ArticlesCanadian Historyசிவதாசன்

கனடிய அரசியல் முறை

சிவதாசன்


ஜனநாயகத்திற்கு வயது 2500 வருடங்கள் என்கிறார்கள். ஆனால் இன்னும் புரியப்படாத மர்மங்களில் அதுவும் ஒன்று. புரியாத, வழக்கொழிந்த லத்தின் மொழியில் ‘டெமோஸ்’ (Demos) என்பது மக்களையும் ‘கிராட்டோஸ்’ (Cratos) என்பது ஆட்சியையும் குறிக்கிறதாம்.

எப்படியாயினும், ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் முறை (Political System). இந்த சுய நிர்வாக அரசு மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதும் அப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கென ஒரு வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதும் மக்களை நிர்வகிக்கவென சட்டங்களை உருவாக்குவதும் வளங்களைப் பகிர்ந்து கொள்வதும் எனப் பல நடைமுறைகளை ஒருங்கிணைத்துச் செயற்படும் அரசியல் முறைக்கு கொடுக்கப்பட்ட பெயர் பாராளுமன்ற ஜனநாயகம். எப்படி ஆனாலென்ன அந்த ஜனநாயகம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக வாழ்கிறது.

கனடா

கனடா அமெரிக்காவைப் போல் ஜனநாயக நாடாக இருந்தாலும் இன்னும் பிரித்தானிய மகாராணியின் (முடியின்) பதாங்கமாகச் செயற்படுவதால் அதை Constitutional Monarchy என வர்ணிப்பார். மகாராணியின் நேரடி பிரசன்னம் இல்லாத போது அவரின் பிரதிநிதியாக காலனித்துவ நாடுகளில் ஆட்சி செய்தவர்கள் ஆளுநர்கள் எனப்பட்டனர். உலக ஒழுங்குகளின் தொடர்ச்சியான பரிணாம மாற்றத்தின் வெளிப்பாடாக கனடாவும் தன குடியாட்சியை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வந்தது. அதற்கான முதல் நடவடிக்கை ஒரு யாப்பு ஒன்றை உருவாக்கித் தம்மைத் தாமே ஆளுவதற்கான நடைமுறைகளை எழுத்தில் வரைந்தனர். இதுவே 1867 இல் வரையப்பட்ட கனடிய சாசனம். இதன் பின்னர் இவ்வாளுனரின் அதிகாரம் குறைக்கப்பட்டு வெறும் சம்பிரதாய ஆளுனராக மாற்றப்பட்டார்.

மக்கள் தொகை அதிகரித்து நிர்வாகம் சிக்கலாகியபோது அதிகாரங்களைப் பரவலாக்கி மக்கள் குழுமங்களை பிரதேச ரீதியாக வகுத்து இன்றைய மாகாணங்கள் அல்லது மாநிலங்கள் (Provinces) , மற்றும் பிரதேசங்கள் (Territories) என நிர்வாக மாற்றங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களின் அதிகாரப் பரவலாக்கத்தின் விளைவுகளே நகரசபைகள்.

இதே வேளை மத்திய மாநில அரசுகள் உருவாகுவதற்கு முன்பே வாழ்ந்த சமூகக் குழுமங்களை அதிக பலமுடைய இதர குழுமங்களும் ஆட்சிகளும்  ஒன்றிணைத்து மேலும் பலமுடைய சபைகளாகவும் அரசுகளாகவும் மாற்றிக் கொண்டன. (இலங்கையில் தமிழ் அரசுகளையும் சிங்கள அரசுகளையும் இணைத்தது போல). பிரித்தானிய, பிரஞ்சு ஆதிக்கம் அதிகமிருந்த காலனிகள் பல கனடிய டொமினியனில் சேர்க்கபட்டு மாநிலங்களாக மாற்றமடைந்தன. நியூபவுண்லாந்து மாநிலமே இறுதியாகச் சேர்க்கப்பட்டது.

