Spread the love

சிவதாசன்

விவாதம் ‘சப்’ பென்று போய்விட்டது. எதிர்பார்த்த வாண வேடிக்கை நடைபெறவில்லை. இருப்பினும் இரண்டு மணித்தியாலங்கள் பார்க்க வைத்துவிட்டன கனடிய தொலைக்காட்சிகள். அவர்களுக்கு வியாபாரம்.

இரண்டு முயல்களும் நான்கு ஆமைகளும் போட்டி போட்டன. முயல்கள் இரண்டும் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டிருக்க ஜாக்மீட் சிங் என்ற ஆமை இலகுவாக வென்றுவிட்டது.

ஆளும் பிரதமர் என்ற வகையில் ட்ரூடோ அடி / வெடி வாங்கத் தயாராகத் தான் வந்தார். ஷீயர் பலரக ஆயுதங்களுடன் வந்தாரே தவிர கனரக ஆயுதங்களுடன் வரவில்லை. இயக்கக்காரர் சொல்வதுபோல எல்லாமே ‘சிம்பாப்வே’ வெடிகள் தான்.

SNC Lavalin ஆயுதத்தைச் ஷீயர் அடிக்கடி பாவித்து அது மழுங்கிப் போய்விட்டது. அதற்கு மறுப்பாயுதமாக ட்ரூடோ அடிக்கடி பாவித்த ‘கனடியர்களுக்கு வேலை’ என்ற ஆயுதமும் அப்படித்தான். இரண்டிலுமிருந்து சத்தம் வெளிவரவேயில்லை. இறுதியில் ஷீயர் பாவித்த ” “He can’t even remember how many times he put blackface on,” ; ”Mr. Trudeau, you are a phony, you are a fraud. You don’t deserve to lead this country.” என்ற வாயாயுதங்கள் தான் கொஞ்சம் காரமாக இருந்தது. இவ்வாயுதத்தினால் ட் ரூடோ காயப்பட்டதை விட ஷீயர் தான் அதிகம் காயப்பட்டிருக்கிறார். ஒரு விதமான below the belt punch என்று பார்க்கலாம். 

ஜோடி வில்சன் – றேபோல்ட் விடயமும் ஆறிப்போன கஞ்சிதான். எல்லாவற்றுக்கும் ட்ரூடோ வைத்துச் சுழற்றியது ஒரே- ‘கனேடியர்களுக்கு வேலை கொடுக்கிறேன்’ – ஆயுதம் தான். SNC Lavalin, Jody Wilson-Rebould விடயங்களைத் தொட்டதால் ஷீயர் கியூபெக் வாக்குகளை இழக்கப் போகிறார் என்பதை அவர் யோசித்ததாகத் தெரியவில்லை. கியூபெக் ஆசனங்கள் இல்லாமல் ஆட்சியைப் பிடிப்பது இலகுவானதல்ல. எனவே இதனால் ஷீயர் கியூபெக்கில் இழக்கப் போவது அதிகம்.

இந்த இரண்டு பேரும் போட்ட சண்டையைச் சாதகமாகப் பாவித்து அவ்வப்போது ஜக்மீட் சிங் நான்கைந்து ராக்கெட்டுக்களை விட்டார். “What we have here is Mr. Trudeau and Mr. Scheer arguing over who is worse for Canada. We have to start talking about who’s best for Canada,” என சிங் கொளுத்திப் போட்டார். 

பருவநிலை மாற்றம் தொடர்பான கேள்வி வரும்போது அதற்கும் சிங் விட்ட ராக்கட் பார்வையாளரைச் சிரிப்பால் உலுப்பியது. அவர் சொன்னது இது தான். “You don’t have to choose between Mr. Delay and Mr. Deny.” சிங் சிங்கன் தான் என்றும் சொல்லலாம்.

மொன்றியாலில் துவேஷ வெள்ளையருக்குப் பதில் சொல்லிச் செல்வாக்குப் பெற்றதுபோல இங்கும், விவாதத்துக்குப் பிறகு சிங்கின் செல்வாக்கு அதிகரிக்கப் போகிறது.

ட் ரூடோ, ஜேசன் கெனி, டக் போர்ட் போன்றவர்களை இழுத்துப் பார்த்தார். அவர்கள் தங்கள் மாகாணங்களில் மேற்கொள்ளும் செலவுச் சுருக்க நடவடிக்கைகளினால் மக்கள் படும் கஷ்டங்களை நினைவுபடுத்தினார். ஷீயரின் ஆட்சியிலும் இதுதான் நடக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அதற்கு ஷீயர் கொடுத்த பதில் ஒரு classic. ” ஒன்ராறியோ லிபரல் கட்சிக்குத் தலைவரைத் தேடுகிறார்கள். நீர் அங்கு போவது தான் நல்லது” என்பது. ஷீயர் மத்திய அரசில் போட்டியிடும் ஒரு ஃபோர்ட் தான் என்று ட் ரூடோ சொல்லியிருக்கலாம் ஆனால் சொல்லவில்லை. 

பசுமைத் தலைவி மே யின் வாதம் திறமையாக இருந்தாலும் பெரிதளவில் பன்ச் லைன்களைக் கொண்டிருக்கவில்லை. நல்ல மனிசி, பாவம் என்பதற்காக வாக்குகளைப் போடவிருக்கும் எவரையும் இழக்குமளவுக்கு அவரது விவாதம் இருக்கவில்லை. புதிதாக எவரையும் திருப்புமளவுக்கும் விவாதம் இருக்கவில்லை. 

ஏனைய இருவரும் முகம் காட்ட வந்தவர்கள் போலத்தான். மக்சிம் பேர்ணியர் பருவநிலை மாற்றத்தில் நம்பிக்கை இல்லாதவராக இருந்தும் தன்னிடம் திறமான மருந்து இருப்பதாகச் சிரமப்பட்டுச் சொல்லிவிட்டுப் போனார். புளொக் கியூபெக்குவா தலைவர் பிளான்செட் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஷீயருக்கு இரண்டு தட்டுகள் தட்டிவிட்டுப் போனார். SNC lavalin விவகாரத்தில் அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை இறக்கத்தால் நட்டப்பட்ட 3600 பேரும் அப்பாவிகள் என்றார். அது கியூபெக் வாக்காளர்களுக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையில் வைத்த பெரிய ஆப்பு. 

விவாதத்தில் கொள்கை கோதாரிகள் என்று எதுவும் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஒரு reality show தான்.   6 பேரில் யாருக்கு அதிக attention கிடைத்தது என்பதை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் (1) அதிக கை தட்டல்கள் (2) அதிக சிரிப்புகள் (3) முகத்தைக் குறிவைத்த அதிக கமரா நேரம் (4) witty answers என்ற காரணங்களுக்காக ஜாக்மீட் சிங் தான் வெற்றி பெறுவார். இந்த வருடத் தேர்தலுக்கு அவருக்கு இவை எதுவும் உதவி செய்யாது. 

நடந்து முடிந்த விவாதங்கள் எல்லாவற்றாலும் சாதிக்கக்கூடிய ஒன்று, இழுத்து இழுத்தென்றாலும் ட்ரூடோ வை இன்னொரு தடவை பிரதமராக்குவது. அது அவரது கெட்டித்தனத்தால் அல்ல மற்றவர்களின் இயலாத்தனத்தால். 

 

 

 

 

Print Friendly, PDF & Email