கனடிய தேர்தல் – இன்று, செப். 20 | உங்கள் ஆதரவு யாருக்கு?
சிவதாசன்
கனடிய மத்திய அரசுக்கான பாராளுமன்ற தேர்தல்களுக்கான வாக்களிப்பின் இறுதிநாள், இன்று (செப். 20, 2021). ஏறத்தாள மூன்று தசாப்தங்களை எட்டும் பெரும்பாலான தமிழ் வாக்காளர்களுக்கு எப்படி வாக்களிக்கவேண்டுமென்று சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. ஆதிக்குடிகள் முதல் அனைவருமே தங்கள் நன்மையை முதலிலும், நாட்டு நன்மையை இரண்டாவதுமாகப் பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள். அந்த வகையில் பெரும்பான்மை இனம் எப்போதுமே வெற்றிபெறும், அதையே ஜனநாயகம் என்கிறார்கள். அதற்குள் வாழ்த் தேர்ந்துகொண்ட நாம் அவை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இன்னும் இரண்டு வருட ஆயுள் இருக்கும்போது, இத் தேர்தல் அறிவிப்பு தேவையற்றது, பிரதமர் அவசரப்பட்டுவிட்டார் என்பது பொதுவான மக்கள் கருத்து. அதில் உடன்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக, ‘கோவிட் பெருந்தொற்றிலிருந்து வெளியேறியபின்னர் தான் தேர்தல்” என முழக்கமிட்ட பிரதமர், வாக்கு மாறி / வாக்கு மீறி, கோவிட் தொற்று நான்காவது அலையில் மிதந்துகொண்டிருக்கும்போது தேர்தலை அறிவித்தது படு சுயநலம். மக்கள் நலம் மீது அக்கறை ஆறாக ஓடப் பேசித் தொலைக்கும் இந்தப் பிரதமருக்கு இது முற்றிலும் தேவையற்றது.
தேர்தலுக்கான அவர் காரணம், தனது கொள்கைகளை நிறைவேற்றப் பலமான, பெரும்பான்மை அரசாங்கம் வேண்டும் என்பது. ஏற்கெனவே அவரது கொள்கைகளை, அதுவும் மிகவும் இடரான காலத்தில், முன்னெடுக்க எதிர்க் கட்சிகள், குறிப்பாக என்.டி.பி. கட்சி உதவிசெய்து வருகிறது. மல்றோனி ஆட்சிக்குப் பின்னர் முற்போக்கு கொள்கைகளைக் கொண்ட எரின் ஓற்றூல் தலைமையிலான கந்சர்வேட்டிவ் கட்சியும் தன் பங்குக்கு ஆதரவையே அளித்து வருகிறது. இந் நிலையில் பிரதமர் ட்றூடோ தேர்தலை அறிவித்ததைக் கெளிமதம் என்றே சொல்ல வேண்டும்.
சரி, அதற்காக ஆட்சி மாற்றம் வேண்டுமா? நாடு தயாரா, மக்கள் தயாரா என்று நீங்கள் கேட்கலாம். இந்த விடயத்தில் மனம் ஆம் என்றாலும் தலை இல்லை என்றே சொல்கிறது. இதற்கு இரண்டு காரணங்களை நான் முன்வைக்கிறேன். ஒன்று: கோவிட் தொற்றுக்குப் பின்னான பொருளாதார இயந்திரத்தை ஓட்டுவதற்குப் புதிய சாரதி பழக்கப்படவேண்டும். புதியவர் அதற்காக மேலும் மூன்று நான்கு வருடங்களை எடுக்கலாம். 1 ட்றில்லியன் டாலர்கள் வரவு செலவுப் பற்றாக்குறையை (deficit) வைத்துவிட்டுப் போகும் முன்னாள் ஆட்சியைக் குற்றஞ்சாட்டிக்கொள்வதால் மக்கள் மன்னிப்பை இலகுவாகப் பெற்றுவிடலாம். எல்லாவிதமான குறைபாடுகளும் ட்றூடோ ஆட்சியின் தலையில் சுமத்திவிட்டு ‘ஹாயாகக்’ கடந்துபோய்விடலாம். நாடும் மக்களும் பின்னடைவுகளை எதிர்கொள்ளலாம். இரண்டாவது: ஆட்சியை ஏற்று நடத்துவதற்கான அனுபவம் கொண்ட தலைமைத்துவம் வேறெவரிடமும் இப்போது இல்லை. எனவே நமது அடுத்த பிரதமரும் அவரே தான்.
