கனடிய பிரதமருக்கு கொரோணா தொற்று

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவிற்கு கொறோணா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அவரது குழந்தை ஒன்றிற்கு கொரோணா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்ற வாரம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவரது இரண்டாவது குழந்தை ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்ததால் தான் வீட்டிலிருந்துகொண்டே பணிகளைப் புரியவுள்ளதாக பிரதமர் ட்றூடோ அறிவித்திருந்தார். தற்போது அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ட்றூடோவின் மனைவியார் சோஃபீ கிரெகுவார் ட்றூடோ மார்ச் 2020 இல் கொறோணா தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.

“நானும் எனது குடும்பமும் எதிர்நோக்கும் இச்சவால் பெரிதெனினும் புதுமையான ஒன்றல்ல. பெரும்பாலான கனடியர்களும், உலக மக்களும் இப்படியான சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். பூரண குணமாகும்வரை வீட்டிலிருந்தே பணிபுரியவுள்ளேன் ” என பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளைக் கடந்த வருடம் பெற்றிருந்த பிரதமர் இந்த மாத ஆரம்பத்தில் ஊக்கி ஊசியையும் பெற்றிருந்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் தடுப்பூசிக்கு எதிரான கனடிய பாரவண்டி ஓட்டுனர்கள் கடந்த வார இறுதியில் ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தால் பாதுகாப்புக் கருதி பிரதமரும் அவரது குடும்பமும் றிடோ கோடைவாடிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது வாகனங்களிலுள்ள ஒலி எழுப்பிகளை (horns) இடைவிடாது ஒலித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இன்றும் (திங்கள்) தொடரும் இவ்வார்ப்பாட்டத்தின் காரணமாக கநடாவின் தலைநகரிலுள்ள பெரும்பாலான வீதிகள் முடக்கப்பட்டுள்ளன. கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியைத் தவிர்ந்த ஏனைய பெரும்பாலான கட்சிகள் இவ்வார்ப்பாட்டத்தைக் கண்டித்துள்ளன.