News & AnalysisSri Lanka

கனடிய உயர் ஸ்தானிகர் நியமனத்தை நிராகரித்த சட்டமா அதிபர் டப்புல டெ லிவேரா

இலங்கையின் தற்போதய சட்டமா அதிபர் டப்புல டெ லிவேரவின் கடமை இம்மாத இறுதியில் நிறைவுக்கு வருகிறது. இதையொட்டி அவரைக் கனடாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்க ஜனாதிபதி ராஜபக்ச விரும்பியதாகவும் சட்டமா அதிபர் அதை நிராகரித்துவிட்டதாகவும் சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகளை மேற்கோள் காட்டி கொலொம்பொ கசெட் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டமா அதிபரது பதவிக் காலம் 2 வருடங்களாகும். மே 2019 இல் பதவியேற்ற டெ லிவேரவின் பதவி மே மாதம் 2021 இல் முடிவடைகிறது. அவரது பதவிக் காலத்தில் 27,206 குற்ற வழக்குகளை நடத்தி முடித்திருக்கிறார்.

கொழும்பு செய்ண்ட் ஜோசெப்ஸ் கல்லூரி, கண்டி செயிண்ட் அந்தனீஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற டெ லிவேர, இலங்கை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றபின் 1984 இல் சட்டவாளராகப் பதவிப் பிரமாணம் எடுத்திருந்தார்.

எவருக்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக முடிவுகளை எடுப்பவர் எனப் பலதரப்பாரதும் மதிப்பைப் பெற்றுள்ள டெ லிவேரா “நான் இலங்கையை விட்டு எங்கேயும் போகப் போவதில்லை. நான் இங்கிருந்துகொண்டு எனது மக்களுக்குச் சேவை செய்வதையே விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

டப்புல டெ லிவேரவின் துணைவியார் மரினி யும் ஒரு சட்டத்தரணியாவார். குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான வழக்குகளில் பணம் வாங்காது வழக்குப் பேசுபவர். நாடு முழுவதும் பயணம் செய்து, தனது அரங்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைப் பாதுகாப்பு விடயங்களைப் பற்றிப் போதித்து வருபவர். 2019 இல் அவருக்கு ‘சர்வதேச துணிச்சலான பெண்’ விருதை மெலானியா ட்றம்ப் வழங்கியிருந்தார்.