US & Canada

கனடா: புதிதாகக் குடிவரும் பராமரிப்பு பணியாளர்களுக்கு வருகையின்போதே நிரந்தர வதிவிட உரிமை

குழந்தை, முதியோர் மற்றும் இயல்புக் குறைபாடுகள் உள்ளவர்களைப் பராமரிக்கக்கூடிய குடிவரவாளர்களுக்கு வருகையின்போதே நிரந்தர வதிவிட உரிமையை வழங்கும் தற்காலிக திட்டமொன்றை கனடிய அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளது.

அதிகரித்து வரும் முதியோரின் எண்ணிக்கை மற்றும் சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை ஆகியவற்றைச் சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து சுகாதாரப் பராமரிப்பாளர்களை உள்ளெடுக்கும் வகையில் இரண்டு நடைமுறைகளை கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கடந்த வாரம் அறிவித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஐந்து ஆண்டுத் திட்டத்தின்படி, வீட்டில் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியாளர் மற்றும் வீட்டில் முதியோர், இயலாதோரைப் பராமரிக்கும் பணியாளர் என இரண்டு வகைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் நிரந்தர குடியுரிமையைப் பெறுவதற்கு பல வருடங்கள் காத்திருக்கவேண்டி இருக்கிறது என நீண்டகாலமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளன. இப்பரீட்சார்த்தத் திட்டம் இம்மாதம் 17ம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது. இதன் மாற்றீடாக அறிவிக்கப்பட்ட புதிய தற்காலிக (piolt) திட்டத்தின் கீழ் மேற்படி பராமரிப்பு பணிகளுக்கு வரும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வருகையின்போதே நிரந்தர குடியுரிமையை வழங்கும் தற்காலிக திட்டத்தை இப்போது கனடிய அரசு அறிவித்திருக்கிறது.

முந்தைய திட்டத்தின்படி வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு பராமரிப்பு பணியாளர் 12 மாதங்கள் கனடிய அனுபவத்தைப் பெற்றதன் பின்னரே நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் காரணமாக பல பணியாளர்கள் பாதுகாப்பாற்ற, துஷ்பிரயோகம் செய்யப்படும் பணிகளில் விருப்பின்றிப் பணியாற்றவேண்டி ஏற்பட்டது.

அடுத்த வருட ஆரம்பத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் இப்புதிய திட்டத்தின் மூலம் குடிபுகவிரும்பும் பராமரிப்பு பணியாளர்கள் மொழி மற்றும் கல்வித் தராதரங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனைகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய திட்டத்தின்படி உள்வரும் பணியாளர்கள் ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழிகளில் ஐந்தாம் தரத் தகைமையைக் கொண்டிருக்கவேண்டி இருந்தது. புதிய திட்டத்தின்படி இத்தராதரம் குறைக்கப்பட்டு ஒரு வருட இரண்டாம் நிலைக் கல்வி (post secondary) அல்லது அதற்குச் சமமான வெளிநாட்டுக் கல்வித் தராதரத்தைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது உயர்நிலைக் கல்வியுடன் தொழில்சார் அனுபவத்தைக் கொண்டிருக்கவேண்டும். அத்தோடு பணியைக் கோரும் இடத்திலிருந்து ‘வேலைக்கான தேவை இருக்கிறது’ என (offer of employment) ஒரு கடிதமும் பெறப்பட்டிருக்க வேண்டும்.

2023 ஆம் ஆண்டு கனடா 3,000 பராமரிப்பாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் குடிவர அனுமதித்திருந்தது எனவும் இவர்களில் 2,000 த்துக்கும் மேலானவர்கள் நிரந்தர குடியுரிமையைப் பெற்றுள்ளார்கள் எனவும் அமைச்சர் மில்லர் தெரிவித்துள்ளார்.Photo by Sandy Millar on Unsplash