US & Canada

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ, மனைவி சோஃபி பிரிவதாக அதிர்ச்சி அறிவிப்பு

18 வருட திருமணம் முடிவுக்கு வருகிறது

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ, மனைவி சோஃபி கிரெகுவா ட்றூடோ இருவரும் தமது மணவாழ்க்கையிலிருந்து பிரிந்துகொள்வதாக இன்று (ஆகஸ்ட் 2) அறிவித்துள்ளனர். 18 வருட இல்லற வாழ்வின் பிறகு தம் இருவரும் தம் வழியே செல்லவிருப்பதாக சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவித்திருக்கிறார்கள். இதற்கான சட்டப் பத்திரங்களில் அவர்கள் இருவரும் ஏற்கெனவே கையெழுத்துவிட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.

“பல மிகவும் கஷ்டமானதும் உரையாடல்களின் பின்னர் சோஃபியும் நானும் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளோம்” என பிரதமர் ட்றூடோ தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதே போன்று சோஃபி கிரெகுவாவும் தனது தளத்தில் இதேபோன்ற குறிப்பைப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் ட்றூடோவுக்கு இப்போது 51 வயது, மநவி சோஃபிக்கு 48 வயது. மே 2005 இல் இருவரும் திருமணம் புரிந்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு ஆண்களும் (15, 09) ஒரு பெண்ணும் (14) உண்டு. பிள்ளைகளின் நன்மைக்காக இருவரும் இணைப்பராமரிப்பாளர்களாகத் தொடர்ந்தும் இருப்போமெனக் கூறியிருக்கிறார்கள். பிரதமரின் குடும்பம் தற்போது அரச விடுதியான றிடோ இல்லத்தில் வாழ்ந்து வருகிறது. ஆனாலும் சோஃபி ஏற்கெனவே ஒட்டாவாவில் தனியான வீடொன்றுக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பிள்ளைகளின் பொருட்டு தனது பெரும்பாலான நேரத்தை சோஃபி றிடோ இல்லத்திலேயே செலவிடவுள்ளார் எனவும் அறியப்படுகிறது.

“எப்போதும் போலவே நிறைந்த பாசத்துடனும், பரஸ்பர மரியாதைகளுடனும் நாங்கள் ஒரு இறுக்கமான குடும்பமாக இருப்போம் என்பதோடு நாம் இதுவரை ஒன்றாகக் கட்டியெழுப்பிய இந்தக் குடும்பத்தைத் தொடர்ந்தும் கட்டியெழுப்புவோம். எங்கள் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக எங்கள் எல்லோரினதும் பிரத்தியேகத்தை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என இருவரும் இணையாக கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

முன்னாள் தொலைக்காட்சி அறிவிப்பாளரான சோஃபி ட்றூடோவின் அரசியல் உருவாக்கத்தில் மிகவும் முக்கியமான பங்கை வகித்தவர். அதே வேளை அவர் தனக்குப் பிடித்தமான சமூக செயற்பாடுகள், உளநலம் பேணுதல், பாலியற் சமத்துவம் போன்றவற்றில் அக்கறையுடன் செயற்பட்டு வருபவர்.

தமது பிள்ளைகள் தொடர்ந்தும் பாதுகாப்பான, பாசமான, இணக்கமான சூழலில் வளரவேண்டுமென்பதில் இருவரும் அக்கறையாக இருக்கிறார்கள் எனவும் இதந் பொருட்டு இருவரையும் பலதடவைகளில் ஒன்றாகவே காணும் பாக்கியம் கனடிய மக்களுக்குக் கிடைக்குமெனவும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் முகமாக ட்றூடோ குடும்பம் அடுத்த வாரம் முதல் ஒன்றாக சுற்றுலாச் செல்லவுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. சுற்றுலா செல்வதற்கு முன்னர் பிரதமர் ட்றூடோ நாட்டு மக்களுக்கு பிரத்தியேக அறிவிப்பொன்றைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் ட்றூடோவின் தந்தையார் பியர் எலியட் ட்றூடோவும் தாய் மார்கிரெட் ட்றூடோவும் 1971 இல் திருமணம் புரிந்து 1977 இல் பிரிந்து கொண்டவர்கள். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவரான ஜஸ்டின் டிசம்பர் 25, 1971 இல் பிறந்தார். தாயார் மார்கிரெட்டின் உளநலப் பாதிப்பு குடும்பத்தில் சீரான உறவைப் பேணவில்லை எனவும் தந்தையார் ட்றூடோவே பெரும்பாலும் பிள்ளைகளைப் பராமரிக்கவேண்டி இருந்தது எனவும் கூறப்படுகிறது. இதனால் அப்படியொரு நிலை தனது பிள்ளைகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஜஸ்டின் ட்றூடோ மிகவும் அவதானமாக இருந்தாரெனவும் கூறப்படுகிறது.

ஜஸ்டின் ட்றூடோ, காலம் சென்ற அவரது சகோதரர் மைக்கேலின் சக மாணவியான சோஃபியை 2003 இல் காதலிக்கத் தொடங்கி 2005 இல் திருமணம் செய்தார். “எங்கள் திருமணம் மிக நேர்த்தியான ஒன்று என நான் கூறமாட்டேன். எங்களுக்குள் பலவித அபிப்பிராய பேதங்கள், முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் சோஃபி எனது உற்ற ந்ண்பியாகவும், பங்களியாகவும், காதலியாகவும் தொடர்ந்தும் இருந்துவருகின்றார்” எனத் தம் வாழ்வின் சவால்கள் குறித்து 2014 இல் வெளியிடப்பட்ட தனது சுயசரிதையான ‘கொமன் கிரவுண்ட்’ என்ற நூலில் ட்றூடோ எழுதியுள்ளார். அதே வேளை “எந்தவொரு திருமணமும் இலகுவானதாக இருக்க முடியாது” என சோஃபியும் தனது 2015 இல் கொடுக்கப்பட்ட நேர்காணலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ட்றூடோ 2007 இல் அரசியலில் பிரவேசித்தார். 2008, 2011 தேர்தல்களில் அவர் மொன்றியாலிலுள்ள பப்பினோ தொகுதியில் லிபரல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.ஆனால் கனடிய பிரதமராக வருவது குறித்து அவருக்கு கொஞ்சம் சலசலப்பு இருந்தது. அரசியல் வாழ்வு எத்துணை சவால்களைக் கொண்டது என்பது பற்றி தந்தை மூலம் அவர் ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தார். “பிரதமராக வரவேண்டுமென நீ உன்னைத் வற்புறுத்தாதே. எங்கள் குடும்பம் போதுமான அளவு செய்துவிட்டது” எனத் தநது தந்தையார் கூறியதாக ஜஸ்டின் ட்றூடோ தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். பிரதமராக வருவதிலிருக்கும் சவால்கள் குறித்து சோஃபி அறிந்திருந்தாரெனவும் குழந்தைகளைப் பாதிக்குமென்பதால் அவருக்கு அதில் அதிக நாட்டமில்லை எனவும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியிருந்தும் ஜஸ்டின் ட்றூடோவின் அரசியல் அபிலாட்சைகள் நிறைவேறுவதற்கு சோஃபி மிக முக்கியமான தூணாக இருந்திருக்கிறார் என்பதை ஜஸ்டின் ட்றூடோ தனது சுயசரிதையில் நினைவுகூர்கிறார். (Image Credit: CBC)