ColumnsUS & Canadaசிவதாசன்

கனடிய தேர்தல் | யாருக்கு வாக்களிப்பது?

சிவதாசன்

அக்டோபர் 21 கனடிய தேர்தல்கள் நடைபெறப் போகின்றது. சிறு வயதிலிருந்தே தேர்தலை ஒரு திருவிழாவாக, கொண்டாட்டமாகப் பார்த்த, அனுபவித்த பழக்கம் விட்டுப்போவதாகவில்லை. ஏன், எதற்காக என்பதெல்லாம் இரண்டாம் பட்சம், எனது கட்சிக்காரர் வென்றால் சரி என்கின்ற ஒருவிதமான போதை.

ஊரில், தமிழரது உரிமைகளை வென்றெடுக்கவெனக் கட்சி போராடியது. எந்த உரிமைகளை எப்போது இழந்தோம், எப்படி இழந்தோம் என்றவொரு கோதாரிகளுக்கும் விளக்கம் தெரியாது, ஆனால் ஒப்புவிக்கப் பழக்கப்பட்டோம். இனம், மொழி என்று சுயமாக ஏற்றிக்கொண்ட போதையில் நித்திய தொண்டர்களாக, நாயகர்களை மேலமர்த்தித் தேர்தல் தேர்களைத் தெருத் தெருவாய் இழுத்துச் சென்றோம். வெற்றிக்கு மறுநாளே மறக்கப்பட்டாலும் அடுத்த பருவத்திற்கும் அணி வகுத்து நின்றோம்.

வயது மூன்றாம் காற்பகுதியில் நிற்கின்றபோதும் கனடாவிலும் அதே போதை, அதே தேர், அதே இழுவை, அதே மறப்பு, அடுத்த பருவத்தில் அதே அணிவகுப்பு ஆனால் நாயகரோ, நாயகியோ மாறியிருப்பர் அவ்வளவுதான்.

நேற்று வீட்டு வாசலால் வெளியே வர ஒரு இளைஞர் சிரித்தபடி வந்தார். கொஞ்சம் குளிர் போதுமான ஆடையும் அணியவில்லை. தயங்கித் தயங்கி ஆங்கிலத்தில் ‘நான் மேரி எங்க் பிரச்சார அலுவலகத்திலிருந்து வருகிறேன். நீங்கள்’ …என்று தொடங்க, நான் இடை மறித்து நாளை வாக்களிக்கப் போகிறேன் என்றேன். உங்கள் வாக்கு எங்களுக்குத் தானென்று நான் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டார். ஒருவாறு சிரித்து அனுப்பி விட்டேன். ஒரு காலத்தில் என்னைப் போன்று, நிறை போதையில் (தேர்தல்) வந்திருப்பார் போல. ஓடி ஓடி அயல் வீடுகளுக்கும் சென்றார்.

நான் என் மீது பரிதாபப்பட்டது போலவே அவர் மீதும் பரிதாபப்பட்டேன். தேர்தல் பணிகளால் இவருக்கு எந்தவிதமான பலனும் இல்லை. சில வேளைகளில் பிட்சா, காப்பி இவற்றைத் தவிர. தேவ சபைக்கு ஊழியம் செய்பவர்களைப் போல பயபக்தியோடு நெளிந்து வளைந்து எனது வாக்கைப் பெற்றுக் கொடுப்பதற்காக இவருக்கு இலவச சாப்பாட்டையும், குளிரும் மன உணர்வையும் தவிர எதுவும் கிடைக்கப்போவதில்லை. இவரால் வெற்றிபெறப்போகும் நாயகிக்கு சம்பளம், வாய்ப்பு, வசதிகள் எல்லாமுண்டு. நல்ல ஓய்வூதியமுமுண்டு. எல்லா நாயக நாயகிகளுக்கும் இது தான் கதை.

