கனடிய தேர்தல்|ஃபில்பொட், வில்சன்-றேபோல்ட் நிலைப்பாடுகள்

Spread the love
இருவரினதும் வெற்றி தோல்விகளும் பிரதமரின் மீதான தீர்ப்பாகவே பார்க்கப்படும்.

சிவதாசன்

Trudeau, Wilson-Raybould, Philpot Photo Credit : The Star.com

அக்டோபர் 21, 2019 அன்று கனடிய மத்திய அரசுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. லிபரல் கட்சியும் கன்சர்வேட்டிவ் கட்சியும் ஏறத்தாழ சம அளவில் வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளனவென்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில் லிபரல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சுதந்திர வேட்பாளர்களாகத் தேர்தலைச் சந்திக்கும் இரண்டு பெண்கள் மீது அதீத கவனம் செலுத்தப்படுகிறது.

பின்புலம்

ஜேன் ஃபில்பொட் ஒன்ராறியோ, மார்க்கம்-ஸ்ரோவ்வில் தொகுதியிலும் ஜோடி வில்சன்-றேபோல்ட் பிரிட்டிஷ் கொலம்பியா வான்கூவர் – கிறான்வில் தொகுதியிலும் தேர்தலில் நிற்கிறார்கள். முன்னாள் லிபரல் கட்சி பா.உ. க்களான இவர்கள் மந்திரிசபையிலும் அங்கம் வகித்தார்கள். கனடிய பிரதமர் ச14ம்பந்தப்பட்ட விவகாரமொன்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினர்களினால் இவ்விரு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்கள். பிரச்சினை வில்சன் -றேபோல்ட்க்கும் பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோவுக்குமிடையிலேயாயினும் ஃபில்பொட் தார்மீக ரீதியில் வில்சன் – றேபோல்டுக்கு ஆதரவளித்ததற்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார். இவர்களில் வில்சன் – றேபோல்ட் கனடாவின் சுதேசியப் பெண்ணாவார்.

எஸ்.என்.சி லவாலன் விவகாரத்தில் பிரதமர் தவறிழைத்திருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அதைக் கியூபெக் மாகாணத்தின் நன்மை கருதியே செய்தேன் என்ற காரணத்தைப் பிரதமர் முன்வைக்க, சட்ட ரீதியாகப் பிழைவிட்டிருக்கிறார் என்பதுமல்லாது தனது கடமையிலும் குறுக்கிட்டு ஆணைகளைப் பிறப்பித்தார் என்று வில்சன் – றேபோல்ட் குற்றம்சாட்ட – விவகாரம் சூடேறி நாட்டையே சில வாரங்கள் பிரித்து வைத்திருந்தது. இரண்டு பெண்களும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதுடன் சூடு தணிந்திருந்தது.

தார்மீகப் பலப்பரீட்சை

தற்போது தேர்தலில் இரண்டு பெண்களும் மீண்டும் தேர்தலில் குதித்திருப்பதும் அவர்களுக்கு எதிராக லிபரல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதும் பிரதமரையும், கட்சியையும் நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்திருப்பதற்கு ஒப்பானது. இவ்விரு பெண்களும் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களது பக்கம் நீதி இருக்கிறதென்று மக்கள் தீப்பளித்திருக்கிறார்கள் எனவே கொள்ளப்படும். இக் காரணத்துக்காக இவ்விரு பெண்களின் தேர்தல்களும் மக்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சிகளின் அரசியல்

பிரதமரும் லிபரல் கட்சியும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாலும் எதிர்க்கட்சிகள் எதுவும் (பசுமைக் கட்சி தவிர்ந்த) இப் பெண்களுக்கு ஆதரவாகவோ அல்லது இவ் விவகாரத்தில் பிரதமர் தவறிழைத்திருகிறார் என்று முடிவாகிய பின்னரும் எதிர்க்கட்சிகள், பிரதமரையும் அவரது கட்சியையும் துவைத்துப் போடுவதற்குத் துணியவோ இல்லை. இறுக்கிப் பேசிவிட்டால் கியூபெக் மாகாணத்தில் தங்களுக்கு விழும் வாக்குகள் குறைந்துவிடும் என்பதற்காக அமுக்கி வாசிக்கின்றனர். எனவே இவ்விரு பெண்களும் தனியே தான் தங்களது ‘போராட்டத்தை’ முன்னெடுத்து வருகிறார்கள்.

‘பாதிக்கப்பட்ட சுதேசி’

இந்த நிலைமையில் இப் பெண்களின் வெற்றி தர்மம் நிலைநிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் எனப் பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளை பல நூறு வருடங்களாக வந்தேறு குடிகளாற் பாதிப்புக்குள்ளாகிய சுதேசிகளின் ஒரு பிரதிநிதி மீண்டும் ஒரு தடவை பாதிப்புக்குள்ளாகிறார் என்ற சில குரல்கள் ஆங்காங்கே ஒலித்தாலும் வில்சன் – றேபோல்ட்டைப் பொறுத்த வரையில் அவர் தனது ‘பாதிக்கப்பட்ட சுதேசி’ என்ற கார்ட்டை இத் தேர்தலில் பாவிப்பதாகத் தெரியவில்லை. சுத்தமாகத் தத்தம் நிலைப்பாடுகள் சரியானவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இருவரும் போட்டியிடுகிறார்கள். பிரதமரும் தனது நிலைப்பாடு, நாடு சார்ந்தது, மக்கள் சார்ந்தது என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இத் தேர்தலை எதிர்கொள்கிறார்.

