கனடியத் தேர்தலும், கற்றுக்கொள்ளாத பாடங்களும்
- ஒரு அலசல் / சிவதாசன்


கனடிய தேர்தல் திருவிழா, 36 நாட்களின் பின் இன்று கொடியிறக்கப்பட்டுவிட்டது. முடிவுகள் எதிர்பார்த்தபடி வந்திருக்கிறது. மக்கள் அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்டியிருக்கிறார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் புத்திக்கூர்மையற்றவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதையேதான் இத் தேர்தலும் நிரூபித்திருக்கிறது. 157 ஆசனங்களை வைத்துக்கொண்டு என்னால் எதுவும் செய்ய முடியாது என்று பெருந்தொற்றுக்காலத்தையும் கணக்கிலெடுக்காது தேர்தலை நடத்தியவருக்கு இந்தா பிடி என்று மீண்டும் 156 ஆசனங்களைக் கொடுத்து ‘இன்று போய் நாளை வா’ என்று அநுப்பியிருக்கின்றனர் வாக்காளர்கள்.
இத் தேர்தலில் தோற்றவர்கள்:
ஜஸ்டின் ட்றூடோ: தனக்கு எல்லாம் தெரியும் என்ற narcissistic அணுகுமுறை அவருடையது. பல தடவைகள் தடக்கி விழுத்த முயன்றபோதெல்லாம் அவரது charisma அவரைக் காப்பற்றி வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அவரது போட்டியாளர்கள் எவரிடமும் அது இல்லை என்பதால். அதனால் மீண்டும் ஒருமுறை அந்த ‘ட்றூடோ’ பிராண்ட் தப்பிப் பிழைத்திருக்கிறது. தேவையற்ற தேர்தலைத் தேவையற்ற காலத்தில், தேவையற்ற செலவோடு கொண்டுவந்ததற்காக முகத்தில் கரிபூசப்பட்டுள்ளார் – இந்த தடவை மக்களால் -. கோவிட் நிவாரணம் எனறு அள்ளிக்கொடுத்தமைக்கான பலன் அவருக்குக் கிட்டவில்லை. மீண்டும் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தோடு என.டி.பி., புளொக் கியூபெக்குவா கால்களில் விழவேண்டி ஏற்பட்டிருக்கிறது.
மரியம் மொந்செஃப்: ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்து ட்றூடோ அரசில் வீராங்கனையாக விளங்கிய இவருக்கும் ட்றூடோவைப் போலவே கொஞ்சம் வாய் பெரிசு. தலிபான்கள் அமெரிக்காவைக் கலைத்த கையோடு அவர்களைப் பார்த்து ‘சகோதரர்கள்’ என்று விழித்த வீராங்கனை இன்று அதே காரணத்துக்காக வீழ்த்தப்பட்டிருக்கிறார். தலிபான்களினால் நூற்றுக்கும் அதிகமான கனடிய இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயத்தை அவர் மறந்துவிட்டாரோ அல்லது அவரை இயக்கியவர்களுக்காக அவர் அக்கூற்றைச் சொன்னாரோ தெரியாது, ஆனால் நுணல் தன வாயால் கெட்டுவிட்டது.
ஹார்ப்பர் பிராண்ட் கந்சர்வேட்டிசம்: ‘எனக்கு மூக்கறுந்தாலும் எதிரிக்குச் சகுனப் பிழை’ என்றால் போதும் எனற வகையில் எரின் ஓற்றூலுக்குக் குழிபறித்த ஹார்ப்பர் கூடம் மீண்டுமொருதடவை மண்கவ்வியிருக்கிறது. ஹார்ப்பர் ஒன்ராறியோவில் பிறந்திருந்தாலும் தன்னை ஒரு பலமான மேற்கு மாகானத்தவராக அடையாளம் காண்பவர். ஓரளவு முற்போக்கு கொள்கைகளுடன் இருந்த கந்சர்வேட்டிவ் கட்சியை வலதுபக்கம் நகர்த்தியவர். அதற்காகப் பல நீண்டகால கட்சிக்காரரைப் பலிகொடுத்தவர். அல்பேர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கெனி போன்ற நச்சுப் பாம்புகளை வளர்த்தெடுத்தவர். எரின் ஓற்றூல் மல்றோனி பக்கம் சாய்ந்ததற்காக அல்பேர்ட்டா 5 ஆசனங்களை இந்தத் தடவை லிபரலுக்கு தானம் செய்திருக்கிறது. இதற்கு ஜேசன் கெனியே காரணம். (சென்ற தடவை லிபரல் கட்சிக்கு அல்பேர்ட்டாவில் ஒரு ஆசனமும் கிடைக்கவில்லை). இதற்கு முழுமையான காரணம் ஜேசன் கெனியும், ஹார்ப்பர் கூடமும் தான். இதற்கான வெகுமதி ஜேசன் கெனிக்கு விரைவில் கிடைக்கும்.
அனாமி போல்: பசுமைக் கட்சியின் தலைவி அனாமி போல் கட்சியிலிருந்து விலகா விட்டால் தூக்கியெறியப்படுவார். அவர் தன்னை ஒரு கறுப்பு யூதர் என்று இனம் கட்டிக்கொள்வதில் எடுத்துக்கொண்ட முயற்சியைவிட பசுமைக் கட்சியின் செயற்பாட்டாளராக காட்டிக்கொண்டது மிகக் குறைவு. அவருக்கும் அக் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதுபோல் தெரியவில்லை. மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றம் செல்ல முயற்சி செய்து நான்காவது இடத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறார். அவரது அரசியல் வாழ்வு இதோடு சரி.
