US & Canada

கனடிய தேர்தல் | கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதரவில் திடீர் வீழ்ச்சி!

கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் அண்ட்ரூ ஷியர்

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி தன் வெற்றிக்கான சாத்தியங்களை விரைவாக இழந்துவருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இதர கட்சிகளையும், அதன் தலைவர்களையும் பற்றிய அவதூறுகளைப் பரப்பியமையும் புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் கட்சியைக் களங்கப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுவருவதையும் சுட்டிக்காட்டி இன்று பல பிரதான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கன்சர்வேட்டிவ் கட்சி அறம், விவேகம் சார்ந்த விடயங்களில் ஊழல் நிறைந்த கட்சி என்பதைப் பல தடவைகள் கூறிவந்தேன். இப்போது அது நிரூபிக்கப்பட்டு விட்டது

மக்சிம் பேர்ணியெர்

கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்குகளைப் பறிக்கக்கூடியதெனக் கருதப்பட்ட ‘மக்கள் கட்சி’ யைக் களங்கப்படுத்தும் வகையில் சமூக வலைத் தளங்களின் மூலம் செதிகளைப் பரப்புவதற்கும் மற்றும் அக் கட்சியின் தலைவர் மக்சிம் பேர்ணியரைத் தலைவர்களின் பொது விவாதத்தில் கலந்துகொள்ள விடாது தடுப்பதற்கும் கன்சர்வேட்டிவ் கட்சி எடுத்த முயற்சிகள் பற்றிய செய்திகளை நேற்றய (வெள்ளி) ‘குளோப் அண்ட் மெயில்’ பத்திரிகை அம்பலப்படுத்தியிருந்தது.

இந்த முயற்சிகளில் ஈடுபட்டதெனக் கருதப்படும், மொன்றியலைத் தளமாகக் கொண்ட வழக்கறிஞரும், அரசியல் ஆலோசகருமான வரென் கின்செல்லா என்பவருடைய நிறுவனமான டெய்சி குரூப் கன்சர்வேட்டிவ் கட்சியால் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்தது.

மக்கள் கட்சி இனவாதக் கருத்துக்களைக் கொண்டது, குடிவரவுக்கு எதிரானது போன்ற கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் அதற்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளைத் தமது கட்சிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்பதே இம் முயற்சியின் பின்னணி எனவும் இத் திட்டம் ‘புறொஜெக்ட் கக்டஸ்’ (Project Cactus) எனப் பெயரிடப்பட்டிருந்ததெனவும் அதில் பணியாற்றிய பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் தெரிவித்ததாக ‘சீ.பி.சீ.’ செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று (சனி), இச் செய்திகள் வெளிவந்ததும் பெரும்பான்மையான ஊடகங்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான அண்ட்றூ ஷியரிடம் கேள்விகளை எழுப்பியபோது அவரால் நேரடியான பதில் எதையும் கொடுக்க முடியவில்லை.

நேற்று முன் தினம் முதல் லிபரல் கட்சி ஜி.எஸ்.ரி வரியை அதிகரிக்கப்போகிறது என்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் அண்ட்றூ ஷியர் தனது தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசிவந்தார்.

அத்தோடு, லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் கஞ்சாவைச் சட்டபூர்வமாக்கியதுபோல ஹெறோயின் போன்ற போதை வஸ்துக்களையும் சட்டபூர்வமாக்கும் என்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டொன்றைச் சீன மொழியிலான தேர்தல் பிரச்சாரப் பிரசுரங்களில் வெளியிட்ட விடயங்களும் பிரதான ஊடகங்கள் மூலம் மக்களைக் குழப்பியிருந்தன.

இப்படிப் பல காரணங்களினால் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்குத் திடீரென்று சரிவடைந்து வருவதைப் பல்வேறு கருத்துக் கணிப்புகள் மூலமும் அறிய முடிகிறது.

மக்கள் கட்சித் தலைவர் மக்சிம் பேர்ணியர் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சி வரென் கின்செல்லாவின் நிறுவனத்தைச் சேவைக்கு அமர்த்தியதா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க அண்ட்ரூ ஷியர் மறுத்துவிட்டார்.

“நான் கட்சியை விட்டு விலகிய நாள் தொடக்கம் கன்சர்வேட்டிவ் கட்சி அறம், விவேகம் சார்ந்த விடயங்களில் ஊழல் நிறைந்த கட்சி என்பதைப் பல தடவைகள் கூறிவந்தேன். இப்போது அது நிரூபிக்கப்பட்13டு விட்டது” என மக்சிம் பேர்ணியர் கருத்து தெரிவித்தார்.