நிதி சேகரிப்பு

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாக்காளர் ஆதரவு மட்டுமல்ல தொண்டர்களும், பண பலமும் இருக்க வேண்டும். செப்டம்பர் 11ம் திகதி தேர்தல்கள் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகியதுமே நிதி திரட்டுவது ஆரம்பமானது. ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்காக அதிக பட்சம் எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதையும், யாரிடமிருந்து பணத்தைத் தானமாகப் பெறலாம் என்பதையும் தேர்தல் ஆணையம் வரையறுக்கிறது. ஒரு கட்சியின் கீழ் வேட்பாளராக இருக்கும்போது பணச் சேகரிப்பு இலகுவானது. கட்சியும் தனது பங்கிற்கு பண, சரீர உதவிகளைச் செய்யும். சுதந்திரமான வேட்பாளர்களுக்கு கட்சி இயந்திரம் இல்லை என்பது மட்டுமல்ல அவர்களது வழமையான ஆதரவுத் தளத்தையும் கட்சி அபகரித்துவிடும். எனவே இவ்விரு பெண்களும் இரட்டைச் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தனர்.

நேற்றய செய்திகளின்படி இவ்விரு பெண்களும் எதிர்பார்த்த அளவுக்கு மேலாக நிதியைச் சேகரித்துவிட்டதுமல்லாது தமக்கு இனி எவரையும் அன்பளிப்புச் செய்ய வேண்டாமென்றும் கேட்டு அறிக்கை விட்டுள்ளார்கள். இது அவர்கள் இருவருக்கும் இருக்கும் ஆதரவுத் தளத்தின் பலத்தையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. “நாடு முழுவதிலுமிருந்தும் எங்களுக்கு நிதி அன்பளிப்பு வந்து குவிகிறது. தொண்டர்கள் தாமாக முன்வருகிறார்கள். இப்படியொன்றை நான் வாழ்நாளில் சந்தித்திருக்கவில்லை. அமோகமான ஆதரவு எங்களுக்குக் கிடைக்கிறது” என ஜேன் ஃபில்பொட் கூறுகிறார்.

தமிழ்க் காரணி

ஜேன் ஃபில்பொட் களமிறங்கியிருக்கும் தொகுதியில் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த தேர்தலில் ஃபில்பொட்டுக்கே தங்களது வாக்குகளை அளித்திருந்தார்கள். இந்தத் தடவை தியடோர் அன்ரனி எனப்படும் தமிழர் ஒருவர் கன்சர்வேட்டிவ் கட்சியில் சார்பில் குதித்திருக்கிறார். எனவே ஃபில்பொட்டின் ஆதரவுத் தளம் இந்தத் தடவை மூன்றாக உடைகிறது. சென்ற தடவை (2015) ஜேன் ஃபில்பொட்டுக்கு இங்கு 49 வீதமான வாக்குகளும், கன்சர்வேட்டிவ் கட்சியின் வேபாளருக்கு 43 வீதமான வாக்குகளும் கிடைத்தன. இந்தத் தடவை பல நூறு / ஆயிரம் தமிழர்கள் இத் தொகுதியில் குடியேறியுள்ளனர். எனவே தமிழரின் வாக்குகள் இத் தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் எனப் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

வில்சன் – றேபோல்டின் கதையும் ஏறத்தாழ இப்படித்தான். ஆனால் தமிழரின் வாக்குகள் அங்கு அதிகளவில் இல்லை. அவரது வான்கூவர் கிரான்வில் தொகுதியில் 46 வீதம் வெள்ளைக்காரர், 27 வீதம் சீனர், 6 வீதம் தென்னாசிய வாக்காளர் உள்ளனர். மீதி சுதேசிகள் எனலாம். பிரிட்டிஷ் கொலம்பியாவில் லிபரல், கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு அதிகளவு ஆதரவில்லை. என்.டி.பி., பசுமைக் கட்சிகளுக்குத்தான் ஆதரவு அதிகம். எனவே சென்ற தடவை வில்சன் – றேபோல்ட் தனது சுய பிரபலத்தலேயே தேர்வாகியிருந்தார் என அனுமானிக்கலாம். இந்த்த் தடவை அவரது தார்மீக ஆதரவுத் தளம் பலமாகியிருக்கிறது என்பதால் அவரது வெற்றி நிச்சயம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி தோல்வி

தேர்தல் விதிகளின்படி, ஒரு தொகுதியிலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அது தொகுதி வேட்பாளர்களின் செலவுத் தொகை வரையறுக்கப்படும். அந்த வகையில் ஜேன் ஃபில்பொட்டுக்கு $119,000 டாலர்களும் ஜோடி வில்சன்– ரெய்போல்டுக்கு $108,000 டாலர்களையும் உச்ச வரையறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இருவருமே இது தொகைகளுக்கு மேலதிகமாக அன்பளிப்பைப் பெற்றுள்ளனர். இங்கு எவ்வளவு பணம் சேர்க்கப்பட்டது என்பதை விட இதை அவர்களது செல்வாக்கின் அளவுகோலாகப் பாவித்தால் அவர்களது வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகம் எனவே காட்டி நிற்கின்றது.

முடிவில், இருவரினதும் வெற்றி தோல்விகளும் பிரதமரின் மீதான தீர்ப்பாகவே பார்க்கப்படும்.

Print Friendly, PDF & Email
>/center>