கனடிய தமிழர் பேரவையின் நிதிசேர் நடை பவனி -2021

கனடியத் தமிழர் பேரவை (CTC) பதின்மூன்றாவது வருடாந்த கனடியத் தமிழர் நிதிசேர் நடையை மேற்குறித்த நிதியத்துக்காக நிகழ்த்துவதைப் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த நடைபயணம் செப்ரெம்பர் 12, 2021 அன்று தொம்சன் பூங்காவில் நடைபெறும். இந்த நிதிசேர் நடையில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் கனடியத் தமிழர் பேரவை, கனடா முழுவதற்குமான தொலைதூர பங்கேற்பை ஊக்குவிக்கிறது.

இந்த ஆண்டு நிதிசேர் நடையில் கிடைக்கும் நிதி “கோர்ட் டவுனி மற்றும் சேனி வென்ஜாக் நிதியத்துக்கு” (DWF) வழங்கப்படும். கனடாவின் பூர்வீக குடிகளுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை இந்த நிதியம் ஊக்குவிக்கிறது. மேலும் இந்த நிதியம், கனடாவில் உள்ள பழங்குடி மக்களின் உண்மையான வரலாறு மற்றும் வதிவிடப் பள்ளிகளின் சரித்திரம், அவர்களது மரபு பற்றிய கல்வியைக் கற்க உதவுகிறது.

“ஒரு புலம்பெயர்ந்த சமூகமாக, பூர்வீக மக்களின் நிலங்களிலிருந்து நாம் அனைவரும் பயனடைந்தோம் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். கனடாவின் பூர்வீக குடி மக்களிடம் தோழமைக்கான கரங்களை நாம் நீட்டுவது எங்கள் பாக்கியம்,” என்கிறார் கனடியத் தமிழர் பேரவைத் தலைவர் சிவன் இளங்கோ.

இந்த நிதிசேர் நடையின் இணைத்தலைவர்கள், விதுசாயினி பரமநாதன் மற்றும் ரம்யா அமுதன் ஆகியோராவார்கள். கனடியத் தமிழ்ச் சமூகத்திற்கும் கனடாவின் பூர்வீக குடிகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான, மதிப்புடனான உறவுகளின் வாய்ப்புகளுக்காக உற்சாகத்தில் திளைத்திருக்கும் இளம் பெண்கள் இவர்கள். “கனடாவும், அதற்குள் வாழும் தமிழ் சமூகமும், மிகவும் தேவையான, நம்பிக்கையான, பூர்வ குடிகளுடனான உறவை உருவாக்க வேண்டுமென்று நாங்கள் நம்புகிறோம். எங்களைத் தங்கள் நாட்டிற்குள் வாழ அனுமதித்த பூர்வ குடி மக்களது பிரச்சினைகளைக் கேட்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. கடந்தகாலக் காயங்களை மீட்பது கடினம். நாம் கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே கேட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வது மேலும் கடினம். ஆனால் நாங்கள் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும், எனவே இங்கே தொடங்குவோம்.”

இந்த நிதிசேர் நடையை நடத்துவதன் மூலமும், DWF உடனான கூட்டினை உருவாக்குவதன் மூலமும் தமிழ்க் கனடியக் குடியேறிகளுக்கு, பூர்வீக குடிகளது இருண்ட, பயங்கரமான வரலாறு உணர வைக்கப்படுகிறது. பழங்குடி மக்கள் அனுபவித்த கொடுமைகள் அவர்களது நீடித்த போராட்டங்கள் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றிக் கனடியத் தமிழ் சமூகம் அறிய வேண்டியதும் இந்த நடைபயணத்தின் நோக்கமாக உள்ளது. கனடாவில் உள்ள வதிவிடப் பள்ளிகளில் அண்மையில் பூர்வ குடிச் சிறுவர்களது கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதால், கனடாவின் வரலாறு மற்றும் பூர்வ குடிகள் குறித்த நமது விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான கூட்டுப் பொறுப்பை அடையாளம் காணவும், நல்லிணக்கத்தை நோக்கிப் பூர்வ குடிச் சமூகங்களுடன் கனடியத் தமிழ் சமூகம் இணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்கவும் கனடியத் தமிழர் பேரவை தீர்மானகரமாக வலியுறுத்துகிறது.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், இதய மற்றும் பக்கவாத அறக்கட்டளை, போதை & மனநல மையம், மற்றும் சம்பூர் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை ஆதரிக்க கனடியத் தமிழர் பேரவை, நிதிசேர் நடைகள் மூலமாக நிதி திரட்டியுள்ளது. இந்த ஆண்டு, கனடாவின் கடந்த காலத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலமும், கனடியர்களை நல்ல எதிர்காலம் ஒன்றை உருவாக்க ஊக்குவிப்பதன் மூலமும், அனைத்துக் கனடியர்களுனான தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் பூர்வ குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான குறிக்கோளில் கனடியத் தமிழர் பேரவை வலுவாக உள்ளது.

“கனடியத் தமிழர் பேரவையின் ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று கோர்ட் டவுனி & சேனி வென்ஜாக் நிதியத்தின் தலைவரும், நிறைவேற்றுச் செயலருமான “சாரா மிட்டானிக்” கூறினார். “கனடாவின் உண்மையான வரலாற்றைக் கற்றுக்கொள்ள கூடுதலான மக்களுக்கு அவர்கள் உதவுகிறார்கள். எனவே நாங்கள் அனைவரும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை முன்னோக்கி நகர்த்திச் சிறந்த முறையிலான கனடா தேசத்தை உருவாக்க முடியும்.”

நிகழ்வு: பதின்மூன்றாவது ஆண்டு கனடியத் தமிழர் நிதி சேர் நடை
தேதி: செப்ரெம்பர் 12, 2021 ஞாயிற்றுக்கிழமை
இடம்: தொம்சன் பூங்கா, ஸ்காபுரோ
பதிவுத் தொடக்கம்: காலை 8:30 மணிநிகழ்வு ஆரம்பம் : காலை 9:30 மணிநடைபயணம் : காலை 10 மணி

இத்திட்டத்துக்கு நிதி பஙகளிப்பு செய்ய:
https://www.canadahelps.org/en/pages/tamil-canadian-walk-2021/
நிகழ்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு: www.tamilcanadianwalk.ca

ஊடகத் தொடர்புகளுக்கு:ரம்யா அமுதன், இணைத் தலைவர்,2021 தமிழ்க் கனடிய நடைபயணம்647-680-4814info@canadiantamilcongress.ca