ArticlesColumnsUS & Canadaசிவதாசன்

கனடிய அரசியல் | பிரதமர் பிழைத்துக்கொள்வாரா?

Photo Credit: Trendsmap.com

யாராவது சோதிட வல்லுனர்கள் இருந்தால் சொல்லுங்கள் , பிரதமர் ட்ரூடோ தற்போதய சூறாவளியிலிருந்து தப்பிப் பிழைப்பாரா? பத்தாமிடத்தில் விழானா? பதி கை மாறுமா?

பாவம் நமது செல்பி இளவரசர். ஆட்சிக்கு வந்தபோது உலகம் முழுவதும் ஆவென்று பார்த்தது. இளசுகள் பிரதிஷ்டை செய்தன. உலகத்தை இளைய தலைமுறை கைப்பற்றப் போகிறது என்னுமாப்போல் சமூக வலைத் தளங்களில் புரட்சி வெடித்தது. இப்போ? யார் பட்ட கண்ணோ ஸ்மார்ட் போன்கள் ஒளியிழந்து களையிழந்து குப்புறக் கிடக்கின்றன.

‘App’இலே தோய்த்(த) டித்தடித்து நாளுமதைத் தப்பினால் நம்மையது தப்பாதோ… என்ற இரட்டைப் புலவரின் அங்கி ஆற்றோடு போன கதை மாதிரித் தான்.

Let’s be serious.

ட்ரூடோ, எமது பிரதமர். அவரது நடவடிக்கைகள், தொடர்ந்தும் அவரது முன்னை நாள் நாடக ஆசிரியர் தொழில் போலவே இருக்கிறதென்றாலும், அவர் இப்போது எமது பிரதமர். அரசியல்வாதியின் குணங்கள் அவற்றை மாற்றியிருக்கலாம் என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எல்லோருக்கும் ஒன்று தெரிகிறது பிரதமரின் சட்டைக்குள் ஒரு ஓணான் குடும்பமே துளைத்தெடுக்கிறது என்று.

தமிழ் மரபுக் கொண்டாட்டங்களில் பக்கத்து வீட்டுப் பையனைப் போலப் பவ்வியமாக வந்து போன நமது பிரதமரைக் கண்டு பரவசப்பட்டு நின்ற வெளிநாட்டுத் தமிழர்களுக்கு ஒரு கதைச் சுருக்கம் தேவை.

ஜோடி வில்சன்-றேபோ ஒரு சுதேசியக் கனடியப் பெண். அரசியலுக்கு வருமுன் அவர் ஒரு வழக்கறிஞர். ட்ரூடோ ஆட்சிக்கு வந்தபோது வான்கூவர்-கிரான்வில் தொகுதியில் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராகி நீதி அமைச்சராக நியமனமும் பெற்றார். கனடாவின் நீதிபரிபாலனத்திற்கு அவரே பொறுப்பு. பிறப்பால் ட்ரூடோ எப்படி ஒரு இளவரசராக (இவரது தந்தையார் முன்னாள் கனடிய பிரதமர்) இருந்தாரோ அதே போல் ஜோடியின் தந்தையார் பில் வில்சன் என்பவரும் சுதேசிகளின் தேசியத் தலைவராக இருந்தவர். தந்தை ட்ரூடோ 1982 இல் கனடிய அரசியல் யாப்பை உருவாக்கியபோது அவரோடு சமராடி சுதேசிகளின் உரிமைகளை யாப்பில் நிரந்தரமாகப் பதித்தவர் வில்சன். அதனால் ஜோடியும் ஒரு வகையில் இளவரசி தான்.

