HealthUS & Canada

கனடிய அரசின் அவசரகால நிதி உதவி | விபரங்கள்

கோவிட்-19 நோய்ப்பரவலின்போது அரசாங்கங்களும், பொதுச் சுகாதார சேவை நிர்வாகங்களும் கனடிய மக்கள் மீது சில வாழ்முறைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியதன் காரணமாகப் பலர் வருமான இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர். இதை நிவர்த்திப்படுத்தும் வழியில் கனடிய அரசு சில அவசரகால நிதியுதவித் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 6ம் திகதி நடைமுறைக்கு வரும் இத் திட்டத்துக்கு கனடா அவசரகால நிதியுதவி (Canada Emergency Response Benefit (CERB)) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வுதவித் திட்டம் பற்றிய விபரங்கள் இங்கே தரப்படுகின்றன.

கே: கனடா அவசரகால உதவித் திட்டம் என்றால் என்ன?

ப: கொறோணாவைரஸ் பரவல் தொடர்பான காரணங்களுக்காக வேலைக்குப் போகாமல் விட்டிருந்தால் கனடா அவசரகால நிதி உதவித் திட்டத்தின் கீழ் (CERB) நீங்கள் நிவாரணம் பெற வாய்ப்புண்டு.

கே: யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்?

ப: அரச, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்தோரும், சுய தொழில் செய்தோரும் கோவிட்-19 நோய்ப்பரவலினால் வருமான இழப்புக்குக்குள்ளாகியவர்கள் எனக் கருதப்படுபவர்களும்.

கே: எப்படியான உதவித்தொகையை அரசாங்கம் தருகிறது?

ப: வாரத்துக்கு $500 டாலர்களைப் 16 வாரங்கள் வரை பெற்றுக்கொள்ளலாம். 4 வாரங்களுக்குமான பணம் ($2,000) ஒரே தொகையாகக் கிடைக்கும்.

கே: அதற்கு முன்னரே வேலைக்குச் செல்லமுடியாது போயிருந்தால்?

ப: வேலையற்றோர் காப்புறுதித் திட்டத்தில் பங்குபெறத் தகுதியுடையவரானால் அதற்கு விண்ணப்பித்து உரிய கொடுப்பனவைப் பெறலாம். (விண்ணப்பிப்பவர்கள் தொடுப்பை அழுத்தவும்)

முக்கியம்! நீங்கள் வேலையற்றோர் காப்புறுதிப் பணம் பெறத் தகுதியற்றவரானால் மட்டுமே, அவசரகால நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

கே: எப்படி விண்ணப்பிப்பது?

ப: ஏப்ரல் 6ம் திகதி அரசாங்கம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கும். விண்ணப்பங்கள் தொலைபேசி மூலமும், இணையத் தளத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப நடைமுறையை இலகுவாக்குவதற்காக, கனடிய வரித் திணைக்களம் பிறப்பு மாத வரிசைக்கேற்றபடி குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கியிருக்கிறது. அதன் விபரம் கீழே:

நீங்கள் பிறந்த மாதம்விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்விண்ணப்பிக்கச் சிறந்த திகதி
ஜனவரி, பெப்ரவரி, மார்ச்திங்கட் கிழமைஏப்ரல் 6
ஏப்ரல், மே, ஜூன்செவ்வாய்க் கிழமைஏப்ரல் 7
ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர்புதன் கிழமைஏப்ரல் 8
அக்டோபர், நவம்பர், டிசம்பர்வியாழக் கிழமைஏப்ரல் 9
எந்தவொரு மாதமாயினும்வெள்ளி, சனி, ஞாயிறு

கே: அவசரகால உதவிப் பணத்துக்கு விண்ணப்பிக்க இருக்கவேண்டிய தகமைகள் என்ன?

ப:

  • 15 வயதுக்கு மேற்பட்ட, கனடாவில் வசித்துக்கொண்டிருக்கும் ஒருவர்
  • கோவிட்-19 நோய் தொடர்புள்ள காரணங்களுக்காக வேலைக்குச் செல்ல முடியாதவர் (சுயமாக வேலையை நிறுத்தியவர் தகுதி பெற மாட்டார்)
  • 2019 இல் அல்லது விண்ணப்பம் செய்வதற்கு 12 மாதங்களிற்கு முன்னர், குறைந்தது $5,000 1வருமானம் ஈட்டியிருக்க வேண்டும்; அத்தோடு
  • ஆரம்ப 4 வார காலத்தில் தொடர்ச்சியாக 14 நாட்கள் வேலையற்று இருந்ததோடு, மிகுதியுள்ள உதவிக் காலத்தில் அவ் வேலையால் வருமானம் எதுவும் கிடைக்காது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

1 இந்த $5,000 வருமானம், வேலை செய்த காரணத்தாலோ அல்லது சுய தொழிலாலோ, தாய்மை அல்லது வேலையற்றோர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பெற்றோர் உதவிப் பணமாகவோ (கியூபெக் மாகாணத்திற்கும் இது அடங்கும்) இருக்கலாம்

கே: விண்ணப்பம் செய்து எத்தனை நாட்களில் இந்த உதவிப் பணம் கிடைக்கும்?

ப: வங்கியில் நேரடி இடுகைக்கான படிவத்தை இணைத்திருந்தால் (direct deposit), 3 பணி நாட்களில் இவ்வுதவிப்பணம் கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லாதபோது, 10 பணி நாட்களில் இப் பணத்தை எதிர்பார்க்கலாம்.

இப் பணம் உரிய காலத்தில் கிடைக்காது போனால், மீண்டும் விண்ணப்பிக்கலாம். அப்போது 4 வாரங்களுக்கான கொடுப்பனவு விண்ணப்பங்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் அனுப்பலாம்

கே: கிடைக்கும் இப் பணத்துக்கு வருமான வரி அறவிடப்படுமா?

ப: ஆம். அடுத்த வருடம் வருமான வரி விண்ணப்பம் செய்யும்போது இத் தொகையை முதல் (இந்த) வருட வருமானமாகக் காட்ட வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு கனடிய வருமான வரித் திணைக்களத்துடன் இத் தொடுப்பின் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.