ArticlesColumnsசிவதாசன்

கனடிய தேர்தல்: ஷரியா தப்பா?

சிவதாசன்

சிறுநீரில் அமிழ்ந்துகொண்டிருந்த ஹார்ப்பரை நிக்காப் கயிறை எறிந்து காப்பாற்றியிருக்கிறார் கங்காரு நாட்டிலிருந்து வந்த [wp-rss-aggregator]மதியுரைஞர். பழைய சரக்கில் விஷ(ய)மிருக்கிறது தான்.

மஹிந்தரின் சோதிடரிடம் ஆலோசனை கேட்டிருப்பாரோ தெரியாது.

பில் 24 ஐக் (Bill C24) கொண்டு வந்து ‘பழைய சரக்கு’ (Old Stock) வெள்ளையர்களயும் ‘புதிய சரக்கு’ (New Stock) பன்னிற மக்களையும் பிரிக்க முயற்சித்தார். (இந்த மசோதாவினால் ஏகப்பட்ட தமிழர்கள் இரவோடிரவாக வெள்ளையர்களாகிவிட்டது இப்போது தான் அம்பலத்திற்கு வருகிறது). தனது சட்டத்திற்குப் பல்லிருக்கிறது எனக் காட்டுவதற்கு ரொறோண்டோ 18 கனடியர் (Toronto 18) சிலரை நாடு கடத்தப் போவதாக ஸ்டன்ட் வேறு அடித்திருக்கிறார்.

ஹார்ப்பரின் இஸ்லாமிய எதிர்ப்பு பாணங்கள் எல்லாத்திக்குகளிலும் பறக்கின்றன. நாடு இஸ்லாமிய முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கிறது என பழைய சரக்கினர் நம்பவாரம்பித்திருக்கிறார்கள்.

இதற்குள் ‘மஹா’ அலக்சாந்தரின் அறிக்கை வேறு அசத்துகிறது. சென்ற வாரம் அவரது தொகுதியில் பிள்ளாயாருக்குப் பால் பருக்கிவிட்டு வந்தவர் இந்த வாரம் அறிக்கை விட்டிருக்கிறார் “ உங்கள் அயலவர்கள் காட்டுமிராண்டித்தனமான கலாச்சார வழக்கங்களைப் (barbaric cultural practices) பின்பற்றினால் உடனே பொலிசுடன் (ஆர்.சி.எம்.பி) தொடர்பு கொள்ளுங்கள்” என்று.

இவரது அறிக்கைப்படி தமிழர்கள் இனி சாரங்களையோ வேட்டிகளையோ சேலைகளையோ அணிந்துகொண்டு வெளியே நடமாட முடியாது.  பொட்டு, பூ, வீபூதி எதையும் அணிந்துகொண்டு வெளியே போகவே முடியாது.

சில வருடங்களின் முன்னர் தான் அப்போதய கன்சர்சவேட்டிவ் கட்சி குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி பிரம்டன் நகரில் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்களைத் தத்தம் கலாச்சார  ‘காட்டுமிராண்டி’ உடைகளை அணிந்துகொண்டு வருமாறு பணித்திருந்தார்.

என்னதான் இருந்தாலும் கன்சர்வேட்டிவ் உடுக்குகளுக்கு பலம் அதிகம் தான். விரல் பட்டாலே வேகமாக ஆடுவதற்கு சனங்கள் முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

மைக் டபியின் (Mike Duffi) வழக்கு செனட் சபை ஊழலுக்கு உரமேற்றி வந்தது. ஹார்ப்பர் கால அவகாசத்தை வாங்கி டபி வழக்கைத் தள்ளி விட்டார். ஆனால் நிக்காப் விவகாரத்தை ஓய விடாது எண்ணை ஊற்றிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருக்கக்கூடிய ஒரே ஆயுதம் இப்போதைக்கு இஸ்லாம் தான்.

தான் ஆட்சிக்கு வந்தால் கியூபெக் மாகாணத்தைப் போல அரச உத்தியோகத் தலங்களில் பணி புரிவோர் மத அடையாளங்களை அணியமுடியாது எனச் சட்டம் கொண்டு வருவேன் எனச் சூளுரைத்திருக்கிறார். இந்த விடயத்தில் மக்கள் தம் பக்கமே இருக்கிறார்கள் எனத் திட்டவட்டமாக நம்புகிறார்.

ஹார்ப்பர் மூட்டிய இந்த இஸ்லாமிய தீ ஒரு காட்டுத் தீயாக மாறுமா அல்லது வெறும் குளிர் தீர்க்கும் கூடாரத் தீயாக காலையாகியதும் அணைக்கப்பட்டுவிடுமா என்பதுதான் கேள்வி.

இதைத் தீர்மானிப்பதில் இர்ணடு மாகாணங்களுக்குப் பாரிய பங்குகளுண்டு.

