EconomyMoneyUS & Canada

கனடிய மத்திய வங்கி சடுதியாக 0.75% வட்டிக் குறைப்பு!

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 0.50% இற்கு மேல் வரும் இரண்டாவது வட்டிக் குறைப்பு இது
கனடிய பொருளாதாரம் ஒரு அலசல்

மார்ச் 14, 2020

கனடாவின் உத்தியோகபூர்வ வங்கியான பாங்க் ஒஃப் கனடா, அதிரடி நடவ்டிக்கையாகத் தனது அடிப்படை வட்டி வீதத்தை 0.75% த்தால் குறைத்துள்ளது. சென்ற வாரம் அறிவித்த 0.50% குறைப்புக்கு மேலதிகமாக இது வருகிறது.

கொறோணாவைரஸ் நோய்த் தொற்றினால், உலக மற்றும் கனடிய பொருளாதாரங்களில் ஏற்படும் பாதிப்பை எதிர்கொண்டு சமாளிக்கவென இந் நடவடிக்கையை கனடாவின் நிதியமைச்சு மேற்கொண்டுள்ளது.

கனடாவின் நிதி நிறுவனங்கள் தமக்குள் பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்குவது வழக்கம். அந் நிதிப்பரிமாற்றம் செய்வதற்கான வட்டி வீதத்தை அரசே தீர்மானிக்கிறது. இதை Monitory Policy Interest Rate அல்லது Overnight Lending Rate நிதியுலகம் அழைக்கிறது. 1.75% மாக இருந்த இதை மார்ச் 4 இல் 0.5% த்தாலும், நேற்று மேலும் 0.75% த்தாலும் அரசு குறைத்துள்ளது. உண்மையில் ஜனவரி மாதத்தில் இதை 0.75% முதல் 1.00% வரை அதிகரிக்கும் யோசனை அரசுக்கு இருந்தது.இக் குறைப்புக்குக் காரணம் கொறோனாவைரஸ் மற்றும் சரிந்து வரும் பொருளாதாரமெனக் காரணம் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில், இயற்கைவளம் (சுரங்க வளம், எண்ணை வளம்), மற்றும் உற்பத்திப் பொருட்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இவ்வேற்றுமதியில் 85% அமெரிக்காவிற்குப் போகிறது. ஒபாமா மேற்கொண்ட அமெரிக்க எண்ணைவள சுயநிறைவு முயற்சிகளினால் கனடாவிலிருந்து எண்ணை ஏற்றுமதி வெகுவாகக் குறைந்தது. குழாய்த் திட்டங்கள் தாமதமாகியதால் அல்பேர்ட்டா எண்ணை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் அல்பேர்ட்டா எண்ணை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தியைக் குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இலாபம் குறைவானதால் பல உற்பத்தியாளர்களும், வழங்கல் நிறுவனங்களும் (Transcanada Pipelines) அமெரிக்காவுக்குத் தப்பியோடிவிட்டன. வருமானமின்மையால் புதிய முதலீட்டாளர்கள் எண்ணைப் பொருளாதாரத்தில் முதலிடத் தயங்கினார்கள். வட்டி வீதத்தை உயர்த்துவதன் மூலமே முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தலாம் என அரசு நினைத்து ஜனவரியில் அதற்கான திட்டத்தை வகுத்திருந்தது.

பெப்ரவரியில் கொறோனாவைரஸ் தாக்கம் வேகம் கொண்டெழுந்ததும், இதர உற்பத்திப் பொருளாதாரம் முடங்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. இவர்களை ஊக்குவிக்கத், தொடர்ந்தும் இயங்கவைக்க கடன் சுமைகளைக் குறைக்க வேண்டும். உற்பத்தி / ஏற்றுமதி பாதிக்கப்படும்போது பலர் வேலைகளை இழப்பார்கள். இது மோசமாகும் பட்சத்தில், தற்போதிருக்கும் 5.83% வேலையில்லார் வீதம் 7.5% வீததுக்குப் போகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அதஹ்ன் தொடர்ச்சியாக வீட்டுச் சந்தை சரியயும் வாய்ப்புண்டு. இவற்றையெல்லாம் சமாளிக்க வட்டி வீதம் குறைக்கப்பட வேண்டும். அதுவே நடந்திருக்கிறது.

இதில் இன்னுமொரு விடயம், உலக சந்தையில் எண்ணை விலையின் வீழ்ச்சி. எண்ணை உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக அறிவித்த சவூதி அரேபியாவின் முடிவினால் உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை சரியத்தொடங்கியுள்ளது. இது ஜேசன் கெனியின் அல்பேர்ட்டா மக்களுக்கு, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி. வட்டி குறைக்கப்பட்டதனால் அங்கு முதலிட எவரும் முதலிடவும் போகமாட்டார்கள்.பான்க் ஒஃப் கனடாவின் இந்த வட்டிக் குறைப்பினால் சில்லறை வங்கிகள் இலாபமடையும். அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கும் அடமானம் போன்ற கடன்களின் வட்டி வீதத்தைக் குறைக்கவேண்டுமென்பதே அரசின் எதிர்பார்ப்பாக இருந்தாலும், இச் சில்லறை வங்கிகள் உடனடியாகத் தமது வட்டிக் குறைப்பைச் செய்வதில்லை. அதை அரசும் வற்புறுத்துவதில்லை. எனவே அவர்கள் தான் இவ்வட்டி மாற்றங்களின் மூலம் அதிகம் இலாபமடைபவர்கள்.

சரிந்துபோன பொருளாதாரம் நிமிர்ந்துவர இன்னும் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம். அதுவரைக்கும் வட்டி வீதம் உயர்வதற்குச் சந்தர்ப்பமில்லை. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளிலும், இதர அதிக வட்டி முதலீடுகளிலும், தங்கம் போன்ற உலோகங்களிலும் முதலிடுவதே வழக்கம். தங்கத்தின் விலை ஏற்கெனவே ஏற்கெனவே ஏறிவிட்டது. இன்று அவுண்ஸ் C$2090 க்குப் போகிறது.

மத்திய வங்கியின் அடுத்த வட்டி மதிப்பீடு ஏப்ரல் 15 இல் வரும். அப்போது இன்றய பொருளாதார நிலையும், இனிவரப்போகும் வட்டிமாற்ற நிலவரங்கள் பற்றியும் விளக்கமாக அறிவிக்கப்படுமென எத்ரிபார்க்கலாம்.