US & Canada

கனடா | மீண்டுமொருதடவை ரயிலைத் தவறவிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி

அலம்பலும் புலம்பலும் – சிவதாசன்


இன்று மதிய உணவின்போது அரசியலில் மட்டும் அரசியாக இருக்காத என் மனைவி ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். கனடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டி முடிவுகள் பற்றியிருந்தது அது. ஒரு சாதாரண கனடியரின் மனநிலை எப்படியிருக்குமென்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

எனது மனைவி பெரும்பாலான தருணங்களில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களிப்பவர். அது பெரும்பாலும் ட்றூடோ போன்றவர்களுக்கு எதிரான வாக்குகளே தவிர கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவானதல்ல. இப் பின்புலத்தில், இரவு நடந்து முடிந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தல் இங்கே பார்க்கப்படுகிறது.

மனைவி சொன்னார், “எனக்கு எரின் ஓ’ரூல் யாரென்றே தெரியாது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சி தன் தலைவரைத் தேர்ந்தெடுப்பது வெறுமனே கட்சிக் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக அல்ல, தற்போதுள்ள அரசாங்கத்தைத் தோல்வியடைய வைப்பதுவே முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னுள்ள ‘எதிரி’ ட்றூடோ. அவரது இளமைக்கும், துடிப்புக்கும், வாக்குவன்மைக்கும் சவாலாக இருக்கக்கூடிய தலைவர் தான் இப்போது கட்சிக்குத் தேவை. அதுவே இளைய தலைமுறையினரின் வாக்குகளைக் கொண்டுவரக்கூடியது. முந்தய தலைவர் ஆண்ட்றூ ஷியர் மாதிரி பழைய தேவாலயப் பிரசங்கிகளின் கொள்கைகள் (Social conservatism) இப்போதைய கன்சர்வேட்டிவ் தலைமுறையிடம் செல்லுபடியாகாது. எரின் ஓ’ரூல் காலத்துக்கு முற்பட்டவர். பீட்டர் மக்கேயைத் தெரிவிசெய்யாததால் ட்றூடோவுக்கு இன்னுமொரு தடவை ஆள வாய்ப்பிருக்கிறது” என்று முடித்தார் அம்மையார், a common sense revelation?

நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த ஒரு விடயத்திலேனும் உடன்படவேண்டி வந்தது. வழக்கமான ‘தமிழ்நெஸ்’ அதற்கு விடவில்லை. அது கன்சர்வேட்டிவ் கட்சியின் மீதான அக்கறையால் வந்ததா அல்லது ட்றூடோ மீதான வெறுப்பினால் வந்ததா? – அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனுக்கு பேச்செழுதிக் கொடுக்கும் பற்றிக் புக்கன்னன் அவர்கள் எங்கோ குறிப்பிட்டிருந்த ஒரு குறுஞ் செய்தியின் சாரம்சம் இது: ” ஒரு அரசியல்வாதி, தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன் வாக்காள விருப்பு வெறுப்புக்களை அனுசரித்து அதற்குத் தக்கபடி தாளம் போட்டுத் தளத்தைத் தீர்மானிக்க வேண்டும். வெற்றி பெற்ற பின்னர் யதார்த்த அரசியல் தளத்துக்கு நகர்ந்துவிடவேண்டும்”.

எரின் ஓ’ரூல் 2017 கட்சித் தலைமைக்கான தேர்தலில் ஒரு மிதவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தார். இந்த தடவை போலவே அப்போதும் மூன்றாம் இடத்தில் இருந்த ஆன்ட்றூ ஷியர் தீவிர வலதுசாரிகளால் முன்தள்ளப்பட்டார். எரின் ஓ’ரூல் அப்போது கற்றுக்கொண்ட பாடம், வெற்றிபெற வேண்டுமானால் வலது பக்கம் நகர்ந்தேயாக வேண்டும். அவர் கற்றுகொண்ட ‘புக்கன்னன்’ பாடம் வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

கேள்வி, அவர் அங்கேயே நிற்பாரா அல்லது கொஞ்சம் இடப்பக்கமாக நகர்வாரா? அங்கேயே நின்றால் அண்ட்றூ ஷியரைப் போலப் படுதோல்வியடையும் தலைவராக மாறுவார். இன்னும் காலமிருக்கிறது அவதானிக்க.