கனடாவைப் பொறுத்த வரையில் நிர்வாகப் பரவலாக்கத்தின் இன்றைய வடிவமே மூன்று நிலை அரசுகள்: நகர அல்லது மாநகர சபை – மாநில அரசு – மத்திய அரசு. கனடாவில் உள்ள பதினான்கு அரசாங்கங்கள் (மத்திய அரசு உட்பட்டு), பல பாராளுமன்றங்கள், சட்ட வரைமுறைகள், பொது சேவைகள் என்பனவற்றில் தத்தம் எல்லைகளுக்குள் நின்று செயற்படுகின்றன. இருப்பினும் சில அதிகாரங்களை நிர்வகிப்பதில் மத்திய மாநில அரசுகள் பங்காளிகளாகச் செயற்படுகின்றன. நாட்டின் வளங்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவற்றின் பலன்களை ஒவ்வொரு மக்களும் பாகுபாடின்றி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இந்த மூன்று நிலை அரசுகளும் பல உடன்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. அதிகாரங்கள் வரையறைப் படுத்தப்பட்டன. பகிரப்பட்டன. எழுத்தில் வார்க்கப்பட்டன. இந்த எழுத்துக் கோவைக்கு அரசியல் சாசனம் (Constitution) எனப் பெயரும் இடப்பட்டது.

கனடாவின் ஆதிக் குடிகள் பிறிதொரு ஆட்சி முறையை வரித்துக் கொண்டிருந்தாலும் அவர்களிடையேயும் ஜனநாயக மரபு பேணப்பட்டு வந்தது என வரலாற்றியலாளர் சொல்கிறார்கள். வந்தேறு குடிகள் தம்மைத் தாமே ஆள்வதற்கெனப் புதியதொரு முறையை உருவாக்காது ஏற்கெனவே வழக்கிலிருந்த பிரித்தானிய முறையைப் பின்பற்றினார்கள். இதற்கு வெஸ்ட்மினிஸ்டர் சிஸ்டம் (Westminster System) என்று பெயர். தாம் இன்னமும் முடிக்குரிய பரம்பரை என்பதை அவர்கள் இதனால் உறுதி செய்து கொண்டனர். கனடாவின் வளங்கள் அப்போது முடிக்குரியவையாகவே இருந்தன. எனவே அவற்றைப் பகிர்வதற்கென உருவாக்கும் சாசனமும் முடியின் ஒப்புதலின்றி நடைமுறைப்படுத்தப்பட முடியாது என்றொரு நிலை இருந்தது.இச் சாசனத்தை உருவாக்குவதன் மூலம் 1867 இல் கனடாவை ஒரு தனி நாடாக முடி (பிரித்தானியா) அங்கீகரித்தது.  பின்னர் 1982 இல் பியர் ட்ரூடோ (1968-1979 / 1980-19840) பிரதமராக இருந்தபோது சாசனம் திருத்தி எழுதப்பட்டது. எழுபதுகளுக்கு முன்னர் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இனத்துவேஷம் மிகவும் கடூரமாக இருந்தது. வெள்ளை இன மக்களின் குடிவரவினை கனடா ஊக்கப் படுத்திய அதே வேளை வேல்லையரல்லாதோரின் குடிவரவிற்கு தடங்கல் செய்து வந்தது. இதன் பின்னர் வந்த லிபரல் அரசுகள், குறிப்பாக கனடாவின் பதினான்காவது பிரதமராகவிருந்த லெஸ்டர் பியர்சன் (1963-1968) மற்றும் பியர் ட்ரூடோ போன்றவர்கள் குடி வரவுக் கொள்கைகளில் செய்த மாற்றங்களால் வெள்ளையரல்லாதவர்களின் குடிவரவு இலகுவாக்கப்பட்டது. ஈழத்தமிழர்களாகிய எமது இரண்டாவது தாயகமாக கனடாவை அமைத்துக்கொள்ள இவர்களே வழிசமைத்துத் தந்தவர்கள்.

