கனடிய தேர்தல் 2021 – ட்றூடோ மீண்டும் வருவாரா?


ஒரு ‘விதமான’ பார்வை

சிவதாசன்

கனடிய மத்திய அரசுக்கான தேர்தல்கள் செப். 20 நடக்கவிருக்கிறது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடிவிட்டன. இன்னும் இரண்டு கிழமைகள் இருக்கின்றன. வாக்காளர் மனநிலை எப்படி இருக்கிறது? ‘தேர்தல் மன்னன்’ ட்றுடோ மீண்டும் வருவாரா?

2019 இல் ட்றூடோ இரண்டாவது தடவையாக ஆட்சியைப் பிடித்தபோது அவர் எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. அதற்குக் காரணம் அவர் வழமை போலக் கை நிறையக் குற்றச்சாட்டுகளைக் கொண்டு திரிந்தார். அவர் சம்பந்தப்படாவிட்டாலும் அவரது பரிவாரங்களில் ஏதாவது ஒன்று சிக்கலைக் கொழுவிக்கொண்டு வந்துவிடுவதுணடு. அவரது நெருங்கிய நண்பரும், ஆலோசகருமான ஜெரால்ட் பட்ஸ், பிரதமர் அலுவலகத்தைக் கிட்டத்தட்ட ஒரு ராஜபக்ச அலுவலகம் மாதிரியே நடத்தினார். My way or high way என்பதாக அவரது அணுகுமுறை இருந்தது என்கிறார்கள். ஆனால் அவர்தான் ட்றூடோவின் ‘பிரஷாந்த் கிஷோர்’ ஆகவிருந்து லிபரல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தவர். எனவே அவரில் விசயம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டேயாகவேண்டும்.

இப்போது பட்ஸ் வெளியில் என்றாலும் ட்றூடோ அவரை முற்றாக வெட்டி விட்டார் எனக் கூற முடியாது. பின்னணியில் அவர் வேலை செய்கிறார் போலத் தெரிகிறது. எனவே ட்றூடோ இந்தத் தடவையும் ஆட்சி அமைப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ட்றூடோ இத் தேர்தலைத் தேவையில்லாமல், அவசரப்பட்டு அறிவித்து விட்டார். கொறோணா கொடுத்த அதீத தன்னம்பிக்கை காரணமாக இருக்கலாம். வரவுக்கு மேலாக அள்ளி இறைத்து கொறோணாவின் வாயில் கொட்டிய டால்ர்கள் எப்படியோ குடிமக்கள் பைகளில் வந்து சேர்ந்ததால் அவர்கள் மாமன்னரை வாய் கிழியப் போற்றுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்னும் இரண்டு கிழமைகள் இருக்கின்றன.

இந்தத் தடவை ட்றூடோவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் மூன்று வழிகளில் வந்திருக்கிறது. ஒன்று: கொறோணா. தேவையில்லாத அரசியல் கூட்டங்களைத் தவிர்த்து குடிமக்களை வீடுகளில் முடக்கி வைத்திருக்கிறது. இணைய வழி அல்லது தபால் வழி வாக்களிப்பில் பலர் கலந்துகொள்வது சந்தேகம். அப்படிக் கலந்துகொள்பவர்கள் பலர் ‘இளைய ‘ தலைமுறையினராகவே இருப்பர். அவர்கள் பெரும்பாலும் ட்றூடோ விசிறிகள்.

இரண்டாவது எதிர்க்கட்சித் தலைவர் எரின் ஓ’ரூல். இதுவரை தேர்தலில் நின்ற கட்சித் தலைவர்களில் மக்களால் அதிகம் அறியப் படாதவர் எனவும், முகவசீகரம் இல்லாதவர் எனவும் வாக்காளர் கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர். ஆனால் அவருக்கு முந்திய தலைவர் ஆண்ட்றூ சியர் போலல்லாது ஓரளவு நாட்டு நடப்பு விவகாரங்களை அறிந்தவர்; நேர்மையானவர்; காலநிலைக் கோளாறுகள், கருத் தடை, ஒருபாற்சேர்க்கை விடயங்கள் ஆகியவற்றில் தீவிர வலதுசாரிப் போக்கைக் கடைப்பிடிக்காதவர். இதனால் அவரது கட்சி ஆதரவாளர்களே அவரை ஒதுக்கவும் தயாராகலாம். இதையறிந்த ட்றூடோ குழுவினர் தொடர்ந்தும் மேற்படி விடயங்களைக் கொண்டு அவரை வம்புக்கிழுத்து அவரது ஆதராவாளரிடமிருந்து அவரை அன்னியப்படுத்த முயல்வதும் தெரிகிறது.

மூன்றாவது: ட்றூடோ: எப்படியான ஆளாக இருந்தாலும் அவரது ‘இடது’ சார்பான கொள்கைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கனடாவை ஒரு மதிப்பான இடத்தில் வைத்துள்ளதையும், சர்வதேச அரங்குகளில் மிகவும் ஆர்வத்தோடு அவதானிக்கப்படும் ஒரு தலைவராக ட்றூடோ இருப்பதும் கனடிய மக்களுக்கு திருப்தி தரும் ஒரு விடயம். அதை மாற்றுவதற்கேற்ற தலைவர்கள் எவரும் எதிர்க் கட்சிகளில் இல்லை. எனவே ‘சரி பெடியன் பிழை விட்டிட்டான் தான் ஆனால் வேற யாருக்குப் போடுறது’ எனப் பலரும் அவருக்கே வாக்களித்து மீண்டும் ஒரு தடவை அரியாசனத்தில் இருத்துவார்கள் எனவே படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னணியில் இருந்தது. ஆனால் மீண்டும் அது தனது இரண்டாவது நிலைக்கு உடனேயே திரும்பி விட்டது. கன்சர்வேட்டிவ் கட்சி முன்னணிக்குப் போனதுக்குக் காரணம் அதன் மீதான திடீர் பாசமல்ல, மாறாக ட்றூடோ மீதான அதிருப்தி. ஆனால் நாள் போகப் போக கன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் – குறிப்பாக துப்பாக்கிகள் வைத்திருப்பது, முகக் கவசம் அணிய மறுப்பது, தடுப்பூசி எடுக்க மறுப்பது, ஒருபாலின எதிர்ப்பு போன்ற விடயங்களில் பொதுவிடங்களில் நடந்துகொள்ளும் அருவருப்பான செயல்கள் – ட்றூடோ அதிருதியாளர்களை மீண்டும் ‘திருப்தியாளர்களாக’ மாற்றிவிட்டிருக்கலாம்.

