கனடா: வருடமொன்றுக்கு 500,000 புதிய குடிவரவாளர்கள் – 2025 வரை நடைமுறைப்படுத்த அரசு திட்டம்

2.6 மில்லியன் வதிவிட விண்ணப்பங்கள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன

வருடமொன்றுக்கு 500,000 வரையிலான புதிய குடிவரவாளர்களை உள்வாங்க கனடிய மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. 2025 வரை நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டம் கனடா தற்போது எதிர்கொள்ளும் பாரிய பணியாளர் குறைபாட்டை நிவர்த்தி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இறப்பு, பிறப்பு வீதத்தில் தொய்வு, ஓய்வு பெறுதல், குடியகல்வு காரணங்களினால் குடிசனத்தொகையில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய வருடமொன்றுக்கு சராசரியாக 300,000 பேர் வரையில் அகதிகளாகவும், குடிவரவாளர்களாகவும் ஏற்கப்படுவது வழக்கம். ஆனாலும் கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் பணியாளர் மனநிலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம் காரணமாகவும் தொலைப்பணி (work at home) வசதிகள் காரணமாகவும் தற்போது கனடாவின் சகல மாகாணங்களிலும் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய மத்திய அரசு இப் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இருப்பினும் இத் தொகை போதாது எனச் சிலரும், ஏற்கெனவே பலவருடங்களாக நிலுவையில் இருக்கும் 2.6 மில்லியன் அகதி விண்ணப்பம் மற்றும் குடிவரவு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் மிகையான தாமதமிருக்கும்போது ஏனிந்த அறிவிப்பு எனச் சிலரும் மத்திய அரசின் இவ்வறிவிப்பைக் குறைகூறிவருகிறார்கள்.

பெரும்பாலான அகதி விண்ணப்பதாரிகளும், குடும்ப ஒன்றுகூடல் தேவைகளுக்கான குடிவரவு விண்ணப்பதாரிகளும் தற்போது கனடாவில் நிலவிவரும் பாரிய திறமைசார் (skill) பணிகளுக்குப் பொருத்தமானவர்களாக இருக்கமுடியாது என்பதால் புதிய குடிவரவுத் திட்டத்தில் திறமைசார் மற்றும் அனுபவமுள்ள விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது என குடிவரவு அமைச்சர் சோன் ஃபிரேசர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் பிரகாரம் 2023 இல் 465,000 புதிய குடிவரவாளர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் அதே வேளை அடுத்தடுத்த வருடங்களில் இது படிபடியாக உயர்ந்து 2025 இல் அது 500,000 ஆக உயருமெனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 405,000 பேர் புதிய குடிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு துறைகளிலும் தற்போது 1 மில்லியன் பணிகள் வெற்றிடங்களாக உள்ளன. “குடிவரவை அதிகரிக்காது நாம் எமது பொருளாதாரத்தை முன்னேற்றமுடியாது” என அமைச்சர் ஃபிரேசர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய குடிவரவாளர்களுக்கான வீட்டு வசதிகள் போதாமையாக இருப்பினும் அவர்களின் வருகையால் புதிய வீடுகளின் நிர்மாணம் அதிகரிக்கவும் அதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் காரணமாக அமையலாம் எநவும் புதிய குடிவரவாளர்களை உள்வாங்கிக் குடியமர்த்தத் தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் கனடா தீர்மானித்துள்ளது. 2023 இல் 76,000 அகதிகளை அனுமதிக்கும் திட்டம் இருப்பினும் 2025 இல் அதை 73,000 ஆகக்குறைப்பதற்கு அது திட்டமிட்டுள்ளது. இவர்களுள் 40,000 ஆப்கானிய அகதிகளும் அடங்குவர்.

லிபரல் அரசின் இத் திட்டத்தை கன்சர்வேட்டிவ் கட்சியின் நிழல் குடிவரவு அமைச்சர் ரொம் கிமியச் வரவேற்றிருந்த போதிலும் அரசாங்கம் எதிர்பார்க்கும் எண்ணிக்கையைக் குடிவரவாளர்களாகப் பெற்றுக்கொள்ள முடியுமா எனத் தான் சந்தேகப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குடிவரவுத் திணைக்களத்தின் உள்ளகத் தகவல்களை மேற்கோள் காட்டி, 2.6 மில்லியன் குடிவரவு விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றில் 1.6 மில்லியன் தற்காலிக வதிவிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் எனவும் 615,000 விண்ணப்பங்கள் நிரந்தர வதிவிடக் கோரிக்கைகள் எனவும் கிமியச் தெரிவித்துள்ளார்.

அரசின் இத்திட்டம் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதாது என கனடா வியாபாரிகள் சங்கமும் மத்திய அரசின் இத் திட்டத்தை விமர்சித்திருக்கிறது.