National Chief Bill Wilson       Photo Credit: CBC.ca

கடந்த சில நாட்கள் / வாரங்கள் / மாதங்களாக பிரதமர் அலுவலகத்துக்கும் ஜோடிக்குமிடையில் கொஞ்சம் உரசல்கள் என்கிறார்கள். இதன் காரணமாக கடந்த சில வாரங்களின் முன்னர் ட்ரூடோ தனது அமைச்சரவையை மீளொழுங்கு செய்த போது ஜோடியின் பலமான நீதி அமைச்சர் பதவியிலிருந்து அவரை இறக்கி ஓய்வுபெற்ற படையினருக்கான அமைச்சராக (நமது பழைய நாட்டில் தபால் தந்தி அமைச்சைத் தமிழருக்குக் கொடுப்பது போல்) நியமித்தார். இது தான் இவ்விருவருக்குமிடையில் தெரிந்த முதற் புகை. பின்னர் ஏதோ ஒரு வகையில் கனடாவின் தேசியப் பத்திரிகைகளில் ஒன்றான ‘குளொப் அண்ட் மெயில்’ அப் புகையின் மூலாதாரமான நெருப்பைக் காட்டிவிட்டது. கடந்த சில நாட்களில் ஜோடி தன் புதிய அமைச்சுப் பதவியையும் இராஜினாமாச் செய்துவிட்டார். நெருப்பு பற்றி எரிகின்றது. எதிர்க்கட்சிகளும் ஜோடியின் நண்பர்களும், கனடிய சுதேசிகளும், ட்ரூடோவின் கட்சியிலுள்ள அவரது ‘நண்பர்களல்லாதோரும்’ தம் பாட்டுக்கு எண்ணையை ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது வரைக்கும் தீயை அணைக்கும் முயற்சியில் ட்ரூடோ தோற்றுப் போனது மட்டுமல்ல அவரது வாயும் காற்றை ஊதி நெருப்பை மேலும் வளர்த்துக்கொண்டுதானிருக்கிறது.

உரசலுக்குக் காரணம்

எஸ்.என்.சீ. லவலான் (SNC Lavalin) என்பது மொன்றியாலைத் தளமாகக் கொண்ட கனடிய பொறியியல் நிறுவனம். உலகம் முழுவதும் பல கட்டுமானக் குத்தகைகளை எடுத்து கனடாவுக்கும் நிறுவன முதலாளிகளுக்கும் பெரும் தொகையான வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் நிறுவனம். மற்றய குத்தகைக் காரர்கள் போல் இன் நிறுவனமும் குத்தகைகளை எடுப்பதற்காக இலஞ்சம் / கையூட்டு / மாமூல் கொடுப்பது வழக்கம். லிபியா நாட்டில் கடாபி ஆட்சியில் இருந்தபோது இலஞ்சம் கொடுத்த விவகாரம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. வழக்கு நீதிமன்றத்துக்குப் போவதில் தாமதம் ஏற்பட்டது மட்டுமல்லாது,  நிறுவனம் தோல்வியைத் தழுவும் என்பதும் உறுதியானபோது தண்டத்தைச் செலுத்தி அவசரமாக வழக்கை முடித்துவிட நிறுவனம் விரும்பியது. அதற்கான அதிகாரம் முழுவதும் ஜோடி வில்சன்-றேபோ வின் அமைச்சின் கீழ்தான் இருந்தது. அவரை வசப்படுத்த நிறுவனம் பலவழிகளில் முயன்று தோற்றுப் போனது. தமது முயற்சியில்  சற்றும் தளராத நிறுவனம் பிரதமரின் அலுவலகத்தில் பணி புரியும் சர்வ வல்லமை பொருந்திய பணியாளர்கள் மூலம் அழுத்தத்தைப் பிரயோகித்தது. அமைச்சர் மசியவே இல்லை. அதனால் தான் அமைச்சரைப் பிரதமர் பதவியிறக்கம் செய்துவிட்டு கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை நீதி அமைச்சர் ஆக்கினார். லிபரல் கட்சியின் தேர்தலுக்காக இந்த நிறுவனம் $100,000 டாலர்களுக்கு மேலாக அன்பளிப்புச் செய்திருந்தது என்பதை இங்கு பெரிது படுத்தத் தேவையில்லை, ஏனெனில் இதர கட்சிகளுக்கு எப்படியான தொகைகள் போய்ச் சேர்ந்தது பற்றிய விபரம் இன்னும் தெரியாது என்பதால்.

