கனடிய தமிழர் பேரவையின் வருடாந்த நடைபவனி
தமிழ் இருக்கைக்காக $79,000 சேர்க்கப்பட்டது
கனடிய தமிழர் பேரவையினால் வருடந்தோறும் நடாத்தப்படும் நிதிசேர் நடைபவனி செப்டம்பர் 8ம் திகதி ஸ்காபரோ தொம்சன் பூங்காவில் நடைபெற்றது.
11 வது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்வில் $79,000 டாலர்களைப் பல நல்லுள்ளங்கள் தானம் செய்திருந்தனர். இவ்வருடம் சேர்க்கப்படும் நிதி கனடாவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான ரொறோண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையை நிறுவுவதற்காகச் செலவழிக்கப்படும் என கனடிய தமிழர் பேரவை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

மலேசியா, சிங்கப்பூர் தவிர்த்து, இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே அதிகமான தமிழர் வாழும் நாடாகக் கனடா திகழ்வதாலும், உலகத்தரம் வாய்ந்த ரொறோண்டோ பல்கலைக்கழகம் பல்லாயிரக்கணக்கான எமது சமூகத்தின் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைச் சிறப்பான கல்வியின் மூலம் செழுமைப்படுத்தி வருகின்றமையினாலும் அப் பல்கலைக்கழகத்திலேயே தமிழ் இருக்கை நிறுவப்படுவது சரியானதும், அவசியமானதுமென உணர்ந்த கனடாவாழ் தமிழ்ச் சமூகம் ஒன்று திரண்டு இந்த அன்பளிப்பை வழங்கியிருக்கிறது
நிறுவப்படவிருக்கும் தமிழ் இருக்கை, கனடாவுக்குப் புதியதும், முதன்மையானதுமாகும். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மொழியைப் பேணி வளர்ப்பதில் செயற்பட்டுவரும் இதர அமைப்புகளோடு இணந்து இத் தமிழ் இருக்கையும் உழைக்கும் என அதன் நிறுவனர்கள் தெரிவிக்கிறார்கள்.

பல்லினங்களையும் சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள் இந் நடைபவனியில் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள். பவனி முடிவில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் கனடிய தமிழர் பேரவையின் தலைவர் சிவன் இளங்கோ, ரொறோண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தைச் சேர்ந்த – உபதலைவரும் முதன்மை ஆசிரியருமான விஸ்டம் ரெற்றி, முந்நாள் மாணவர் விவகார நிறைவேற்றுப் பணிப்பாளர் லிசா லெமன், உயர் கல்விக்கான கனடியக் கல்லூரியின் தலைவர் டொனாற்றஸ் டொஸ், தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட், ரொறோண்டோ மாநகரசபை உறுப்பினர் ஜெனிபர் மக்கெல்வி, ரொறோண்டோ பல்கலைக்கழகத் தமிழ் மொழி விரிவுரையாளர் பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் உரையாற்றினர். இவ்வருட நடைபவனியின் ஒருங்கிணப்புத் தலைவர் ஜீவிதா புவிராஜசிங்கம் நன்றியுரையாற்றினார். அபிஷேகா லொயிட்சன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
இதர சமூகங்களின் பிரதினிதிகளும், ஊடகங்களும் பங்குபற்றி நடைபவனிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இன் நிதிசேர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த அனைவரும் பகிரங்கமாகக் கெளரவிக்கப்பட்டார்கள். இவ்வருட நடைபவனியின் முதன்மைப் புரவலராக உயர் கல்விக்கான கனடியக் கல்லூரி (Canadian College for Higher Studies) இருந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

இப் பவனியின்போது சேர்க்கப்பட்ட 100 % பணமும் மொத்தமாக ரொறோண்டோத் தமிழ் இருக்கைக்கே போய்ச் சேரும் எனக் கனடிய தமிழர் பேரவை உத்தரவாதமளிக்கிறது. தொடர்ந்தும் தமது பங்களிப்பைச் செலுத்த விரும்புவோர் அக்டோபர் 1ம் திகதி வரை, பின்வரும் தொடுப்பை அழுத்தி இணையத்தளத்தின் மூலம் செலுத்திக்கொள்ள முடியும்.
தமிழ்க்கனடிய நடைபவனி அன்பளிப்பு 2019
தமிழ்க் கனடியன் நடைபவனி பற்றிய மேலதிக தகவல்களுக்கு: www.tamilcanadianwalk.com
ரொறோண்டோ தமிழ் இருக்கை பற்றிய மேலதிக தகவல்களுக்கு: www.torontotamilchair.ca
கனடிய தமிழர் பேரவை பற்றிய மேலதிக தகவல்களுக்கு: www.canadiantamilcongress.ca