பியர் ட்ரூடோ அரசினால் திருத்தி எழுதப்பட்ட சாசனத்தில் முக்கியமான அம்சம் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்குமான பட்டயம் (Charter of Freedoms and Rights).  இச் சாசனத்தின் உள்ளடக்கம் பற்றி எழுத இப்பக்கங்கள் போதாது. ஆனால் கனடிய மக்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி சமத்துவமாக வாழ்வதற்கும், அரசியலில் பங்கு கொள்வதற்கும், கருத்துக்களைச் சுதந்திரத்தோடு வெளிப்படுத்துவதற்கும் சகல உரிமைகளையும் இச் சாசனம் வழங்குகிறது. அத்தோடு கனடாவின் எந்தவொரு குடிகளும் அரசினாலோ (மூன்று நிலை) அல்லது தனிப்பட்ட நிறுவனங்களினாலோ பாதிக்கப்படும் பட்சத்தில் அக்குடிகள் நீதி கேட்டுப் போராடும் உரிமையை மக்களுக்கு இப்பட்டயம் வழங்குகிறது (Charter Challenge).  அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கனடாவுக்கு ஒரு தார்மீக முகத்தை இது பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஒரு ஜனநாயக அரசு திறமையாகச் செயற்படச் சில கட்டமைப்புகள் முக்கியம். அரச நிர்வாகத்திற்குட்படாத அரசைக் கேள்விக்குட்படுத்தப்படக் கூடிய நீதி பரிபாலனம் இதில் முக்கியமான ஒன்று. சீரான நிவாகத்துக்கான சட்டங்களை உருவாக்குவது அரசின் கடமை ஆனால் அச் சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வௌ;வேறு திணைக்களங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. நிர்வாகம் பரவலாக்கம் பெறும்போது ஒவ்வொரு நிர்வாக அலகும் தத்தம் மக்கள் தேவைகளுக்கேற்ப சட்டங்களைத் தோற்றுவித்து நிர்வகிக்கவும் செய்கின்றன. இப்படியான நிர்வாக அலகுகளே மூன்று நிலை அரசுகள் என நான் இங்கு குறிப்பிடுவது.

மூன்று நிலை அரசுகள் (1) மத்திய அரசு (2) மாகாண அரசு (3) நகர அல்லது மாநகர அரசு

கனடாவில் பத்து மாநிலங்களும் மூன்று அதிகாரப் பிரதேசங்களும் இருக்கின்றன. இவற்றோடு சேர்த்து மத்திய அரசு பதினான்காவது அரசு ஆகிறது.

சட்டம் ஒழுங்கு

மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் அனைத்தும் இம் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் அனைத்திலும் பிரயோகப்படும். அதே வேளை மாநிலங்களும் பிரதேசங்களும் தத்தம் தேவைகளுக்கேற்ப சட்டங்களை இயற்றலாம். இவற்றின் அதிகாரங்கள் எல்லைகளைத் தாண்ட முடியாது. ஆனால் நகர சபைகளின் அதிகாரங்களை மாநில அரசுகள் தேவையேற்படின் மேற்பார்வை செய்ய அதிகாரமுண்டு.சமீபத்தில் டொரோண்டோ நகரபிதாவின் ஒழுக்காற்று நடவடிக்கையில் மாநகரசபை செயலாற்ற முடியாமல் போகலாம் என்ற நெருக்கடி எழுந்தபோது ஒன்;டாரியோ முதலமைச்சர் தலையிட வேண்டுமென்ற குரல்கள் எழுந்தன. அதற்கான அதிகாரம் இருந்தபோதும் முதலமைச்சர் அதைப் பிரயோகிக்காமல் நகரசபையே தன் விடயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டுமெனச் சொல்லி விட்டார். இதுதான் உண்மையான மக்களாட்சியின் வெளிப்பாடு.

கல்வி, சுகாதாரம், இயற்கை வளங்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் என்பன

மாநில, பிரதேச ஆளுமைக்குட்பட்டிருப்பினும் சில சந்தர்ப்பங்களில் இவை மத்திய அரசின் நிர்வாக எல்லைக்குள்ளும் இயங்கவேண்டி ஏற்படலாம். இரண்டு அரசுகளும் சம்பந்தப்படும் விவகாரங்களை ‘பொது விடயங்கள்’ எனவும் மாநிலம் சம்பந்தப்படும் விவகாரங்கள ‘உள்ளூர் விவகாரங்கள்’ எனவும் சாசனம் பிரித்துக் காட்டுகிறது. இருப்பினும் மத்திய அரசு தனது ‘எச்ச அதிகாரங்களால்’ (residual powers) தேவை வரும்போது மாநிலங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க சாசனம் இடம் தருகிறது. (அமெரிக்காவில் மாநிலங்களே மத்திய அரசின் மீது எச்ச அதிகாரங்களைச் செலுத்துகின்றன!)