கனடிய பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைத் தரும் மானிலங்கள் ஒன்ராறியோவும் (121) கியூபெக்கும் (78). ஒன்ராறியோவில் 72% ‘பழைய சரக்கினர்’ (old stock வெள்ளையர்). கியூபெக்கில் 82% பழைய சரக்கினர். இவர்கள் எல்லோரதும் பொது எதிரி இஸ்லாம். அத்தோடு ‘புதுச் சரக்கினரிலும்’ இஸ்லாமிய எதிர்ப்பு வாதிகள் கணிசமாக இருக்கின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் ஹார்ப்பர் நிக்காப்பை எடுத்துச் சுழற்ற ஆரம்பித்திருக்கிறார். காளைகளை அடக்குபவர்கள் அவற்றின் முன்னால் சிவப்புத்துணியைப் பிடித்து அவற்றை மூர்க்கம் கொள்ள வைப்பதுபோல் ஹார்ப்பர் நிக்காப்பைப் பிடித்து வாக்காளரை உசுப்பேத்துகிறார்.

இந்த வேளையில் ஏனைய கட்சிக் காரரும் இந்த் நிக்காப் சுழற்றலுக்குள் அகப்பட்டுப் போவதுதான் விநோதம். இவர்கள்து மூக்கணாங் கயிறு நிக்காப் வடிவத்தில் ஹார்ப்பரிடம் மாட்டியிருக்கிறது. விடுவித்துக் கொள்ளத் தவிக்கிறார்கள்.

புள்ளி விபரமும் ஹார்ப்பர் மீதுதான் தொங்கிக் கொண்டிருக்கிறது. கனடாவின் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் வந்திருக்கிறது.

கனடிய சட்டமா அல்லது ஷரியாவின் சட்டமா உங்களுக்குத் தேவை என்று ஹார்ப்பர் கூவும் போது நிறையக் காதுகள் வளைந்து கொடுக்கின்றன.

மூன்றாம் இடத்திலிருந்த ஹார்ப்பர் நிக்காப்பைப் பிடித்து ஏறி முதலாமிடத்துக்கு வந்துவிட்டார்.

ஹார்ப்பரைத் தவிர்க்க ஒரே வழி தந்திரோபாய வாக்களிப்பே கைதரும் என்கிறார்கள் மேதைகள்.

யாருக்காக யாரைப் பலியிடுவது?

வாக்குகளுக்கு இன, மத, மொழி சாயங்களைப் பூசாது பயன்படுத்தினால் அடையாளமற்ற ஆட்சியொன்றை அமைக்கலாம்.

சென்ற தடவை ஹார்ப்பரை வெல்ல வைத்தது ஒன்ராரியோ மாகாணம் தான். இக்நாற்ரியெவ் என்ற தனி மனிதரினால்தான் (லிபரல் கட்சி) அது சாத்தியமானது.

இந்த தடவை அப்படியல்ல. புதிய கனடியர் அதிகமாக வாழும் நகர்ப்புற வாக்குகள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிடைக்காது. ஹார்ப்பரின் ‘புதுச் சரக்கு’, ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ விவகாரங்கள் கட்சியின் நகர்ப்புற வேட்பாளர்களையே கொதிக்க வைத்துள்ளன.
ஹார்ப்பர் நம்பிக்கொண்டிருக்கும் காற்றலை வாக்குகள் பெட்டிக்குள் வந்திறங்குமா என்பதில் எனக்குச் சந்தேகம்.

தென்னாசியர்களைப் பொறுத்த வரையில் வாகனம் கிடைத்தால் வாக்குகள் நிச்சயம். தொரோன்ரோ பெரும்பாகத்தில் ஹாப்பரின் கட்சிக்காரர் அச்சமுற்றிருப்பது தெரிகிறது.யார் வந்தாலும் பரவாயில்லை ஹார்ப்பர் வரக்கூடாது என்பதுவே தாரக மந்திரமாக இருக்கிறது.

என்.டி.பி. கட்சிக்கு டி.பி.பி வர்த்தக ஒப்பந்தம் ஒரு சிறு ஊட்டத்தைக் கொடுத்தாலும் அதை மக்கள் புரிந்துகொள்ள அவகாசம் கொடுக்காமல் ஹார்ப்பர் தந்திரோபாயமாக நடந்து கொண்டிருக்கிறார்.
மூன்று கட்சிகளும் சம நிலையில் நிற்பது இறுதி நாட்களில் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். அந்த வேளைகளில் தந்திரோபாய வாக்களிப்பை நோக்கி மக்கள் தள்ளப்படுவார்கள்.

தமிழர்களது வாக்குகளின் பலம் பல தடவைகள் உணரப்பட்டுள்ளது. இந்தத் தடவையும் அதுவே தான்.

சுய அடையாளத்தை நிரூபிக்கவென வாக்களிக்க மறுத்த கனடிய சுதேசிகளைக் கைவிட்டதுபோல் நமக்கும் நேர்ந்துவிடக் கூடாது. எமது வாக்குகளே எங்கள் பலம்.

சதியை மதியால் வெல்ல முடியும்!