Spread the love

கனடிய வீட்டு விலைகள் 26% மட்டில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகளுண்டு என வெறிற்றாஸ் முதலீட்டு ஆய்வு மையம் (Veritas Investment Research) எனும் பிரபல கனடிய நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்திருக்கிறது.

சந்தை நிலவரத்தை வங்கிகள் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது போலல்லாது இந் நிறுவனம் நீண்ட காலமாகச் சந்தையில் விற்கப்படாமலிருக்கும் வீடுகளின் எண்ணிக்கையுடன், சந்தையைப் பாதிக்கக்கூடிய இதர ஆபத்துக் காரணிகளையும் இணைத்துத் தமது ஆய்வுகளைச் செய்கின்றது. கோவிட் காரணத்தால் அடமானக் கடன்களைப் பின்போட்டவர்களது தவணை ஒய்வுக் காலம் விரைவில் முடிவடைய இருப்பதாலும், அதே வேளை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பாமல் இருப்பதால் ஏற்படும் நேரடிப் பாதிப்புகளான வேலை இழப்புகள், சம்பள இழப்புகள், நிறுவனங்கள் மூடப்படுதல் ஆகியவை சில ஆபத்துக் காரணிகளாகும்.

அடமானம் செலுத்துவதைப் பின்போட்டவர்களைக் குறிவைத்து வெறிற்றாஸ் நிறுவனம் தமது கணிப்பீட்டைச் செய்திருக்கிறது. அதாவது அடமானத்தைப் பின்போட்டவர்கது கடன் சுமை அதிகரிக்கும்போது அவர்கள் தமது வீடுகளை விற்பனை செய்ய முயல்வார்கள். அப்போது சந்தையில் விற்பனைக்கென இருக்கும் வீடுகள் (inventory) அதிகரிக்கும். இதனால் வாங்குபவர்கள் முண்டியடித்துக்கொண்டு அதிக விலையைக் கொடுத்து வாங்கமாட்டார்கள். இப்படியான அடமானத்தைப் பின்போட்டவர்களில் 5%,10% அல்லது 15%மானவர்கள் தமது வீடுகளை விற்பதற்குச் சந்தையில் விட்டால் ஏற்படும் தாக்கத்தை வைத்தே இந் நிறுவனம் வீட்டுச் சந்தையில் சரிவு ஏற்படும் என எதிர்வு கூறியிருக்கிறது. இப்படியான எதிர்வுகூறலை கனடாவின் அடமானைக் காப்புறுதி நிறுவனமும் (CMHC) வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email