ஆதிக் குடிகள் விடயத்தில் இச்சமூகங்களை நிர்வகிக்கவென தனித்தனி கவுன்சில்கள் அமைக்கப்படுகின்றன. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்படும் இக் கவுன்சில்களும் நகர சபைகளைப் போலவே இயங்குகின்றன.

மூன்று  நிலை அரசுகளின் அதிகாரங்கள்:
மத்திய அரசு:

மத்திய அரசு மக்களாட்சி முறைமையில் தெரியப்பட்டிருந்தாலும் முடியின் (பிரித்தானிய அரசி) அதிகாரம் இன்னும் பெயரளவில் தொடர்கிறது. முடியின் பிரதிநிதியாக ஆளுநர் நியமிக்கப் படுவார். முடியினால் நியமிக்கப்பட்டு வந்த இந்த ஆளுநர் 1952 முதல் கனடிய பிரதமரால் நியமிக்கப்பட்டு வருகிறார். முடியின் விவகாரங்களை இங்கு கவனித்து வருவதும் பிரதமருக்கு பாராளுமன்ற விவகாரங்களில் ஆலோசனை கூறுவதும் மட்டுமே இவரது பணி. மத்திய அரசின் அதிகாரங்கள்: தேசியப் பாதுகாப்பு , வெளியுறவு , வேலைக் காப்புறுதி , வங்கிகள் , மத்திய வரியிறுப்பு , அஞ்சல் , மீன்பிடி , தொலைபேசி, பொதி வண்டிகள், விநியோகக் குழாய்கள் , ஆதிக் குடிகளின் உரிமைகள், நிலப் பகிர்வுகள் , குற்றவியல்

கனடாவின் வளப் பகிர்வும் குடிகளிடையே சமத்துவத்தைப் பேணுவதும் மத்திய அரசின் முக்கிய கடமைகள். ஒவ்வொரு மாநிலங்களிலுமுள்ள மக்களும் கனடிய குடிகளே என்ற வகையில் அவர்களிடையே சமத்துவத்தைப் பேணுவது மத்திய அரசின் சாசனக் கடமைகளில் ஒன்று. ஆனால் கனடிய மாநிலங்களில் ஒன்டாரியோ, அல்பேர்ட்டா போன்றன வருவாய் கூடியனவாகவும் நியூபவுண்லாந்து, நியூ பிரண்ஸ்விக் போன்றன வறுமை கொண்டனவாகவும் உள்ளன. இதைச் சமப்படுத்த மத்திய அரசு பணக்கார மாநிலங்களிடமிருந்து தீர்வைகளை அறவிட்டு ஏழை மாநிலங்களுக்குக் கொடுக்கிறது. அதே வேளை கல்வி, மருத்துவ சேவைகள் போன்ற துறைகளிலும் ஏழை- பணக்கார மாகாணங்களில் சமத்துவத்தைப் பேணுவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. கனடிய சாசனச் சட்டங்கள் (1867, 1982) இதற்கான அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்குகின்றன.

நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு, குடிவரவு, மீன் பிடி  போன்ற  விவகாரங்கள் மாநில எல்லைகளைத் தாண்டி அமுலாக்கம் பெறுவதனால்  மத்திய அரசு அவற்றைத் தன் அதிகாரத்துக்கு உட்பட்டதாக வைத்துக் கொண்டுள்ளது.மாநில அரசு:

மாநிலங்களின் அதிகாரங்கள் • நேரடி வரியிறுப்பு • மருத்துவ சேவைகள் • சிறைச் சாலைகள் • கல்வி • திருமணம் • நிலவுரிமைஃ குடியுரிமை

மாநில அரசுகள் ஒரு வகையில் எமது பண்டைக்கால சிற்றரசுகள் போன்றே இயங்குகின்றன. தமது வரவு செலவுகளையும் தமது குடிகளின் நல்வாழ்வையும் முன்னிறுத்தி தமது கொள்கைகளையும் சட்டங்களையும் வரித்துக் கொள்கின்றன. கனடாவில் கியூபெக் மாகாணத்திற்கும் ஏனைய மாகாணங்களிற்கும் முக்கிய வேறுபாடுண்டு. கியூபெக்கில் சிவில் சட்டமும் (ஊiஎடை டுயற) நயெலையஏனைய மாகாணங்களில் பொதுச் சட்டமும் (ஊழஅஅழn டுயற) வழக்கத்தில் இருக்கின்றன. இது பற்றிய விளக்கங்களை பின்னர் பார்க்கலாம்.