இக் கதை சர்வதேச ரீதியானது. மண்ணைச் சொல்லியோ, மொழியைச் சொல்லியோ, மதத்தைச் சொல்லியோ, குலம், கோத்திரம், சாதியென்று எதையோ சொல்லிக்கொண்டு தொண்டர்களைத் தேடி அரசன் அல்லது நாயக நாயகிகள் பல நூறு வருடங்களாக வந்துகொண்டுதானிருக்கிறார்கள். இது முடியும் கதையல்ல.

கனடிய அரசாங்கம், எனக்கோ அல்லது எனது சமூகத்துக்கோ, இங்கேயோ அல்லது அங்கேயோ, எதையாவது செய்து கிழித்து என்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென்ற சுயநலத்தைத் தவிர, இதில் எனக்கு வேறொன்றும் இல்லை. அதை யார் செய்வார்கள், எந்தக் கட்சி செய்யும் என நம்புவதில் நமக்குள் வேறுபாடிருக்கலாம்.

எல்லாக் கட்சிகளும் வாக்காளரின் விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் நல்லுணர்வுப் பொதிகளை அள்ளி வீசுகிறார்கள். பெரும்பாலானவற்றுக்குள் எதுவும் இருப்பதில்லை. அடுத்த தவணையும் அவற்றையே தூசிதட்டி மீண்டும் வீசுவார்கள். பொதிகளின் லேபல்களைப் பார்த்துப் பரவசமடைந்து வாக்களித்து நாயக நாயகிகள் வென்றவுடன் உச்சி குளிர்ந்து திரும்பவும் அடுத்த தவணைக்காய்க் காத்திருக்கும் serial அரசியல் நம்மை விட்டுப் போகப் போவதில்லை. இவன் சரியில்லாவிட்டாலும் அவன் வரக்கூடாது எனவே இவனைக் கரை சேர்த்துவிடவேண்டுமென்ற அரசியல் நமக்கு மட்டுமானதல்ல. இது சமூகமாகச் சிந்திப்பவர்களின் தர்க்க அரசியல். இது இப்படித்தான் இருக்கும்.

புதிய குடிவரவாள சமூகங்கள் பலம் பெறும் மட்டும் பெரும் சமூக நாயகர்கள் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. கண்டுகொண்டதும் இனப்படுத்தப்பட்ட சமூகங்கள் (racialized communities) என்ற லேபல்களோடு கண்ணீர் மல்க எமது குறைகளெனக் கொஞ்சத்தை அடுக்கிக்கொண்டு எங்களிடம் வருவார்கள். எம்மிடையேயுள்ள பேசத் தெரிந்த சிலர் தலைப்பாகைகளுடன் instant தலைவர்களாக உருவாகிச் சமூகமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். இறுதியில் நாம் ஏன் அடுத்தவனை… என்ற எண்ணம் தலைக்கேற நம்மவரும் நாயகராகிவிடுவார். தமிழன் வாக்குகள் தமிழனுக்கே என்று தொண்டரடிப்பொடிகள் கதவு தட்ட ஆரம்பித்துவிடுவர். இப்படியொரு ‘பொடியனாக’ நானும் ஒரு காலத்தில் இருந்தவன்.

எனது நண்பர்கள் பலர் இவ் விடயத்தில் கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். கட்சி, கொள்கை என்பதை வைத்துத் தான் வாக்களிக்க வேண்டும். தகுதியான நம்மவர் இருந்தால் சரி. தகுதியற்ற நம்மவரை நிராகரிக்க வேண்டும் என வாதாடும் போது மனம் கூசுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

தகுதியான நம்மவர் ஒருவர் சபைகளில் பிரகாசிக்கும்போது அது எமது சமூகத்தின் மீது பாய்ச்சப்படும் ஒளி எனவே நான் நினைப்பதுண்டு. அதே வேளை தகுதியற்றவர் சமூகத்தின் மேல் கொண்டுவரக்கூடிய அவமானத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்ட அரசியலுக்குப் பழக்கப்பட்ட நமது சமூகம் தகுதிக்கு முன்னர் அடையாளத்தைக் கண்டு பரவசமடைவதை நிறுத்த இன்னும் இரண்டு தலைமுறைகள் போகவேண்டும்.

