கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம்?

கன்னியாகுமரி தொகுதியின் மக்களவைப் பிரதிநிதியாகவிருந்த எச்.வசந்தகுமார் அவர்கள் ஆகஸ்ட் 28, 2020 அன்று, கோவிட் தொற்றினால் மரணமடைந்ததன் காரணமாக அங்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த ராஜிவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி-வர்தாவைப் போட்டியிட நிறுத்தும்படி சிவகங்கை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீதான மக்களின் ஈடுபாடு அதிகரிக்குமெனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஏப்ரல் மாதம் 6ம் திகதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளன்றே கன்னியாகுமரித் தொகுதிக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.

“இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் துணிச்சலான சில முடிவுகளைக் கட்சி எடுக்க வேண்டும். பிரியாங்கா காந்தி கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் கட்டாயம் போட்டியிட வேண்டும். இதனால் கட்சி பெருமளவு வெற்றியப் பெறமுடியும்” என கார்த்தி சிதம்பரம் ருவீட் செய்திருக்கிறார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி நவம்பர் 2020 இலும் இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

பிரியங்கா காந்தி தற்போது அஸ்ஸாம் மாநில தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை மூன்று கட்டங்களாக இத் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் தேயிலைத் தோட்டப் பணியாளர்களோடு மேற்கொண்டிருந்த உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அவரை மீண்டும் ஒரு தடவை பிரசாரத்துக்கு வருமாறு அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் அழைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஒரு பரபரப்பை அவர் ஏற்படுத்த முடியுமென காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றனர்.

இதே வேளை கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. வின் பிரதிநிதியாக பொன் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 2009, 2014 தேர்தல்களில் இத் தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், 2019 இல் காங்கிரஸ் கட்சியின் எச். வசந்தகுமாரிடம் தோற்றுப் போயிருந்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு பல காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் மறைந்த முன்னாள் பா.உ. எச்.வசந்தகுமாரின் மகனான விஜே வசந்தும் ஒருவர்.