கனடா: ரொறோண்டோ வீட்டு விலைகள் 20% சரிவு
கனடிய மத்திய வங்கி சமீபத்தில் தனது கடன் வட்டி வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து கனடாவின் அதி பெரிய நகரமான ரொறோண்டோ பெரும்பாகத்தில் வீட்டு விலைகள் சரியத் தொடங்கியுள்ளன. வீட்டு விலை நகர்வுகளைக் கண்காணிக்கும் இணையத்தளமான ‘ஹவுஸ் சிக்மா’ வின் அறிக்கைப்படி, பெப்ரவரி 01, 2022 முதல் ஏப்ரல் 19, 2022 வரை, ரொறோண்டோ பெரும்பாகத்தில் வீட்டு விலைகள் 20% த்துக்கும் மேலாகச் சரிவடைந்துள்ளன என அறியப்படுகிறது.
இவ்வறிக்கையின்படி பெப்ரவரியில் $1.65 மில்லியனாகவிருந்த தனி வீடொன்றின் சராசரி விலை ஏப்ரல் மாதத்தில் $1.45 மில்லியனாகக் குறைந்துள்ளது. அதே வேளை, இரட்டை வீடுகளின் (semi-detached) விலை 22.6% த்தால், $1.24 மில்லியன் சராசரி விலையிலிருந்து $960,000 ஆகக் குறைந்துள்ளது. தொடர்மாடிக் குடியிருப்புகளின் விலை 6.8% த்தால், $740,000 இலிருந்து $690,000 ஆகக் குறைந்துள்ளது.
வீட்டு விலை ஏற்றங்களுக்குக் காரணமான கண்மூடித்தனமான போட்டிகள் (blind bidding) நடைபெறுவது இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் பல வீடுகள் சந்தையிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. வீடுகளை வாங்குபவர்கள் தமது முடிவுகளைப் பின்போட்டுவருகிறார்கள் என்பதற்கான அறிகுறியே இதுவெனவும் சந்தையில் பாரிய மாற்றம் ஒன்று நிகழ்வதற்கான ஆரம்பமாக இது இருக்கலாமெனவும் ஹவுஸ் சிக்மா தெரிவித்துள்ளது.
ரொறோண்டோ வீடு விற்பனை முகவர்களின் சுய கட்டுப்பாட்டு அதிகாரசபையாகிய ரொறோண்டோ பிரதேச வீடு விற்பனைச் சபையும் வீட்டு விலைகளில் சிறியதொரு சரிவு ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொண்டிருக்கிறது. பெப்ரவரி-மார்ச் மாதங்களில், எல்லா வகையான வீட்டு ரகங்களினது சராசரி விலைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளதென அச் சபையின் சந்தை ஆய்வாளர் ஜேசன் மேர்செர் கூறியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் வீடுகளிலிருந்து பணியாற்றியவர்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப ஆரம்பித்திருப்பதால் ரொறோண்டோ நகர மையத்தில் வீடுகளின் விலைகள் பாரிய மாற்றத்துக்குள்ளாக வாய்ப்பில்லை என மேர்சர் மேலும் தெரிவித்துள்ளார்.