மருத்துவ சேவைகள், கல்வி, நிலவுரிமை மற்றும் காணிப் பதிவுகள் போன்ற விடயங்களில் மக்களுக்கு உகந்த சட்டங்களை இயற்றி சீரான நிர்வாகத்தை மேற்கொள்ளுகின்றன. இதற்கு ஈடாக மக்களிடமிருந்து பல வழிகளிலும் வரிகளை அறவிட்டு மத்திய அரசைப் போலவே வரவு செலவு நிர்வாகங்களை மேற்கொள்ளுகின்றன.

இதே வேளை கனடியக் குடிமக்கள் கனடாவின் எந்தவொரு மாநிலத்திலும், பிரதேசத்திலும் இறைமையுடன் வாழ்வதற்கான உரிமையை கனடிய சாசனப் பட்டயம் உறுதி செய்கிறது. கியூபெக் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களும் , பிரதேசங்களும் தமது குடிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அற்றவை. கனடிய குயுரிமை அல்லது வதிவுரிமை அல்லது தற்காலிக வாழிட உரிமைகளைக் கொண்ட எவரும் எந்த மாநிலங்களிலும் வாழ மத்திய அரசு அனுமதியளிக்கிறது. கியூபெக் மாகாணம் தனது பிரஞ்சு மொழி மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பேணுவதற்காக தாம் விரும்பிய வகையில் குடிவரவாளர்களைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. ஆனால் அவ்வாறு குடியுரிமை பெற்றவர்கள் நாட்டின் எந்தப் பிரதேசங்களிலும் வாழ சாசனம் அனுமதி தருகிறது.

அனேகமாக எல்லா ஆட்சிப் பிரதேசங்களிலும் மக்களாட்சி நடைபெறுவதால் ஒரு நிலை ஆட்சி தனது அதிகாரங்களை இன்னுமொரு நிலை ஆட்சியின் மீது பிரயோகிக்கும் தேவை எழுவதில்லை. உதாரணமாக மாநில ஆட்சி எப்படி அமைய வேண்டும் யார் முதலமைச்சராக வரலாம் என்பது போன்ற விடயங்களில் மத்திய அரசு தலையிடுவதில்லை. ஆனால் ஆட்சியினதோ அல்லது சட்ட மன்ற உறுப்பினரினதோ கால எல்லைகளை விஸ்தரித்தல் போன்ற விடயங்களில் மத்திய அராசு அதிகாரம் செலுத்துகிறது.

மத்திய அரசிப் போலவே மாநில அரசுகளும் தமது சாசனத்தை உருவாக்கவும் திருத்தவும் அதிகாரமுண்டு. ஆனால் முடியின் பியாதிநிதியாகிய லெப்டினன்ட் கவர்னரை மாற்ற முடியாது.

நகரசபை

நகரசபைகளை உருவாக்குதல், இணைத்தல், பிரித்தல், ஒழுக்காற்று நடவிடைக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல அதிகாரங்களை அந்நகரசபைகளை உள்ளடக்கிய மாநகரசபைகள் கொண்டுள்ளன. இது தொடர்பான சட்டங்களை உருவாகும் அதிகாரத்தை 1867 சாசனச் சட்டம் வழங்குகிறது. கனடாவின் முதல் நகரசபை நியூ பிரண்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயின்ட் ஜோன் நகரம் (1875).