2019 கனடிய மத்திய தேர்தலில் எமது சமூகத்திலிருந்து நால்வர் தேர்தலில் குதித்துள்ளனர். இருவர் கன்சர்வேட்டிவ் கட்சி, ஒருவர் லிபரல் கட்சி, ஒருவர் மக்கள் கட்சி. மக்கள் அடையாளத்துக்காகவா அல்லது கொள்கைகளுக்காகவா வாக்களிக்க வேண்டுமென்று நான் யாரையும் வற்புறுத்தப் போவதில்லை. ஆனால் கட்சிகளின் கொள்கைகள் மீதான கருத்துக்களைப் பதிய விரும்புகிறேன்.

இந்த நாடு 1960 கள் வரையில் ஒரு இனத் துவேசம் மிக்க நாடு. படிப்படியாக மனிதரைச் சமமாக மதிக்க வேண்டுமென்பதைச் சட்டங்களின் மூலம் கொண்டு வருவதில் முன்னின்றுழைத்தது லிபரல் கட்சி. பல சமூகநலத் திட்டங்களைக் கொண்டுவர அழுத்தங்களைக் கொடுத்தது புதிய ஜனநாயகக் கட்சி. சமீப காலங்களில் சுற்றுச் சூழல் விடயங்களில் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்குக் காரணமாகவிருந்தது பசுமைக் கட்சி. கன்சர்வேட்டிவ் கட்சி புதிய குடிவரவாளருக்கு எதிரான கொள்கைகளையே எப்போதும் கொண்டிருந்தது. இப்போதும் அப்படித்தான்.

கன்சர்வேட்டிவ் கட்சி, பெயருக்கேற்றபடி பழைமைவாதத்திலேயே மூழ்கிக்கிடக்கும் கட்சி. உலகம் உருண்டு வெகுதூரங்கள் வந்த பிறகும் இன்னும் தட்டையெனவே நினைத்துக்கொண்டிருக்கும் கட்சி. 1928 முதல் 1971 வரை இறங்கு துறையாகவிருந்த ஹலிஃபக்ஸ் ‘பியெர் 21’ மூலம் முண்டியடித்து வந்த 1.5 மில்லியன் ஐரோப்பிய குடிவரவாளரை ‘ஓல்ட் ஸ்டாக்’ (old stock) என்றும் கியூபெக் எல்லையால் வரும் புதிய குடிவரவாளரை ‘இர்ரெகுலர் இம்மிகிரண்ட்ஸ்’ (irregular immigrants) என்று லேபல் ஒட்டும் கட்சி.

கனடா பல்கலாச்சார நாடாகிப் பல தசாப்தங்களாகிவிட்டன. இப்போது இது ‘நியூ ஸ்டாக்’ குகளின் நாடு. கன்சர்வேட்டிவ் கட்சி நடப்புலக விழுமியங்களை அனுசரித்துக்கொள்ள வேண்டும். ‘இமிகிரேசன்’, ‘கிரைம்’, ‘டெபிசிட் றிடக்சன்’ போன்ற வார்த்தைகளைக் கிளிப்பிள்ளை போல ஒப்புவிப்பதை விட்டுவிட்டு நாட்டை முன்னேற்றும் உருப்படியான கொள்கைகளை முன்வைக்க வேண்டும்.

ஒன்ராறியோ, அல்பேர்ட்டா மாகாணங்கள் கன்சர்வேட்டிவ் கட்சிகளின் கட்சியில் திண்டாடுவதைப் பார்த்த பிறகும் கனடாவை அதன் கட்சியின் கைகளில் மக்கள் கொடுத்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது என நான் நினைக்கிறேன்.

தமிழ் மக்கள் ‘சமூகமாகச் சிந்திப்பவர்கள்’; ‘தாராள’ மனம் கொண்டவர்கள்; சூழலில் அக்கறை கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள்….

தேர்தல் அக்டோபர் 21. வாக்களிப்பது நாம் கனடாவுக்குச் செய்யும் பிரதியுபகாரம்.