BusinessTechnology & ScienceUS & Canada

கனடா | ரொறோண்டோ வடஅமெரிக்காவின் முதன்மையான தொழில்நுட்ப மையம்


தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், பிரயோகங்கள் ஆகியன மேற்கொள்ளப்படும் நகரங்களில் ரொறோண்டோ முதலிடத்தை எட்டியுள்ளது. இதுவரை கலிபோர்ணியா மாநிலத்தின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரமே முதலிடத்தில் இருந்துவந்தது. அமெரிக்க ஜனாதிபதியும், கோவிட் நோய்த்தொற்றும் இணைந்து அதை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டார்கள்.

CBRE எனப்படும் றியல் எஸ்டேட் நிறுவனம் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளில் வணிக கட்டிடங்களைப்பற்றிய தகவல்களையும், அக்கட்டிடங்களை வாடகைக்கு எடுக்கும் அல்லது கொள்முதல் செய்யும் வணிகநிறுவனங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, தகமைகள் பற்றியும் அறிக்கைகளைக் கிரமமாக வெளியிட்டு வருகின்றது. இதன்படி 2020 இல் ரொறோண்டோ 87.6 சுட்டெண்ணை எடுத்து முதலாவது இடத்துக்கு வந்திருக்கிறது. 2014 முதல் 2019 வரை இத் துறையில் 250,000 பணியாளர் சேர்ந்திருக்கிறார்கள். இது ரொறோண்டோவின் மொத்தப் பணியாளர்களின் 8.8% மாகும்.

பொதுவாக, தகமையுள்ள பணியாளர்கள் அதிகம் வதியும் நகரங்களில் (worker pool) வணிக நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை நிறுவிக்கொள்வது வழக்கம். இப்படியான நிறுவனங்களுக்கு தேவையான தரவுகளை CBRE போன்ற றியல் எஸ்டேட் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ரொறோண்டோவில் தமிழர்கள் செறிந்து வாழும் மார்க்கம் / ஸ்காபரோ எல்லையில் கடந்த ஒரு வருடத்தில் பல்லாயிரக்கணக்கான புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருவதும் அவற்றில் அமசோன், கனடா தபால் விநியோக திணைக்களம் ஆகியன தமது பாரிய விநியோக நிலையங்களை அமைக்க இருப்பதும் இப்படியான தரவுகளின் அடிப்படையில்தான்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், சியாட்டிள் ஆகிய நகரங்கள் கடந்த வருடம் வரை தொழில்நுட்பத்துறையில் முன்னணி மையங்களாக இருந்தன. இதற்குக் காரணம் அங்குள்ள பல்கலைக் கழகங்கள் பெருந்தொகையான தொழில்நுட்பப் பட்டதாரிகளை உருவாக்குவதும், அந்நிறுவனங்கள் பலகலைக் கழகங்களில் சென்று திறமையான மாணவர்களைக் கண்டறிந்து தம்முடன் இணைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகளினாலாகும். ஆனால் ட்றம்ப் நிர்வாகத்தில் பல கனடிய பட்டதாரிகள் அமெரிக்காவிற்குப் போக முடியாமலும், போக விரும்பாதவர்களாகவும் இருப்பதால் ரொறோண்டோவை நோக்கிப் பல நிறுவனங்கள் நகர ஆரம்பித்துள்ளன. புதிய பைடன் நிர்வாகத்தில் இந்நகர்வுகள் எப்படியிருக்குமெனக் கூறமுடியாதெனினும் கனடிய குடிவரவு திணைக்களம் தகமையுள்ள வெளிநாட்டுப் பட்டதாரிகளை விரைவான குடிவரவுத் திட்டத்தின்கீழ் அனுமதிக்க வாய்ப்புண்டு. அதே வேளை ஒன்ராறியோவிலுள்ள பல பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பல திறமையுள்ள பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் ரொறோண்டோ கனடிய நகரங்களுள் 64.34 புள்ளியை எடுத்து முதலாம் இடத்தில் இருக்கிறது.அத்துடன் முதலீட்டாளர்களும் ஸ்திரமான, சட்ட இறுக்கங்கள் குறைந்த, வரி குறைந்த அரசாங்கங்கள் (மத்திய, மாநில, நகர) இருக்குமிடத்தில் தான் தமது பணத்தை முதலிடுவார்கள். இதனால் கடந்த சில வருடங்களில் ரொறோண்டோவை நோக்கிப் பல புதிய நிறுவனங்களும் (startups), முதலீட்டாளர்களும் (investors, venture capitalists) ரொறோண்டோவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். கோவிட் தொற்றுநோயால் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்பதும் இன்னுமொரு காரணம்.

இணையவழியாகச் செய்யும் வியாபாரம் முதல் ருவிட்டரில் பதிவாகும் தகவல்கள் வரை அவற்றைச் சேகரித்துவரும் தரவு நிறுவனங்கள் எந்த இடங்களில் இப்படியான நடவடிக்கைகள் அதிகமாக நடைபெறுகின்றன என்பதைக் கணித்து வணிக நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இதன் மூலமும் ரொறோண்டோ போன்ற நகரங்கள் ஏனைய நகரங்களைவிட முன்னணியில் இருப்பதாக அடையாளம் காணப்படுகின்றன.

இந் நிறுவனங்களின் திடீர் எழுச்சி காரணமாக அதன் சார்பாகப் பணியாற்றும் இணையப் பாதுகாப்பு (cybersecurity), இணையப் பெருந்தெரு (IT Infrastructure), இணையவழி பொழுதுபோக்கு (gaming), வீட்டிலிருந்து வேலை செய்வோர் (work-at-homers) ஆகியோரது பணிகளும் பலமடங்கு பெருகின்றன.

கோவிட் தொற்றின் நீண்டகாலத் திட்டத்தின்படி இனி வரும் காலங்களில் மேலும் பல நிறுவனங்கள் தமது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலைசெய்யும்படி பணிக்கலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தொழில்நுட்பத் துறைக்கு மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தேவைப்படுவார்கள் எனவும் அவர்களது முதன்மை இருப்பிடமாக ரொறோண்டோவே இருக்குமெனவும் CBRE இன் அறிக்கை தெரிவிக்கிறது.