுதங்களை வழங்கியதன் மூலம், மீண்டும் பலப்படுத்தினார் எனவும், அதே வேளை, ஜே.வி.பி.யினருக்கு அளித்த பதிலில், “தன்னை விட ஜே.வி.பி. யினர் அதிகமானவர்களைக் (80,000) கொன்றிருக்கிறார்கள்” எனவும் கூறியிருக்கிறார். கரூணாவின் பிளவுக்குக் காரணமானவரெனக் கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, இவ் விடயத்தில் கருத்துக்கள் எதையும் தெரிவிக்காதது, அவரது சாணக்கியமா அல்லது அவர் பற்றிய இரகசியங்கள் பல கருணாவிடம் இருக்கிறது என்பதாலோ தெரியாது.

சுழற்றல் வீரர்கள்

தனது முதலாவது பேட்டி ஒரு வார்த்தைப் பிசகு என்று இரண்டாவது பேட்டியில் கருணா விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் அத்தோடு நின்றுவிடாமல் கருணா கொடுத்திருக்கும் புதிய தாக்குதல்கள் எழுந்தமானமாக வந்தவையா அல்லது ‘சுழற்றப்பட்டவையா’ என்பதில் எனக்குச் சந்தேகங்கள் உண்டு.

ராஜப்கசக்கள் இப்படியான சுழற்று வித்தையில் கெட்டிக்காரர்கள். அவர்களது நெறிப்படுத்தல் இல்லாமல் இப்படியான விடயங்கள், அதுவும் தேர்தலுக்கு முன்னர், வருவதற்குச் சாத்தியமில்லை. தென்னிலங்கை மக்களை உணர்ச்சிவசப்படுத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற அவர்கள் எதுவும் செய்வார்கள்.பாட்டலி சம்பிக்க ரணவக்க

இதே நேரத்தில் கருணாவின் நேற்றய பேட்டி தொடர்பாக, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தி வருகிறார். ரணவக்கவின் கட்சியிந் இரகசியங்கள் எதுவும் கருணாவிடம் இல்லாவிட்டால் அதையும் ராஜபக்சக்கள் வழங்கினால், கருணாவின் மூன்றாவது பேட்டியில் அது வரும். ஆனாலும், பாட்டலி சார்ந்திருந்த நல்லாட்சி அரசின் போது ஏன் கருணாவைக் கைதுசெய்ய அவ்வரசு நடவடிக்கை எடுக்கவில்லை? பிள்ளையானைக் கைதுசெய்தவர்களால் ஏன் கருணாவைக் கைது செய்ய முடியவில்லை? இப்படியான சுழற்றல்களுடன் ராஜபக்சக்களது spin doctors இப்போது இரவுபகலாக வேலை செய்துகொண்டிருக்கவும் கூடும்.

Related:  இலங்கைக்கு சீனா, மேலும் US$ 140 மில்லியன் கடனுதவி!

ஒரு காலத்தில் ஜே.வி.பி. யினரை விடுதலை வீரர்களாகக் கொண்டாடிய சிங்கள மக்கள், அக்கட்சியை ஓரம்கட்டியதற்குக் காரணம் கருணா சொல்லும் இப் படுகொலைகள். இதை மீண்டும் சிங்கள வாக்காளர்களுக்கு நினைவூட்ட ஜே.வி.பி. யே காரணமாக அமைத்துவிட்டது.

அதே போல, ரணசிங்க பிரேமதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய விடயம் மீண்டுமொருதடவை சிங்கள வாக்காளர்களை அடைய சஜித் பிரேமதாச காரணமாக அமைந்துவிட்டார்.

கருணாவின் நேற்றய பேட்டி ஒரு வீரப்பிரதாபப் (bravado) பேச்சு என்பதைவிட முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய ஒன்றல்ல என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால் தென்னிலங்கை கட்சிகள் (சகல தரப்புக்களும்) இப்பேட்டியின் மூலம் தாம் பலனடைய எடுக்கும் முயற்சிகள் சிங்கள பெளத்த வாக்காளர்களை மேலும் ராஜபக்ச தரப்பிடம் தள்ளிவிடுவதற்கான ஆபத்து நிறையவே உண்டு என்பதை உணர்வதாக இல்லை.விடுதலைப் புலிகளின் இரகசியங்கள், உத்திகள், மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி கருணாவுக்குத் தெரிந்தவை, தென்னிலங்கை மக்கள் அறிந்து மறந்தவை, அறியாதவை எல்லாவற்றையும் ‘புதிய’ ஆச்சரியம் தரும் விடயங்களை recycle செய்து புதிய மொந்தையில் ஏற்றி ராஜபக்சக்கள் தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பார்கள் என்று நம்பலாம்.

இவ்விடயத்தை எந்தவொரு சிங்களக் கட்சியும் தமது நன்மைக்காகச் சுழற்ற முனையும்போது இவர்கள் எல்லோரது பொது எதிரியும் கருணா அல்ல, கருணா சார்ந்திருந்த விடுதலைப் புலிகள்; அவர்களை ஆதரித்த தமிழ் மக்கள் என்பது இவர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். எனவே கருணா மீது காட்டப்படும் கோபம், தமிழ் மக்கள் மீது காட்டப்படும் கோபமாகவே மாறும்; அதையே ராஜபக்சக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

கருணாவின் ஒரு சாதாரண ‘வீரப்பிரதாப’ உரை இன்று ராஜபக்சக்களின் சுழற்றும் இயந்திரத்துக்கு (spin machinery) எரிபொருளாக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு சிங்கள இனவாத ஊடகங்களை விடப் பெரும்பங்கு எதிர்க்கட்சிகளையே சாரும்.

இச் சுழற்று வித்தையில் ராஜபக்சக்கள் மீண்டுமொருதடவை வெற்றி பெறுவார்களானால் இலங்கையில் தமிழர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும்.

கருணா போர்க்காலத்தில் மட்டுமல்ல சமாதான காலத்திலும் அரசுக்குக் கிடைத்த பலமான ஆயுதம். அதைப் பாவிக்கும் விசேட பயிற்சி ராஜபக்சக்களிடம் மட்டுமே இருக்கிறது.

Print Friendly, PDF & Email