ஸ்டீபன் ஹார்ப்பர் ஒரு தீவிர வலதுசாரியாக இருந்தாலும் அவரிடம் இருந்த ஆளுமை பல தடைகளையும் தகர்த்தெறியும் வல்லமையுடன் இருந்தது. பேச்சுக்களில் நிதானம் இருந்தது. மாறாக அண்ட்றூ ஷியர் ஒரு மத போதகரது ஆளுமையையே கொண்டிருந்தார். ஒரு Sunday school teacher என்ற ஸ்தானத்துக்கு அப்பால் அவரால் நகர முடியவில்லை. ட்றூடோவைத் தோற்கடிக்கக்கூடிய அருமையான சந்தர்ப்பத்தைத் தனியொருவராக அவர் தவறவிட்டிருந்தார். நேற்று, கட்சித் தலைமையைக் கையளிக்கும்வரை அவரின் குணாதிசயம் மாறவேயில்லை. தானே மீண்டுமொரு தடவை தலைமைப் பதவியை வென்றது போல மகிழ்ச்சியில் திளைத்தார். எரின் ஓ’ரூலின் வெற்றிக்கு, அதி தீவிர வலதுசாரிகளோடு, அவரது பங்களிப்பும் நிறைய இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.போட்டியின் மூன்றாவது சுற்று வாக்கெடுப்பின்போது, தலைமைக்கான போட்டியில் போட்டியிட்ட ஒரெயொரு பெண்ணும், கறுப்பினத்தைச் சேர்ந்தவருமான லெஸ்லின் லூவிஸ் அவர்களின் வாக்குகளே எரின் ஓ’ரூலின் வெற்றிக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒரு செய்தி. வெள்ளையர்களை ‘old stock’ என விழிக்கும் ஸ்டீபன் ஹார்ப்பரின் ஆதரவும் எரின் ஓ’ரூலிற்கே இருந்தது போலத் தெரிகிறது. கனடாவின் மேற்கு மாகாணமான அல்பேர்ட்டாவில் ஜேசன் கெனி போன்ற தீவிர வலதுசாரிகளின் ஆதரவும் அவருக்கே இருந்தது. இதிலிருந்து எரின் ஓ’ரூலின் நிலைப்பாடு என்னவென்று தெரிகிறது.

லெஸ்லின் லூவிஸும் ஒரு தீவிர வலதுசாரி என அடையாளம் காணப்பட்டவர். தேர்தல் என்று வரும்போது அவரால் எப்படியான உதவியை ஓ’ரூலுக்கு வழங்கமுடியுமென்பது சந்தேகமாகவிருந்தாலும் அவர் வழங்கிய ஆதரவுக்கு, ஒரு அமைச்சர் பதவிக்கு இடமுண்டு. என்ன இருந்தாலும், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைக்கான தேர்தலில், ஒரு கறுப்பினப்பெண் 25% வீதம் வாக்குகளை எடுத்து மூன்றாவதாக வருவது என்பது ஒரு வகையில் சாதனைதான். அவருக்கு வாழுத்துக்கள்!

பீட்டர் மக்கே தலைவராகுவார் என்ற எதிர்பார்ப்பு பல மூலைகளிலும் எதிரொலித்தது. என்ன நடந்தது? ஒரு விடயம் புலப்படுகிறது. பணம் செலவழித்து (?) கட்சியின் அங்கத்தவர்களாக இருப்பவர்களும், ஆக்கப்படுபவர்களும் தான் உண்மையான ‘கட்சிக்காரர்கள்’. ஏனையோர் கட்சியின் வாக்காளர்கள். கட்சிக்காரர்கள் குறிப்பிட்ட தேவையை முன்வைத்து வாக்களிப்பவர்கள். வாக்காளர்கள் நாட்டின் நன்மையை முன்வைத்து வாக்களிப்பவர்கள். மக்களிடம் சென்றிருந்தால் மக்கே வென்றிருக்க வாய்ப்புண்டு. அவரிடம் இளமையிருக்கிறது, துடிப்பிருக்கிறது, அனுபவமிருக்கிறது, லிபரல் கட்சியின் முற்போக்கு (?) கொள்களில் சில அவரிடமும் உள்ளன. அந்த வகையில் அவருக்கும், ட்றூடோவுக்கும் அதிகளவு வித்தியாசமில்லை. ட்ற்டோ போன்றோர் மக்களிடமிருந்து அந்நியப்படும்வரை, அவர்போன்றோரிடமிருந்து ஆட்சியைப் பறிக்க கொஞ்சம் வித்தியாசமான இன்னுமொரு ட்றூடோதான் வேண்டும். அது இப்போதைக்கு மீட்டர் மக்கேதான்.

சீன செல்வந்தர்களுடன் வான்கூவரில் விருந்து, ஆகா கானின் தீவில் விருந்துபசாரம், எஸ்.என்.சி லவாலன் ஊழல், தற்போது ‘வீ’ தர்மஸ்தாபன ஊழல் எனப் பல சகதிகளில் ட்றூடோ விழுந்து புரண்டிருந்தாலும், ஒன்றும் அவரிடம் ஒட்டிக்கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பலமான எதிர்க்கட்சித் தலைமை இல்லாமையே. தற்போது கோவிட்-19 இன் நிழலில் ட்றூடோ சற்றே ஓய்வெடுக்கிறார். பீட்டர் மக்கேயானால் அவரது ஆசுவாசத் தூக்கம் மணியடித்து எழுப்பப்பட்டிருக்கும். எதோ அவரது சாதகத்தில் பத்தாம் இடம் பலம் பெற்றிருக்கிறது. இப்போது வீடு மாறமாட்டார் போலத் தெரிகிறது.

மீண்டுமொருதடவை கன்சர்வேட்டிவ் கட்சி ரயிலைத் தவறவிட்டுவிட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள்