கனடா | முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான முதலாம் கட்ட சர்வதேச பயணக் கட்டுப்பாட்டுத் தளர்வு ஜூலை 5 இல் ஆரம்பம் – அரசாங்கம் அறிவிப்பு

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட கனடியர்கள், கனடிய நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள், கனடாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் ஆகியோர் ஜூலை 5, இரவு 11:59 முதல் எவ்வித தடைகளுமில்லாது கனடாவுக்குள் வரலாம் என சுகாதார அமைச்சர் பற்றி ஹஜ்டு அறிவித்துள்ளார்.

இதுவரை நடைமுறையில் இருந்த 14-நாட்கள் கட்டாய தனிமைப் படுத்தலை இனிமேல் இவர்கள் மேற்கொள்ளத் தேவையில்ல.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி, கனடாவுக்குள் வரும் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் ஓட்டல் ஒன்றில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்வதோடு, எட்டாவது நாளில் நோய்த் தொற்றுக்கான பரிசோதனை ஒன்றையும் செய்துகொள்ள வேண்டும். முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்கள், ஜூலை 5 முதல், இன் நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.

“நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தபடி, மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது எனத் தெரிந்தவுடன் நாங்கள் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறோம். நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்ளும் உத்தேசம் இருந்தால் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்” என அமைச்சர் ஹஜ்டு, திங்களன்று தெரிவித்துள்ளார்.

கனடியர் அல்லாதவர்கள்

இருப்பினும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட கனடியர் அல்லாதவர்களோ, அல்லது முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளாத கனடியர்களோ, அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளும்போது ஏற்கெனவே இருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை அனுசரிக்க வேண்டியிருக்கும்.

கியூபெக் மாகாணத்தவர்

கோவிட் தொற்றுக்குள்ளான கியூபெக் மாகாண மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளத் தேவையில்லை என அம் மாகாண அரசு அறிவித்திருப்பது இப் புதிய சட்டத்தை எப்படி அணுகப் போகிறது எனத் தெளிவுபடுத்தப்படவில்லை. கனடா எல்லைச் சேவைகள் அதிகாரிகள் தமக்குச் சமர்ப்பிக்கப்படும் பத்திரங்களின் பிரகாரம் முடிவுகளை எடுக்கவேண்டி ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. எதற்கும், பயணம் செய்பவர்கள் முற்கூட்டியே தமது பயணத் தகமைகளை விசாரித்து அறிந்து வைத்திருப்பது நல்லது.

எப்படியான நிரூபணம் காட்டப்பட வேண்டும்?

முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் எனப்படுபவர் கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர், மொடேர்ணா, அஸ்ட்றாசெனிக்கா / கோவிஷீல்ட் மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் ஆகிய தடுப்பு மருந்துகளில் ஒன்றையோ அல்லது கலப்படமாகவோ, நாட்டிகுள் புகுவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர். போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இத் தடுப்பூசிகள் கனடாவில் தான் போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அத்தோடு, கனடாவின் அங்கீகரிக்கப்பட்ட மருந்துப் பட்டியல் காலத்துக்குக் காலம் மாற்றப்படவும் கூடும் என்பதையும் மனதில் கொண்டிருக்க வேண்டும்.

பயணம் செய்பவர்கள், முழுமையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுவிட்டதற்கான ஆதாரங்களைக் காகிதத்திலோ அல்லது கைத் தொலைபேசிகளில் டிஜிட்டலாகவோ வைத்திருக்க முடியும். அத்தோடு, கனடாவுக்குள் வருபவர்கள் தமது தடுப்பூசி விபரங்களை, வந்திறங்குவதற்கு முன்னரே இணைய வழியாக அல்லது ஸ்மார்ட் போன்களின் ArriveCAN செயலி மூலமாகத் தரவேற்றி இருக்கவேண்டும். இதற்கான ஆகப் பிந்திய செயலியைத் தரவிறக்கி வைத்துக்கொள்ளும்படி பயணம் செய்பவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். பிழையான தகவல்களை வேண்டுமென்றே தரவேற்றுவது கண்டுபிடிக்கப்பட்டால் $750,000 டாலர்கள் வரை அபராதம் செலுத்தவேண்டியோ அல்லது 6 மாதங்கள் சிறைக்குப் போக வேண்டியோ ஏற்படலாம்.

தரை, ஆகாயம் என்று எந்த மார்க்கத்தின் மூலமும் கனடாவுக்குள் வருபவர்கள், என்ன வகையான தடுப்பூசிகளை, எங்கு, எப்போது போட்டுக்கொண்டார்கள் என்ற தகவல்கள் அனைத்தையும் இறங்கு துறைகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

எப்படியான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்?

  • நோயறிகுறிகள் இருக்கக்கூடாது
  • முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களும் வருவதற்கு முன்னரும், வந்திறங்கியவுடனும் நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.
  • எல்லைக் காவலர் தீர்மானிக்கும் பட்சத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை பயணம் செய்பவர்கள் மனதில் கொள்ள வேண்டும். அத்தோடு பரிசோதனை செய்யப்பட்டதன் பெறுபேறுகளின் நகல் ஒன்றைப் 14 நாட்களுக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
  • முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டவர் நோய்த் தொற்று உள்ளவரெனக் காணப்படும் பட்சத்தில் வந்திறங்கிய மாகாணத்தின் சுகாதார வழிகாட்டல்களுக்குக்கமைய நடந்துகொள்ள வேண்டும்.
  • முழுமையான தடுப்பூசிகளைப் போட்டவர்களுடன், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளாத குழந்தைகள் பயணம் செய்தால், அவர்கள் ஓட்டலில் தங்கியிருக்கத் தேவையில்லை. அவர்களின் வயதுகளைப் பொறுத்து 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலைப் பேணிக்கொள்ளலாம். இச் சந்தர்ப்பத்தில், பெற்றோர்கள், பிள்ளைகளை வீட்டில் தங்கவைத்து விட்டு தாம் வெளிப் பணிகளுக்குப் போகலாம்.
  • இதுவரை தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளாதவர்களும், ஒரு தடவை மட்டுமே தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களும், மூன்று நாள் ஓட்டல் தங்கல், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் உட்படத், தற்போதுள்ள கட்டுப்பாடுகளை அனுசரித்தேயாகவேண்டும்.

முதலாம் கட்ட பயணக் கட்டுப்பாட்டுத் தளர்வின்போது உள்வரவுப் பயணிகள், மொன்றியல் ட்றூடோ சர்வதேச விமான நிலையம், ரொறோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையம், கல்கரி சர்வதேச விமான நிலையம் மற்றும் வான்கூவர் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் மட்டுமே தரையிறக்கப்படுவார்கள்.

புதிய தொற்று அபாயம் காணப்பட்டாலே தவிர, குறைந்தது ஜூலை 21 வரையிலாவது தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமுலிலிருக்கும்.