• Post category:MONEY / CANADA
  • Post published:December 10, 2020
Spread the love

கோவிட் நிவாரணக் கொடுப்பனவுக்குத் (CERB) தகமை பெறாதவர்கள் பெற்ற பணத்தை மீளச் செலுத்துமாறு கனடிய வருமான வரித் திணைக்களம் அவர்களுக்குக் கடிதங்களை அனுப்பவாரம்பித்துள்ளது. இப்படி மீளச் செலுத்தும் பணத்துக்கு வட்டி மற்றும் அபராதம் எதுவும் அறவிடப்படமாட்டாது எனவும் அது அறிவித்துள்ளது.

வருமானவரித் திணைக்களத்திடமிருந்து கடிதங்களைப் பெற்றவர்கள் இம் மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அப்பணத்தை மீளச் செலுத்தினால், அது அவர்களது வருமான வரிக் கணிப்பீட்டைப் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.

நிவாரணக் கொடுப்பனவுக்குத் தகமை பெற ஒருவரது கடந்த 12 மாத வருமானம் $5,000 டாலர்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால் இது ஒருவரது மொத்த வருமானமா (gross) அல்லது செலவுக் கழிவிற்குப் பின்னரான (net) பருமானமா என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கிறது. அரசாங்கத்தின் இணையத் தளம் இதுபற்றி விளக்கமாகக்குறிப்பிடவில்லை. இதனால் $5,000 டாலர்களை மொத்த வருமானமாகப் பெற்று கழிவிற்குப் பின்னர் அதன் தொகை $5,000 த்திற்கும் குறைவாக இருப்பவர்கள் நிவாரணம் பெறும் தகமையை இழக்கிறார்கள். இப்படியானவர்களை அடையாளம் கண்டு வருமானவரித் திணைக்களம் அவர்களது கொடுப்பனவை மீளச் செலுத்தும்படி கடிதங்களை அனுப்பி வருகிறது.

கனடா | மீளப் பெறப்படும் CERB நிவாரணக் கொடுப்பனவு - வருமானவரித் திணைக்களம் கடிதம் அனுப்புகிறது 1
வருமானவரித் திணைக்களத்தின் இணையத்தளக் குறிப்பு. இதில வரிக்கு முன்னரான தொகை $5,000 என்பது செலவுகளைக் கழித்த பின்னரான (net) தொகை எனவே கருதப்பட வேண்டும்.


வருமானவரித் திணைக்களத்தின் தகமைக் குறிப்பில் இது கூறப்பட்டிருக்கிறது எனினும் gross / net என்னும் பதங்கள் இங்கு பாவிக்கப்படவில்லை. “வரிக்கு முன்னர் $5,000” என்பது செலவு தள்ளி பின்னர் வரி செலுத்துவதற்கான தொகை எனவே கொள்ளப்படவேண்டுமெனக் கருத இடமுண்டு.

சிலர் ஒவூதியம், வாடகை வருமானம் போன்றவற்றையும் சேர்த்து கடந்த வருட வர்மானமாகக் கணித்து தாம் தகமை பெற்றவர்கள் எனத் தவறாக விண்ணப்பித்துள்ளார்கள். கடந்த வருடம் செய்த வேலை மூலம் அல்லது சுய தொழில் மூலம் கிடைத்த வருமானத்தின் செலவு தள்ளிய தொகை $5,000 த்துக்கு மேல் இருந்தால் மட்டுமே ஒருவர் CERB நிவாரணத்துக்குத் தகமை பெறுகிறார்.

Print Friendly, PDF & Email