கனிமொழி, ராஜா மீதான 2G ஒலிக்கற்றை வழக்கு – டெல்ஹி உ.நீதிமன்றத்தில் அக்.5 விசாரணை ஆரம்பம்
கனிமொழி, ராஜா மீதான 2ஜி ஒலிக்கற்றை வழக்கு அக்டோபரில் ஆரம்பம்

கனிமொழி, ராஜா மீதான 2G ஒலிக்கற்றை வழக்கு – டெல்ஹி உ.நீதிமன்றத்தில் அக்.5 விசாரணை ஆரம்பம்

Spread the love

2G ஒலிக்கற்றை வழங்குவதில் ஊழல் நடைபெற்றதெனக்கூறி கனிமொழி, ஏ.ராஜா மற்றும் பலர் மீது தொடரப்பட்ட வழக்கு விசேட நீதிமன்றமொன்றினால் விசாரிக்கப்பட்டு 2017, டிசம்பர் 21 அன்று நிரபராதிகள் எனக் காணப்பட்டிருந்தார்கள்.

இந்தியாவின் சீ.பீ.ஐ. (Central Bureau of Investigation) மற்றும் அமுலாக்கற் பணிப்பகம் (Enforcement Directorate) ஆகிய அலுவலகங்கள் இணைந்து இத் தீர்ப்பின் மீது மேன்முறையீடு ஒன்றைச் செய்திருந்தன. இதன் பிரகாரம், இவ்வழக்கை நீதிபதி பிரிஜேஷ் சேதி விசாரித்துக்கொண்டு வந்தார். இவர் நவம்பர் 30 இல் ஓய்வுபெறவிருப்பதால், வழக்கை இன்னுமொரு நீதிபதியிடம் கையளிக்க மேலதிக சட்டமா அதிபர் சஞ்சாய் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் மிகநீண்டகாலம் கழிந்துவிட்டது எனவும், விரைவில் அதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமெனெவும் அவர் பணித்துள்ளார்.

செவ்வாயன்று, இம் மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்ஹி உயர்நீதிமன்றம், இதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது. அக்டோபர் 5 இல் இவ் விசாரணை ஆரம்பிக்கவுள்ளது. விசாரணைகள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கப்படும்.2021 இல் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நேரத்தில் இவ் விசாரணைகளை இப்போது முடுக்கி விடுவதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என தி.மு.க. வும் பங்காளிக் கட்சிகளும் இது தொடர்பில் குற்றஞ்சாட்டியுள்ளன. தி.மு.க. தலைமையிலான அணி தமிழ்நாடு சட்டசபையைக் கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு என்பதால் அதைக் குழப்புவதற்கே இவ்வழக்கு முந்தள்ளப்பட்டிருக்கிறது என அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

Print Friendly, PDF & Email