வெற்றி தோல்வி இல்லாதவர்கள்:
ஜக்மீட் சிங்: என் .டி.பி. கட்சியின் தலைவர். பாவம் அவரது கைகள் இறுகக் கட்டப்பட்டவை. இப்படியான செயற்பாட்டு ரகக் கட்சிகள் தீவிர இடதுசாரிக் கொள்கைக்ளை இறுகப்பிடித்துக்கொண்டிருப்பவை. அவை ஆளப் பிறந்தவை அல்ல. அழுத்தங்களைக் கொடுப்பதற்காக ஒரு counter balance ஆக வேண்டுமானால் அவை இருக்கலாம். எனவே “நான் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வேன், இதைச் செய்வேன்’ என வாணம் விடுவது வேடிக்கையானது. மக்களும் அதை ஏளனம் செய்வார்கள். மறைந்த தலைவர் ஜாக் லெய்ட்டன் கொஞ்சம் நடுவுக்கு நகர முயன்று வெற்றி கண்டவர். ரொம் முல்கெயர் முறசித்ததால் வெளியேற்றப்பட்டவர். சிங் முயற்சி எதையும் எடுக்காமல் இலாவகமாக ஓட்டிக்கொள்கிறார். அதற்கான பரிசு இவ்வளவுதான். வெற்றியுமில்லை தோல்வியுமில்லை. ஆனால் சிறுபான்மை அரசாங்கத்தில் ட்றூடோ குதிரையின் கடிவாளத்தில் இவரும் கையை வைத்திருப்பதால் அது ஒரு சிறிய வெற்றி. அதற்கு அவர் பொறுப்பல்ல.
ஃபிரான்சுவா பிளாஞ்செ: கியூபெக் மாகாணத்தின் பிரஞ்சுவாதக் கட்சி 2019 தேர்தலை விட ஓரிரு ஆசனங்கள் குறைவாக எடுக்கலாம். கனவான் வீட்டில் ‘அவுட் ஹவுஸ்’ இல் இருக்கும் நிலைதான் இக் கட்சிக்கும். ஒரு பவர் புரோக்கராக இருந்தாலும் இன்னுமொரு ‘அவுட் ஹவுஸ்’ கட்சியான என்.டி.பி. கட்சி அதற்குப் போட்டியாக அமைந்துவிடுவதால் வழக்கமான ‘இந்தா நான் பிரிந்து போய்விடுவேன்’ வெருட்டல்களை விடுமளவுக்கு அதற்குப் போதுமான பலமில்லை. ‘உள்ளோமையா’ என்று கையை உயர்த்திவிட்டு பேசாமல் இருக்கமட்டுமே அதனால் முடியும்.
வென்றவர்கள்:
எரின் ஓற்றூல்: ஹார்ப்பர் கூடத்திலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியை வெளியே எடுத்து மீண்டும் மல்ரோனி கூடத்திற்குள் கொண்டுவந்திருக்கிறார். அதற்காக அவர் சில ஆசனங்களை இழந்தாலும் பல ஆசனங்களை அதிகரித்திருக்கிறார். தேர்தலுக்கு முன்னர் அவர் அதிகம் அறியப்படாதவராக இருந்தாலும் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமென்பதற்காக அவர் தனது நேர்மையையோ, கொள்கைகளையோ விட்டுக்கொடுக்கவில்லை. ஹார்ப்பரின் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை நோக்கி நகரும்படி அவருக்கு ஏகப்பட்ட அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் அசையவில்லை. அதற்காக அவருக்கு மக்கள் வாக்களித்து அதிக ஆசனங்களை வழங்கியிருக்கிறார்கள். ஹார்ப்பர் கூடம் சதி செய்யாவிட்டால், அடுத்த தடவை அவர் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
மக்சிம் பேர்ணியர்: ஒரு ஆசனங்களையேனும் எடுக்கவில்லையாகினும், கனடாவின் ‘ட்றம்ப்’, மக்கள் கட்சியின் தலைவர் தனது முட்டாள் கூடத்தின் தொகையை அதிகரித்திருக்கிறார். கொறோனா அதற்கு உதவி செய்திருக்கிறது. அவர் போட்டியிடாது இருந்திருந்தால் எரின் ஓற்றூல் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கவும் கூடும். அந்த வகையில், தனது முன்னாள் கட்சியைத் தோற்கடித்தமையை அவரது வெற்றியாகவே பார்க்க வேண்டும். பிரான்ஸின் லூ பென் கட்சியைப் போல அவருக்கும் ஒரு காலம் வரலாம்.
கனடிய மக்கள்: பெரும்பானமை அரசுகளால் எப்படியான தீமைகள் ஏற்படும் என்பதற்கு இலங்கை நல்லதொரு உதாரணம். அதுவும், my way or high way என்ற கர்வத்தோடு இயங்கும் தலைவர்களைக் கொண்ட கட்சிகளிடம் ஆட்சி செல்லும்போது அது எப்போதும் ஆபத்தானதாகவே வந்து முடிவதுண்டு. எனவே அந்த விடயத்தில் ட்றூடோவின் கடிவாளத்தைத் தொடர்ந்த்தும் தம்மிடமே வைத்துக்கொண்ட கனடிய மக்கள் வெற்றி பெற்றவர்களாக ஆகிறார்கள்.
வாழ்க சிறுபான்மையிசம்….