எரின் ஓற்றூல் தொடர்ந்தும் தலைவராக இருந்தால் அடுத்த தடவை கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். ஆனால் அதில் எனக்குப் பலத்த சந்தேகமுள்ளது. முந்திய தலைவர் ஆண்ட்றூ ஷியரிந் திடீர்த் தலைமை, ‘Old Stock’ புகழ் – ஹார்ப்பர் முகாமைச் சேர்ந்த வெள்ளைச் சங்கிகளாலும் (சமயக் காரர்கள்), செங்கழுத்து வலதுசாரிகளாலும் (மேற்கு மாகாணங்கள்) சிருஷ்டிக்கப்பட்டது. மல்ரோனி முகாமைச் சேர்ந்த முற்போக்கு இடதுசாரிகள் ஒதுக்கப்பட்டு வந்தனர். மத்திம புத்தியுள்ள ஷியரினால் தாக்குப் பிடிக்க முடியாதபோது இன்னுமொரு முற்போக்கு கன்சர்வேட்டிவ் பீட்டர் மக்கேயை ஓரம்கட்டுவதற்காக ஷியர் / ஹார்ப்பர் கூடம் முன்தள்ளியவரே எரின் ஓற்றூல். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது முகாம் பிழையானதானாலும் முகம் முன்னேற்றக் கன்சர்வேட்டிவ் தான். வலப்பக்கத்தில் ஒதுங்கிக்கிடக்கும் ன்சர்வேட்டிவ் கட்சியை ‘நடுவுக்குக்’ கொண்டுவருவதற்கு அவரே சிறந்த மனிதர். அதற்கு இன்னும் சில வருடங்கள் தேவை. ஆட்சியைக் கைப்பற்ற முடியாதபோது அவரை அகற்றுவதற்காக ஹார்ப்பர் கூடம் இப்போதே வலை பின்னலாம். அதற்காக அவர் கணிசமான ஆசனங்களைப் பெறவேண்டுமென நீங்கள், வேண்டுமானால் வேறு கடவுள்களைப், பிரார்த்திக்கலாம்.
ஓரிரு விடயங்களில் நான் ட்றூடோ கொள்கைகளில் உடன்படவேண்டியிருக்கிறது. அதற்கான மூல காரணம் என்.டி.பி., பசுமைக் கட்சிகளின் – கட்சிகள் என்பதைவிட செயற்பாட்டுக் குழுக்கள் என அழைப்பதே நல்லது என நினைக்கிறேன் – தொடர் அழுத்தங்கள். சிறுபான்மை அரசாங்கங்கள் அமையும்போதுதான் அவை சாத்தியமாகின்றன. சூழல் கொள்கை விடயத்தில் கன்சர்வேட்டிவ் மறுப்பும், லிபரல் இழுத்தடிப்பும் ஏறத்தாழ ஒன்றுதான். குடிவரவு விடயத்தில் லிபரல் பரவாயில்லை. அப்போ ஏன் நம்ம ஆட்கள் கன்சர்வேட்டிவ் முகாமிற்குள் நெரிபடுகிறார்கள் என நீங்கள் ஆச்சரியப்படலாம். ம்..ம். அதுஇன்னொரு நாளைக்கு. கனடிய பூர்வீக குடிகள் விடயத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் மோசமானது.
பூர்வீக குடிகள் விடயத்தில் 2015 தேர்தல் முக்கியமானது. இத் தேர்தலில் முதல் தடவையாக 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் (7 லிபரல், 2 என்.டி.பி, 1 சுயாதீனம்) தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கன்சர்வேட்டிவ் கட்சியை அவர்கள் முற்றாக நிராகரித்துவிட்டார்கள். இந்த விடயத்தில் பூர்வீக குடிகள் தமிழர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. வந்தேறு குடிகளின் பாராளுமன்றத்தைத் தாம் அங்கீகரிக்கப் போவ்தில்லை எனப் பூர்வீகத் தேசியம் பேசும் ஒரு சாராரும் , இணக்க அரசியல் மூலம் பெறக்கூடிய நன்மைகளைப் பெறவேண்டுமெனப் பேசும் மற்றொரு சாராருமென அங்கும் பிளவுதான். 2015 தேர்தலில் பாராளுமன்றம் சென்ற சில பூர்வீக குடி உறுப்பினர்கள் ‘பூர்வீக தேச’ மக்களுக்குச் சில நன்மைகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அதிலொன்று, முதல் தடவையாக, அவர்களது சமூகமொன்றிற்குக் குழாய்த் தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதைச் செய்தவர் நமது ட்றூடோ தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் லிபரல் கட்சியினர். நம்பத்தான் வேண்டியிருக்கிறது. காங்கேசன்துறை சீமந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை எனத் தமிழரும் இணக்க அரசியலுக்காக வக்காலத்து வாங்கிய அநுபவமுண்டு.
மற்றும்படி யாருக்கு வாக்களிப்பது என்பது உங்கள் தேர்வு. மீண்டுமொரு சிறுபான்மை லிபரல் ஆட்சி எனப் பட்சி சொல்கிறது. லிபரல் கட்சிக்குள்ளும் ட்றூடோவை அகற்றுவதற்கான எதிரணி இன்னும் உருவாகவில்லை. எந்த ஊழலும் அவரை ஒட்டிக்கொள்ள மறுக்கிறது. அதற்கென ஒரு தடுப்பூசியை அவர் போட்டுக்கொண்டுள்ளாரோ தெரியாது.