ColumnsUS & Canadaசிவதாசன்

கனடிய தேர்தல்| ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ – பசுமைத் தலைவி

சிவதாசன்

பாவம் கனடாவின் பசுமைக் கட்சிக்குள்ளும் பிரச்சினை போலத்தான் இருக்கிறது. அதன் கட்சித் தலைவி கையில் ஒரு ‘பிளாஸ்டிக்’ பல் பாவனைக் கிண்ணத்தை (multi use) வைத்திருப்பதாகக் காட்டப்பட்ட படம் ‘பூசி மெழுகப்’ பட்டதென்றும் உண்மையான படத்தில் இருக்கும் கிண்ணம் (இடது பக்கம்) ஒரு பாவனைக்குரியதென்றும் (single use) ஒரு ‘காலைக்’ கண்ணன் (அல்லது கண்ணி) கண்டுபிடித்துவிட்டான்.

பொதுவாக சூழல் போராளிகள் எல்லோருக்குமே இந்தப் பிரச்சினை வந்து போகும். அரசியல்வாதிகள், குறிப்பாகத் தலைவர்கள், இதிலிருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவர்கள்தான் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுப்பவர்கள். நான்கு அல்லது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் வாக்காளர் மட்டுமல்ல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் மறந்துவிடுவனவற்றில் முதலாவதாக நிற்பவை இந்த வாக்குறுதிகள் தான்.

‘சூழல்’ என்ற ஆயுதத்தைச் சுழற்றப் புறப்பட்ட அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் பாவம் செய்தவர்கள். அவர்கள் உள்ளும் வெளியும் அணியும் ஆடை அலங்காரங்களிலிருந்து ஓடித் திரியும் வாகனங்கள் வரை மிகவும் அவதானத்துடனே கையாள வேண்டும். எந்த மூலையில் எந்த சூழற் போராளி எந்தக் கமராவுடன் நிற்கிறானென்று தெரியாது.

‘so what’ ஒரு சிறந்த ஆயுதம். அதைக் கண்டவுடன்/கேட்டவுடன் ஊடகக் காரர் ஓடிப்போய்விடுவார்கள். அடுத்த கேள்விக்கு இடம் கொடுக்காமல் செய்துவிடுகிறது இந்த ‘so what’. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், புட்டின், கனடிய முன்னாள் பிரதமர்கள் பியர் எலியட் ட்றூடோ, ஜான் கிரெத்தியேன் போன்றவர்களின் முகங்களில் இந்த ‘so what’ நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். கொஞ்சம் விவேகமான ஊடகக்காரர் இதை உய்த்துணர்ந்து மெள்னமாகிவிடுவார்கள். அல்லாதவர்கள் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள். பெரும்பாலான கன்சர்வேட்டிவ் காரர்களிடம் இந்த ஆயுதம் கைவசம் இருக்கும்.

எதிர்த் தரப்பில் ‘progressive’ ஆயுதத்தை ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் ஒரு வகையில் பாவம் செய்தவர்கள். அவர்களுடைய ஆயுதம் மொட்டையானது என்பது அவர்களில் பலருக்கே தெரியாது. எந்த மொக்கான ஊடகக்காரனும் ஆயிரம் கேள்விகளோடு இவர்கள் முன் நிற்பான். காரணம் ஒருவரையும் புண்படுத்தக்கூடாது என்பதற்காக எல்லாக் கேள்விகளுக்கும் நிரந்தர புன்முறுவலோடு பதிலளிக்கும், புனிதமான கொள்கையைக் காவியாய்க் கட்டிக்கொண்டு அலைபவர்கள் இந்த ‘progressives’.

இவர்களில் ‘பசுமைக்’ காரர்கள்தான் அதிக பாவம் செய்தவர்கள். ஆசைக்கு ருசியாக எதையும் சாப்பிட வேண்டுமென்றாலும் அது என்ன காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கிறது என்று பார்த்து உறையைக் கழற்றி விட்டுச் சாப்பிட வேண்டும் அல்லது எலிசபெத் மே செய்தது போல படத்துக்கு பூசி மெழுக (photoshop) புடன் ஒரு கிராபிக் ஆர்ட்டிஸ்டும் வேண்டும்.

இந்த விடயத்தில் எலிசபெத் மே தவறிழைத்திருப்பார் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் SNC Lavalin விடயத்தில் ட்ரூடோ எப்படிக் குற்றத்தை ஒப்புக் கொள்ளாது ‘கனடிய மக்களுக்காகவே’ நான் அதைச் செய்தேன் என்று சொல்லி கியூபெக்கில் தன் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்தாரோ அது போல ‘இந்தக் கிண்ணமும் ஒரு கனடிய தயாரிப்புத் தான்’ என்று ஏதோ சொல்லி மெழுகியிருக்கலாம். இந்தப் பூசி மெழுகலைவிட அது மேல்.

பசுமைக் கட்சித் தலைவி இந்த விடயத்தில் ஆச்சரியமும் ஆத்திரமுமுற்றிருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் (மிகச் சிறிய வட்டாரமெனினும்) தெரிவிக்கின்றன.

சென்ற வருடம் ஒரு கன்சர்வேட்டிவ் வேட்பாளர் தன் சிறுநீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி விளையாடி ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்த விடயத்தைக் கட்சி ஒரு ‘so what’ கேள்வியுடன் அப்பல் நகர்த்திவிட்டு இப்போ சிரித்துக்கொண்டு மீண்டும் கதவு தட்டுகிறார்கள். சனம் எல்லாவற்றையும் இலகுவாகவும், விரைவாகவும் மறந்துவிடும் என்ற ஒரே நம்பிக்கையில் தான் அரசியல் இயங்குகிறது.

பாவம் ‘பசுமைக் கட்சி’ எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

‘கிண்ணத்துக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம்’, வேண்டுமானால் கன்சர்வேட்டிவ் கட்சிக்காரரிடம் கேட்டுப்பாருங்கள்.

ஒரே ஒரு ‘அட்வைஸ்’. எடுத்ததுக்கெல்லாம் உடனே மன்னிப்புக் கேட்கவேண்டுமென்பது கட்டாயமென்பதில்லை. யாரோ ஒருவன் உங்களுக்குப் பின்னால் ‘பலாப்பழத்துடன்’ வந்து உங்களைக் காப்பாற்றவும் கூடும்.

அரசியலில் இதுவெல்லாம் சகஜம்.