ஓ’ரூல் ஒரு நல்ல மநிதர். தேர்தல் பிரச்சாரங்களில் அவர் ஒரு ஒழுக்கவாதியாகவும், அதிகம் சல சலப்பை ஏற்படுத்தாதவராகவும் நடந்து வருகிறார். இதனால் 2019 ஐ விட அவரது கட்சி அதிக ஆசனங்களைப் பெறலாம்.



ஜக்மீட் சிங் தலைமையிலுள்ள என்.டி.பி. கட்சிக்கு , ஜாக் லெய்ட்டன் தலைமையில் இருந்த காலமே உச்சமான காலம். அந்த நிலைமைக்கு அக் கட்சி இனிமேல் ஒருபோதும் வர முடியாது. இறுக்கமான இடதுசாரிக் கொள்கைகளால் கை, கால்களைக் கட்டிவிட்டு ஒரு வலதுசாரிக் குளத்தில் நீந்த விடப்பட்ட கட்சி அது. அது ஒரு அரசியல் கட்சியாக இருப்பதை விட ஒரு செயற்பாட்டாளர் சங்கமாகவே இருந்து வருகிறது. அக் கட்சியில் பல நல்ல தலைவர்கள் வந்து மறைந்து போனதற்கு இந்த ‘புலி வாலைப் பிடித்த’ நிலைமையே காரணம்.

பசுமைக் கட்சி? உட்கட்சிக் குடுமிச் சண்டையை முடிப்பதற்குள் அதில் இருக்கும் மீதமுள்ள உறுப்பினர்களும் ட்றூடோ காலில் விழுந்து விடுவார்கள். அதன் தலைவர் அனாமி போலின் தோற்றம் ஒரு சூழல் செயற்பாட்டாளர் போன்ற பிரமையை எனக்குள் ஏற்படுத்த மறுத்துவிட்டது. பாரிஸ் மாடல்கள் ஒய்யாரமாக இடுப்பசைக்கும் ‘ரன்வேயில்’ நடந்துவரும் ஒருவராகவே எனக்குப் படுகிறார். இந்தத் தடவை அவரோ அவரது கட்சியோ பாராளுமன்றம் போக முடியாமல் போனால், அதுவும் இயற்கையின் கோர தாண்டவங்கள் அடிக்கடி நிகழ்ந்துவரும் இக் காலத்தில், அதற்கு அக் கட்சியே பொறுப்பு.

கியூபெக் கட்சியான புளக் கியூபெக்குவா தனது கோட்டையைத் தக்க வைக்கும். பொதுவாக கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த ட்றூடோவுக்கு அது எப்போதும் விசுவாசமாக இருக்கும். எனவே அதை ஒரு ட்றூடோ சைட் கிக் ஆகவே பார்க்க வேண்டும். இருப்பது தெரியாத கட்சியாக இருந்தாலும் அதற்கான இட ஒதுக்கீடு எப்போதும் இருக்கும்.

இன்னுமொரு விடயம். கனடிய பெருஞ்சமூகச் சூழல் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு முடிசூட்டி வைத்து அழகு பார்க்கும் நிலைமைக்கு இன்னும் தயாராவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பிரதமராக உசால் டொசாஞ் என்னும் இந்திய வம்சாவளியினர் பதவியேற்றபோது “எவருமே விரும்பாத பதவி அவருக்குப் போகிறது” ( here goes a job that no one wants) என்னும் சாரத்தோடு பல துவேஷமான விமர்சனங்கள் வந்திருந்தன (அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லாத காலம்).

முடிவாக, இது ஒரு தேவையற்ற தேர்தல். முகநூல், வட்ஸப், இன்ஸ்ராகிராம் பார்க்காத எவருமே இதை இலகுவாகக் கூறிவிடுவார்கள். அப்படியிருக்க ட்றூடோ இவ் விஷப் பரீட்சையை எடுத்திருக்கிறார். அதற்கான உறுதியான காரணங்களைக் கூற முடியாமல் அவர் திக்கு முக்காடுவது தெரிகிறது. மக்களுக்கு அது விளங்குகிறது. ஆனால் கொறோணா அம்மையார் அவருக்குத் தேவையான சகல கடாட்சங்களையும் கொடுத்து வருவதால் ஒருவாறு கரையேறிவிடுவார் எனவே தெரிகிறது. ஆனாலும் என்.டி.பி. எந்ற ஒக்சிசன் சிலிண்டரை அவர் தொடர்ந்தும் காவித் திரியவேண்டியது ஒரு காலத்தின் கண்டிசன்.

ஒருவேளை 2019 ஐ விட மேலும் ஆசனக்கள் குறைந்தால் ட்றூடோ மீண்டும் வாத்தித் தொழிலுக்குப் போவாரா? பார்ப்போம், இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன. எல்லாம் வல்ல ‘ அவ’ தான் தீர்மானிக்க வேண்டும்.