Spread the love

வார, மாதச் சம்பளம் பெறும் சிலர் சம்பளம் கிடைப்பதற்கு முன்னர் பணமுடை ஏற்படும்போது குறுகிய காலத் தவணையில் கடனைப்பெற்று அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதும், வார இறுதியில், அல்லது மாத இறுதியில் சம்பளம் கிடைத்தவுடன் இக் கடனைத் திருப்பி அடைத்து விடுவதும் வழக்கம். இதைப் payday loans என்று அழைக்கிறார்கள்.

இவர்களுக்குக் கடன் வழங்குவதற்கென பல கடன் நிறுவனங்கள் முண்டியடித்துக்கொண்டு முன்வருகின்றன. வருமானம் குறைந்த அல்லது அரச உதவிப்பணத்தைப் பெறும் மக்கள் வாழும் பகுதிகளில் இந்நிறுவனங்கள் மூலைக்கு மூலை கடைவிரித்திருப்பதைக் காணலாம்.

கொறோனாவைரஸ் இடர்க் காலத்தில் பலரும் பல காரணங்களுக்காகவும் பண முடைக்குள்ளாகி வருகின்றார்கள். இச் சந்தர்ப்பத்தைப் பாவித்து இன்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் அதிகபட்சம் 780% வருடாந்த வட்டியாக அறவிடுகிறார்கள் என ‘வைஸ்’ என்னும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கிகளில் இப்படியான சேவைகள் தரப்படுவதில்லை. இதனால், பல வறிய மக்கள் இப்படியான கடன் தரும் நிறுவனங்களை நாடுகிறார்கள். ஒழுங்கான வருமானமில்லாதவர்களுக்கும், கொடுக்கல் வாங்கல்களில் நம்பகத்தன்மையற்றவர்களுக்கும் (bad credit) வங்கிகள் கணக்குத் திறக்க மறுத்துவிடுவது வழக்கம். இதனால் அவர்கள் இப்படியான கடன் நிறுவனங்களை நாடவேண்டிய நிலை உள்ளது.

இக் கடன் நிறுவனங்கள் மாகாண அரசுகளின் சட்டதிட்டங்களுக்கமைய நிர்வகிக்கப்படுகின்றன. அவசரக் கடன்களுக்கோ, கணக்கில்லாமலே காசோலை மாற்றுவதற்கோ வங்கிகள் மறுத்துவிடுவதனால் இப்படியான தேவைகள் உள்ளவர்களுக்காக இக் கடன் நிறுவனங்களின் தேவையும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒப்பீட்டளவில், ஒன்ராறியோவில், வயது முதிர்ந்தவர்களை விட, இளையவர்களே இக் கடன் நிறுவனங்களை அதிகம் பாவிக்கின்றனர் என ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. 18-29 வயதுடையோர் இதில் முன்னணியிலுள்ளனர். 30 வயதுக்குட்பட்டோரில் ஒழுங்கற்ற நிதி நிர்வாகத்தினாலும், நிலையற்ற வருமானங்களினாலும் வங்குரோத்து நிலைமைக்குள் போவது ஒன்ராறியோவில் அதிகம் என இக் கருத்துக்கணிபுத் தெரிவிக்கிறது.

கொறோனாவைரஸ் இடர்க் காலத்தில் தனிப்பட்டோரின் கடன் சுமை அதிகரித்து வருவதால் மேலும் பலர் இப்படியான கடன் நிறுவனங்களை அணுகவேண்டி ஏற்படலாம் என நிதித்துறை நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ரொறோண்டோ ஸ்டார் பத்திரிகை, இது குறித்து 6 வெவ்வேறு கடன் நிறுவனங்களோடு தொடர்புகொண்டு விசாரித்தபோது அவற்றில் 5 நிறுவனங்கள் மாகாண அரசு அனுமதிக்கும் அதியுச்ச வட்டியை அறவிடுவதாக ஒப்புக்கொண்டுள்ளன.

2008 இல் ஏற்பட்ட உலகளாவிய நிதிப் பிரச்சினையின்போது கடன் வாங்கிய $10,000 டாலர்களைக் கட்டி முடிக்கும்போது $31,000 ஆக ஆகியிருந்தது என இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்ததாக ‘வைஸ்’ என்னும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இக் கடன் நிறுவனங்களில் கணக்குத் திறக்கும்போது கடன் நம்பகத்தன்மை (credit check) செய்யப்படுவதில்லை. எனவே ஒரு கடன் நிறுவனத்தில் எடுக்கும் கடனை அடைக்க ஒருவர் இன்னுமொரு கடன் நிறுவனத்தை நாடுவார் எனவும், போவதற்கு இடமில்லாமல் போகும்போது, வங்குரோத்துக்குப் பதிகிறார்கள் எனவும் இவற்றைப் பதியும் நிறுவனமொன்றின் நிர்வாகி தெரிவித்ததாக ‘வைஸ்’ இணையத்தளம் தெரிவிக்கிறது.

Print Friendly, PDF & Email
Related:  கனடா | வீட்டிலிருந்து வேலை செய்பவருக்கு வரிச் சலுகைகள்