நகர சபைகளின் அதிகாரங்கள்

மாகாணங்கள், பிரதேசங்கள் என்ற நிலப் பரப்புகளுக்கு உட்பட்ட இடங்களில் அதிகாரப் பரவலாக்கம் நகர, மாநகர, கிராமிய மட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது. சிறிய மக்கள் குழுமங்கள் முதல் பாரிய குழுமங்கள் வரை வாழ்வதற்கேற்ப நகர் நிர்மாணம், வழங்கல் சேவைகள், பொழுது போக்கு வசதிகள், நகர் காவல் போன்ற விடயங்களை நிர்வகிக்கும் பொறுப்பு நகர சபைகளுக்கு மாநில அரசுகளால் வழங்கப் படுகிறது. இன் நிர்வாக நடவடிக்கைகளுக்கான நடைமுறைச் செலவுகளுக்காக இச் சபைகள் குடிமக்களிடமிருந்தும், வர்த்தக நிறுவனங்களிடமிருந்தும் வரிகளை (சோலை வரி) அறவிடுகிறது. உள்ளக நிர்மாண நடவடிக்கைகளுக்கான செலவுகளை மாநில, மத்திய அரசுகள் அவ்வப்போது வழங்குகின்றன.இச் சேவைகளை நிர்வகிப்பதற்குத் தேவையான உப-சட்டங்களை (by-laws) உருவாக்கும் அதிகாரம் நகரசபைகளுக்கு உண்டு. இவ்வுப சட்டங்களுடன் மாநில அரசுகள் உடன்படாத பட்சத்தில் அவற்றை மாற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு. உதாரணமாக ஒன்டாரியோவில் சில கட்டிட வேலைகள் குறித்த விண்ணப்பங்களை உப-சட்ட விடிமுறைகைளைக் காட்டி நகரசபை ஒன்று நிராகரிக்கும் போது ஒண்டாரியோ மாகாணத்தின் முனிசிப்பல் சபையிடம் விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம்.

காவற்துறை, தீயணைப்பு போன்ற அதிகாரங்கள் மாநகர அந்தஸ்து உள்ள சபைகளுக்கு உண்டு. சிறிய சபைகளின் அதிகார எல்லைகளுக்குள் இப் பணிகளை மாநில அரசுகளும் பொறுபேற்பதுண்டு.

இதே போல மாநிலங்களை ஊடறுத்துச் செல்லும் பெருந்தெருக்களை நிர்வாகிக்கும் பொறுப்பு (ஒண்டாரியோ, கியூபெக் -401 நெடுஞ்சாலை) மத்திய அரசிடமும் இதர தெருக்கள் நகரசபைகளின் நிர்வாகத்திலும் உள்ளன. ஒண்டாரியோ சுரங்க ரயில் டொரோண்டோ மாநகரசபையின் அதிகாரத்துள்ளும் ‘கோ’ (GO – Goverment of Ontario) ரயில், பஸ் சேவைகள் ஒண்டாரியோ அரசின் நிர்வாகத்திலும் இயங்குகின்றன. சுரங்க ரயிலின் கட்டுமானப் பணிகளுக்கு மாநில அரசும் சில வேளைகளில் மத்திய அரசும் உதவுகின்றன.

எனவே பல வழிகளில் மூன்று நிலை அரசுகளினதும் ஒருங்கிணைந்த  செயற்பாடுகள் சுமுகமான நிர்வாகத்துக்கு அவசியம்.

சுதேசிய சபைகள் (Band Councils)

கிராமிய மட்டங்களில் வதிபவர்கள் பெரும்பாலும் சுதேசிகளாகவோ, சுதேசியக் கலப்பினராகவோ இருப்பது வழக்கம். மத்திய அரசு இவர்களுக்குப் பல வழிகளிலும் உதவிகளைச் செய்து வந்த போதிலும் அவர்களது வாழ்வில் அதிக தலையீடுகளைச் செய்வதில்லை. சுதேசிகள் தம்மை நிர்வகிப்பதற்கென சபைகளை (Band Councils) உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கான நிதியுதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த மூன்று நிலை அரசுகளையும் ஒரு நிர்வாக அலகாக இணைக்கும் இழை ஜனநாயகமே. மக்கள் குழுமங்களாக மாற்றம் பெறும்போது இயல்பாகவே எழக்கூடிய முரண்பாடுகளைக் கழைந்து சமரசத்தைப் பேணும் பொருட்டு மக்களின் பிரதிநிதிகள் கூடிப் பேசும் மன்றங்களாக இந்த அரசுகளும் சபைகளும் இயங்குகின்றன. இப் பிரதிநிதிகளின் தேர்வுகள் கால வரையறைகளோடு அமைவதால்  மக்களின் விருப்பு வெறுப்புகளை அனுசரித்துப் போகாத பிரதிநிதிகள் காலாவதியாக்கப்படுகிறார்கள்.