Spread the love
சிவதாசன்

திருவிழா ஒருவாறு முடிந்துவிட்டது. முடிவு எதிர்பார்த்தது தான். பங்குகாரர்கள் சண்டை இனிமேல்தான். ட்ரூடோவின் சாதகத்தில் வியாழ பகவான் பத்தாம் இடத்துக்குப் போகாமல் பலமான எச்சரிக்கையைக் கொடுத்துவிட்டு வக்கிரப்பட்டுத் திரும்பிவிட்டார். இனி எல்லாம் அவர் கைகளில்.

கனடிய தேர்தல்கள் | வற்றாத நீலக்கண்ணீர்... 1
கனடிய தேர்தல் முடிவுகள்

ஆசனங்களை இழந்தாலும் லிபரலும், புதிய ஜனநாயகக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. புளக் கியூபெக்குவா கட்சிக்கும் ஒரு வகையில் வெற்றிதான், ஆயுதங்கள் வழங்கப்பட்ட ‘ஆவா’ குழுபோல யாரும் எப்போதும் ‘hire’ பண்ணலாம்.

இதில் கன்சர்வேட்டிவ் கட்சி, கூடிய ஆசனங்களைப் பெற்றிருந்தாலும், தோல்வியுற்ற ஒன்றுதான். தன்னோடு சேர்த்து அல்பேர்ட்டா, சஸ்கச்செவான் மாகாணங்களையும் குழிக்குள் இழுத்து விழுத்தியிருக்கிறது.

லிபரல் கட்சிக்கு, இரண்டாவது தவணை ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு அப்பால், அதைத் திருத்திக்கொள்ள மக்கள் ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார்கள். என்னதான் செய்தாலும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பீற்றர் மக்கேயுக்குப் போகுமானால், லிபரல் கட்சிக்கு இந்தத் தவணையே முற்றுப்புள்ளி.

லிபரல் கட்சிக்கு எண்ணை மாகாணங்களால் (அல்பேர்ட்டா, சஸ்கச்சேவன்) இரட்டைத் தலையிடி. ஒருபக்கம் சூழலியலாளர், சுதேசிகள் மறுபக்கம் பஞ்சத்தில் வாடும் எண்ணைத் தொழிலாளர்கள். ஒரு காலத்தில் எண்ணை பொங்கி வழிந்தபோது அத்லாந்திக் மாகாணங்களை வழித்துத் துடைத்த அல்பேர்ட்டா கொழுப்பேறித் தன் எல்லாப் பொன் முட்டைகளையும் ஒரே எண்ணைக் கூடைக்குள் போட்டுவந்தனர். அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளரான அமெரிக்காவில் ஒபாமா 8 வருடங்களாக எண்ணை தோண்டிச் சுய நிறைவுக்கு வருமட்டும், அதன் பிறகு ‘அமெரிக்கா முதல்’ என்ற கோசம் போடும் துரும்பர் 4 வருடங்களை நிறைவு செய்யுமட்டும் வெள்ளி பார்த்துக்கொண்டிருந்தது அல்பேர்ட்டா. வெனிசுவேலா மக்களின் வயித்திலடித்த பலன் தான் அம்மாகாண மக்களின் வயிறுகளையும் எரிக்கிறது.

லிபரல் கட்சியை முற்றாக நிராகரித்ததனால் அல்பேர்ட்டாவும், சஸ்கச்சேவனும் தமது தலையில் தான் எண்ணையை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். அல்பேர்ட்டாவின் எண்ணையைக் கொண்டு சென்று விற்பதற்கென்று குழாய்களைப் போடுவதற்கு லிபரல் கட்சி சூழலியலாளருடனும், சுதேசிகளுடனும் போராட வேண்டியிருந்தது. பொறுப்புள்ள அரசின் கடமையதுவெனினும் அல்பேர்ட்டா வாக்கு வங்கியும் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் இம் மாகாணங்களுக்கு உதவவேண்டுமென்ற ட்ரூடோவின் ஆர்வம் தளர்ச்சியடைய வாய்ப்புண்டு.

இந்தா ‘தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைக்கப் போகிறேன்’ என்று அல்பேர்ட்டாவின் முதலமைச்சர் கெனி தினவெடுக்கலாம். துறைமுகமில்லாத நாடொன்றை (land locked) உருவாக்கிய பின், விமானங்களில் எண்ணை விற்கும் நாடாக வேண்டுமானால் அல்பேர்ட்டாவை விட்டு விடலாம்.

அக்டோபர் 1970 இல் தான் தந்தையார் ட்ரூடோ கியூபெக் பிரிவினைவாதிகளுடன் ‘போரிட்டு’ நாட்டைக் காப்பாற்ற வேண்டி ஏற்பட்டது. அக்டோபர் 2019 இல், கிட்டத்தட்ட 50 வருடங்களில், மகன் ட்ரூடோ அல்பேர்ட்டா பிரிவினைவாதிகளுடன் போரிடவேண்டி ஏற்பட்டிருக்கிறது. வரலாறு சுழலத்தானே வேண்டும்.

எப்படியிருந்தாலும், எண்ணைக் குழாய் விடயத்தில் இருந்த சுமையை இறக்கி விட்டு ‘நீங்க இல்லாமலேயே ஆட்சியமைக்க என்னால் முடியும்’ என்ற திமிரை ட்ரூடோவின் தோளில் அல்பேர்ட்டா, சஸ்கச்சேவன் மாகாணங்கள் ஏற்றியிருக்கின்றன. அது லிபரலின் வெற்றி.

ஜக்மீட் சிங் தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி ஆசனங்களைப் பறிகொடுத்திருந்தாலும் அதற்கு ஒரு ‘அதிரடிப்படை’ ஸ்தானத்தைக் கொடுத்ததன் மூலம் ட்ரூடோவைக் காவல் புரியும் பணியை அக் கட்சி எடுத்துக்கொண்டுள்ளது ஒரு வகையில் அதற்கு வெற்றி. ஆட்சியில் அமராமலே தனது கொள்கைகள் சிலவற்றையேனும் அமுல்படுத்த அக் கட்சிக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இத் தேர்தல் வெற்றியைத்தான் கொடுத்துள்ளது.

கியூபெக் மாகாணத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு அமெரிக்கா அருகில் இருப்பதும், துறைமுகங்கள் இருப்பதும் வர்த்தகத்துக்கு மிக அனுகூலமானது. Energy East Pipeline விடயத்தில் லிபரல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து அத்திட்டத்தை நிறுத்தியதற்கு கியூபெக் மாகாண அரசும் ஒரு காரணம் என்றொரு குற்றச்சாட்டும் உண்டு. சூழலியலாளரின் அழுத்தத்தின் பேரில் ட்ரூடோ தேசிய ஆற்றல் சபையின் (National Energy Board) கட்டுப்பாடுகளை இறுக்கியதும் ஒரு காரணம். ஆனால் அதை விட முக்கியமானது இந்த எண்ணைக்குழாய்த் திட்டத்தின் சொந்தக்காராரான Trans Canada Pipeline என்ற நிறுவனம், எண்ணை விலைகளில் ஏற்பட்ட சரிவினால் நட்டமடைய நேரிடும் என்ற வியாபாரக் காரணத்தால் இத் திட்டத்திலிருந்து மெதுவாக நழுவிவிட்டதே பிரதான காரணி என்றும் பேசப்பட்டது. என்ன இருந்தாலும் கியூபெக் மாகாணத்திற்கு இத் திட்டத்தால் எதுவித பலனுமில்லை. லிபரல் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பணியை இத் தேர்தல், புளக் கியூபெக்குவாவுக்குக் கொடுத்ததன் மூலம் அதுவும் வெற்றியையே பெற்றிருக்கிறது.

இத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ட்ரூ ஷியர் தான். அவரது தீவிர வலதுசாரிக் கொள்கைகள் காலத்துக்கும், இன்றய கனடியர்களுக்கும் ஏற்பானது அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கவில்லை. ட்ரூடோ என்னதான் திமிர் கொண்டிருந்தாலும், பொருளாதாரம் பலமாக இருந்தது. வேலைவாய்ப்பு உயர்வாக இருந்தது. கடனைப் பட்டு மக்களை அவர் மகிழ்வாக வைத்திருந்த நடைமுறையும், வயிற்றைக் கட்டி, வேலைகளைக் குறைத்து பணத்தை மிச்சம்பிடித்து ஆள முயன்ற ஒன்ராறியோ மாகாணத்தின் ஆட்சி முறையும் ஏககாலத்தில் மக்கள் முன் வைக்கப்பட்டன. ஒன்ராறியோவின் ஆட்சிமுறையையே அண்ட்ரூ ஷியரும் பின்பற்றப் போகிறார் என்ற பயம் மக்களைப் பிடித்திருந்தது. அந்த வகையில் பழமைவாதத்தை இறுகப்பிடித்திருந்த கட்சிக்கு இத் தேர்தல் ஒரு பாடம் கற்பித்திருக்கிறது. அண்ட்ரூ ஷியரின் தலைமைக்கு அச்சுறுத்தல் அருகே வந்திருக்கிறது. அதுவே ட்ரூடோவுக்காகவும் காத்திருக்கலாம்.

மற்றும்படி, இத் தேர்தல் மரம் சில பழையவர்களை உலுப்பி விழுத்தியிருக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் உபதலைவி லிசா ரெயட் வென்றிருக்க வேண்டியவர். தலைவரில் இல்லாத முறுக்கும், பேச்சும் அவரிடமிருந்தது. SNC Lavalin விவகாரத்தின்போது அவர் மிளிர்ந்தார். அவர் தலைவராக இருந்திருந்தால் சில வேளைகளில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். ஜோடி வில்சன்-றேபோல்ட் வென்றது மகிழ்ச்சி. ட்ரூடோ ஜோடியின் முகத்தில் தினமும் விழிப்பதுவும் தேவையான ஒன்றுதான். ஆனால் ஜோடியின் தோழி ஜேன் பில்பொட் தோற்றது கொஞ்சம் பாரமாகத்தான் இருக்கிறது.

நம்ம ஆட்களில், கெரி ஆனந்தசங்கரியின் வெற்றி போன தவணையே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. மற்றவர்கள்? ம்…உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்!

Print Friendly, PDF & Email