தீயணைப்பு முயற்சிகள்

ஜோடி பதவியிறக்கப்பட்ட போதே புகை கிளம்பியதாயினும் நெருப்பு இப்போதுதான் சுவாலை விட்டு எரிகிறது. எதிர்க் கட்சிகள் எண்ணைப் போத்தல்களோடும் சுளகுகளோடும் நாளும் பொழுதும் வட்டம் போட்டு நிற்கிறார்கள். ஊடகங்கள் வடக்கு வீதிகளில் சமா வைக்கிறார்கள். பக்க நிகழ்வுகளாக சிலம்பாட்டம், கரகாட்டம் (இவற்றில் பிரதமர் பங்கு பெறவில்லை!!) எனப் பல, முகம் தெரியாதவர்களால் நிகழ்த்தப்படுகிறது. போதாததற்கு, பிதமரும் தன் வாயால் தன்னையே கிழித்துத் தொங்கப்போடுகிறார்.

இந்த நெருப்பை அணைக்கும் வல்லமை இப்போதைக்கு ஒருவரிடம் மட்டுமே உண்டு. அது ஜோடி வில்சன் – றேபோ தான். ஆனால் அவர் சட்டத்தினால் தன் வாய்க்குப் பெரிய பூட்டொன்றைப் போட்டுவிட்டுத் திறப்பைப் பிரதமரிடம் கொடுத்துவிட்டார். Solicitor – Client Privilege என்பது பூட்டுக்குப் பெயர். அதாவது எஸ்.என்.சீ. லவலான் நீறுவனத்தின் மீது கனடிய அரசு சார்பில் வழக்குத் தொடுத்தவர் அதன் அமைச்சரான ஜோடி வில்சன்-றேபோ. குற்றம் சாட்டப்பட்டது எஸ்.என்.சீ. லவலான் (Client). இருவரிடையேயான உறவும், சம்பந்தப்பட்ட விடயங்களும் பிரத்தியேகமானவை. சட்டத் தரணி அதுபற்றி வாய் திறக்க முடியாது. நிறுவனம் அமைச்சரிடம் எதைக் கேட்டுக்கொண்டது? அவர் எதை மறுத்தார்? எதுவுமே தெரியாத வரைக்கும் மர்மம் நீளும். இவ் வாய்ப்பூட்டுச் சட்டத்தை நீக்கும் அதிகாரம் பிரதமரிடம் மட்டுமே இருக்கிறது. அவர் நினைத்தால் அச்சட்டத்தை நீக்கிக் கொள்ளலாம். அதைச் செய்தால், ஜோடி எதை எதையெல்லம் சொல்லப் போகிறாரோ? பிரதமர் இப்போது  புலிவாலைப் பிடித்திருக்கிறார். பிடித்திருந்தால் மட்டுமே பரவாயில்லை. ஜோடி வில்சன் மீது குற்றங்களை வேறு சுமத்துகிறார். இதனால் அவருக்கு எதிராக மக்கள் திரும்புகிறார்கள். அவர்மீது சந்தேகம் வலுக்கிறது.  மக்களுக்கு – அல்லது ஊடகங்களுக்கு – விடை தேவை.

தேர்தலுக்கு முன்னர் ட்ரூடோ, எல்லா அரசியல்வாதிகளைப் போலவும், வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவற்றில் சில: சுதேசிகளுடனான நல்லிணக்கத்துக்காக உழைப்பது; முன்னாள் பிரதமர் ஹார்ப்பரைப் போலல்லாது ஆட்சியில் எதேச்சாதிகாரம் இருக்காது; வெளிப்படைத் தன்மை இருக்கும்; தான் ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட பெண்ணீயவாதி என்பதால் பெண்களுக்குச் சம சந்தர்ப்பம் அளிப்பது.

உங்களைப் போலவே தான் மக்களும் முகத்தைச் சுழிக்கிறார்கள். பிரதமர் கொடுத்த மேற்சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் ஜோடி வில்சன் விடயத்தில் அடங்குகின்றனவா?

பிரதமர் பிழைத்துக் கொள்வாரென்றால் அது அதிசயமாகத்தானிருக்கும்.

வரிசையில் எவருமில்லை என்பதும் அதைவிட அதிசயம் தான்.

பார்ப்போம்.