கனடா | மேலும் 751 பெயரிடப்படாத புதை குழிகள் கண்டுபிடிப்பு!

மேலும் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படலாமென பூர்வீக குடிகளின் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 215 புதைகுழிகளைத் தொடர்ந்து, நேற்று (24) மேலும் 751 பெயரிடப்படாத புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் கனடிய பூர்வீக குடிகளின் பிள்ளைகளைப் பராமரித்த கத்தோலிக்க மார்க்கப்பள்ளிகளுக்குச் சொந்தமான நிலங்களில் இருப்பதாக அறியப்படுகிறது.

நேற்று கண்டுபிடிக்கப்பட்ட 751 புதைகுழிகளும் நிலக்கீழ் அதிர்வலை தொழில்நுட்பத்தால் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன எனினும் அவை எதுவும் இதுவரை அகழ்ந்து ஆராயப்படவில்லை. கோவெஸ்ஸெஸ் பூர்வீகக் குலத்தைச் சேர்ந்த பிள்ளைகள் என நம்பப்படுபவர்க்ளது புதைகுழிகளாக இவை இருக்கலாமென இக் குல மூத்தோரது வாக்குமூலங்களைக் கொண்டு உத்தேசிக்கப்படுகிறது.

பின்னணி / வரலாறு

இப்படியான மார்க்கப்பள்ளிகள் கனடாவில் 160 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் 150,000 பூர்வீக குடிகளைச் சேர்ந்த குழந்தைகள் இப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிறின்ஸ் எட்வார்ட் ஐலண்ட், நியூஃபவுண்ட்லாண்ட், நியூ பிறண்ஸ்விக் ஆகிய மாகாணங்களைத் தவிர்த்து கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் இன் நடைமுறை பேணப்பட்டு வந்தது.

இப் பள்ளிகளுக்கான நிர்வாகச் செலவைக் கனடிய மத்திய அரசு பொறுப்பேற்றிருந்தாலும் அவற்றின் நிர்வாகத்தை ரோமன் கத்தோலிக்க திருச்சபையே கவனித்து வந்தது. சஸ்கச்செவன் மாகாணத்திலிருந்த இதன் கடைசிப் பள்ளி 1996 இல் மூடப்பட்டது.

கனடிய பூர்வீகக் குடிகளான முதலாம் தேசங்கள் (First Nations), மெற்றி (Metis), இனுவி (Inuit) ஆகிய குலங்களைச் சேர்ந்தவர்களது குழந்தைகள் அவர்களது குடும்பங்களிலிருந்து, பெரும்பாலும் பலவந்தமாக, அகற்றப்பட்டு இப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டார்கள். இங்கு அவர்கள் தங்கள் குலப் பழக்கங்கள், மொழி, கலாச்சாரம், வாழ்முறை ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மேற்கத்திய வாழ்க்கை மூறையைப் பின்பற்றும்படி போதிக்கப்பட்டனர். கனடாவின் காலனியாதிக்கத்திற்கு எதிராக பூர்வீக சமூகங்கள் கிளர்ந்தெழாது இருக்கவும், தமது இருப்பிற்கு ஆபத்து வராமலிருக்கவும் அவர்களைக் கத்தோலிக்க மதம் மூலம் பணிய வைக்கலாமென்பது அப்போதைய கனடிய ஆட்சியாளரின் கொள்கையாகவிருந்தது. அப்போது கனடாவின் பிரதமராக ஜோன் ஏ. மக்டோனல்ட் ஆட்சியில் இருந்தார்.

இப்பள்ளிகளில் வாழ்ந்த பிள்ளைகள் ஏதோ காரணங்களினால் மரணமடையும்போது அவர்களின் உடல்களைக் கல்லறைகளோ அல்லது அடையாளங்களோ ஏதுவுமில்லாது புதைத்து விடுவது வழக்கம்.

சுமார் 130 மார்க்கப்பள்ளிகளில் கல்வி கற்றவர்களில் 6,000 த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் எவர் எக் குழிகளில் புதைக்கப்பட்டனர் என்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கனடா முழுவதும் இப்படியான பல மார்க்கப் பள்ளிகளை கத்தோலிக்க திருச்சபை நிர்வகித்து வந்தது. அவற்றுக்கான தரவுகள் கத்தோலிக்க திருச்சபையிடம் இருக்கின்றன எனவும், கனடிய மத்திய அரசிடம் கொடுக்கப்பட்ட பல தரவுகளை அது அழித்துவிட்டது எனவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இம் மார்க்கப்பள்ளிகளில் கற்று வெளிவந்த பலரது வாக்குமூலங்களின்படி இக் குழந்தைகளில் பெரும்பாலோர் நிர்வாகிகளால் பாலியல் ரீதி உட்படப், பலவழிகளிலும் துநன்புறுத்தப்பட்டனர் எனவும் அவற்றைத் தாங்க முடியாதோர் தற்கொலை செய்துகொண்டதாகவும், சிலர் பள்ளிகளை விட்டு ஓடி வீடுகளுக்குப் போகமுடியாமல் தொலைந்தும், இறந்தும் போனதாகவும் அறிய முடிகிறது. இவ் விபரங்களை கத்தோலிக்க திருச்சபை மறைத்துவிடுவதற்காகவே இப் புதைகுழிகள் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும் அறியப்படுகிறது. இப் பள்ளிகளிலிருந்து தப்பிப் பிழைத்து இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் உளவியல் தாக்கங்களுக்குள்ளாகி மது, போதை வஸ்து, விபச்சாரம் போன்ற துர்ப்பழக்கங்களுக்கு ஆளாகுவதும், சிறு குற்றங்களைப் புரிவதால் சிறைகளுக்குள் தள்ளப்படுவதுமெனப் பல வழிகளிலும் வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகச் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய நிலைமை

பூர்வகுடி மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களினாலும், கடந்த சில காலங்களாக ஏற்பட்டுவரும் உலக விழிப்புணர்வு முயற்சிகளாலும், கனடிய மத்திய அரசுகள் பூர்வ குடிகள் விடயத்தில் சில மாற்று அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இருப்பினும் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இனவாதம் பூர்வ குடிகள் மீது பூட்டிய விலங்குகள் முற்றாகக் கழட்டப்படுவதற்கு இன்னும் நீண்ட காலம் தேவை.

தற்போதைய லிபரல் அரசாங்கம் பூர்வீக குடிகளின் விடயத்தில் பல முன்னேற்றங்களைக் காட்டி வருகிறது என்றாலும், அவற்றின் போதாமை குறித்து பூர்வீக குடிகளின் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, பூர்வீகக்குடிகளுக்கு உதவி புரிவதை எதிர்த்து வலதுசாரி அமைப்புகளும், கட்சிகளும் தமது எதிர்ப்பையும் காட்டி வருகின்றன. இருப்பினும் மத்திய அரசின் நகர்வைப் பின்பற்றி மாகாண அரசுகளும் இப் புதைகுழிகளை அடையாளம் காண்பதற்காக பூர்வீக குடிகளின் அமைப்புகளுக்கு நிதி உதவிகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன.

பூர்வீக குடிகளைப் பொறுத்தவரையில். மேலும் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படலாமென தலைவர்கள் மிகுந்த கவலையோடு தெரிவித்துள்ளார்கள்.

கத்தோலிக்க திருச்சபை.

மார்க்கப் பல்ளிகள் தொடர்பாக, பூர்வீக குடிகளிடம் வத்திக்கன் மன்னிப்புக் கேட்கவேண்டுமென பூர்வீக குடிகளின் அமைப்புகள் பலகாலமாகக் கேட்டு வருகின்றன எனினும் இதுவரை எந்தவொரு போப்பாண்டவரும் அதற்குச் சம்மதித்ததாகவில்லை. வான்கூவரில் கண்டுபிடிக்கப்பட்ட 215 புதைகுழிகளைத் தொடர்ந்து கனடிய பிரதமர் (அவரும் ஒரு கத்தோலிக்கர்) மன்னிப்பு வழங்கும்படி போப்பாண்டவரிடம் நேரடி கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். இருப்பினும் அது நடைபெறவில்லை.

கோவெஸ்ஸ் பூர்வகுடிப் புதைகுழிகள் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கியதும் உலகம் முழுவதும் கத்தோலிக்க தேவாலயத்துக்கு எதிரான எதிர்க்குரல்களும், போராட்டங்களும் வன்முறைகளும் ஆரம்பித்துள்ளனவெனத் தெரிகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா, சஸ்கச்செவன், நியூபிறண்ஸ்விக் ஆகிய மாகாணங்கள் ஜூலை 1 இல் கொண்டாடவிருந்த தமது கனடா தின நிகழ்வுகளை நிறுத்திக்கொண்டுள்ளன. பல மாகாணங்களில் கனடிய முதலாவது பிரதமர் ஜோன் ஏ. மக்டோனல்ட் உள்ளிட்ட, கத்தோலிக்க மார்க்கப்பள்ளி விவகாரங்களோடு தொடர்புபட்ட தலைவர்களின் சிலைகள், அடையாளங்கள் மீது தாக்குதல்களைச் செய்து வருகின்றனர். ரொறோண்டோவில் றயேர்சன் பல்கலைக்கழகத்தில் றயேர்சன் அவர்களின் சிலை அகற்றப்பட்டுள்ளது எனவும் அவரது பெயரைப் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கும்படி கோரிக்கை வலுத்து வருகிறது எனவும் அறியப்படுகிறது. மார்க்கப்பள்ளி விவகாரங்களில் றயேர்சன் தீவிர ஊக்குவிப்பாளராக இருந்தார் எனக் கூறப்படுகிறது.