NewsUS & Canada

கனடா | பிரிட்டிஷ் கொலம்பியா கொலைகளின் சந்தேகநபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன!

வினிபெக், ஆகஸ்ட் 7, 2019

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடைபெற்ற கொலைகளின் பின்னாலுள்ள சந்தேகநபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் (RCMP) அறிவித்துள்ளனர். வட மனிற்றோபாவிலுள்ள நெல்சன் ஆற்றங்கரையில் உள்ள அடர்ந்த பற்றைகளினிடைய அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் போர்ட் அல்பேர்ணி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பிறையெர் ஷ்மெகெல்ஸ்கி மற்றும் 19 வயதுடைய காம் மக்லவ்ட் ஆகியோரது உடல்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூன்று பேர்களின் கொலைகளில் இவர்கள் சந்தேக நபர்களெனக்  காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

சந்தேகநபர்களீன் உடமைகள் எனக் கருதப்படும் சில பொருட்கள் நெல்சன் ஆற்றங்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இவ்விடத்திலிருந்து ஒரி கி.மீ. தூரத்தில் இன்று சந்தேக நபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

23 வயது அவுஸ்திரேலியர் லூகாஸ் பவுலருடன் அவரது அமெரிக்க காதலி
24 வயதுடைய சின்னா டீஸ் – படம்: AP

‘எனது மகன் ஒரு தற்கொலை நோக்கோடு புறப்பட்டிருக்கிறான். அவன் ஒருபோதும் உயிருடன் பிடிபடமாட்டான்’ என பிறையெர் ஷ்மெகெல்ஸ்கியின் தந்தை கூறியிருந்ததாக கடந்த ஜூலை 24ம் திகதி செய்திகள் வெளியாகியிருந்தன.

“அவனது இளம் பராயத்திலேயே எமது குடும்பம் பிரிந்துவிட்டதனால் அவனது வளர்ப்பு தீவிர குழப்பங்களோடும் வலிகளோடும் அமைந்திருந்தது. வீடியோ விளையாட்டுக்களும், ‘யூ-டியுப்’ புமே அவனது விளையாட்டுத் துணைகள். ஒரு சாதாரணமான பிள்ளை எல்லைகளைக் கடந்து சென்று கொலைகளைச் செய்ய மாட்டான். தீராத வலிகளைச் சுமந்து நிற்கும் ஒரு பிள்ளையே அதைச் செய்வான். காவல்துறையினருடனான சண்டையில் அவன் இறுதியில் இறந்து போவான். அவனது வலிகள் இறுதியில் தீர்ந்து போகும். அமைதியில் ஆழ்வாய் பிறையெர். நான் உன்னை நேசிக்கிறேன். இப்படியெல்லாம் நடைபெற்றதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்” என பிறையெரின் தந்தை அலன் ஷ்மெகெல்ஸ்கி அப்போது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டறில் டைக். இவரது உடல் எரிந்த வாகனத்தில் கண்டெடுக்கப்பட்டது

பிறையெருக்கு 5 வயதாயிருக்கும்போது அவனது தாய் தந்தையர் பிரிந்து விட்டனர். தாயார் மகனை அழைத்துக்கொண்டு போர்ட் அல்பெர்ணிக்குச் சென்றுவிட்டார். பிறையெர் அங்குதான் தனது சகாவான மக்லவ்ட் டோடு நட்பாகினான். இருவரும் அங்குள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்றனர். இணை பிரியா நண்பர்களாகினர். உயர்பாடசாலைக் கல்வி முடிந்ததும் பிறையெர் போர்ட் அல்பெர்ணியிலுள்ள வால் மார்ட்டில் வேலை ஒன்றைப் பெற்றான். அவ் வேலையில் திருப்தியுறாத காரணத்தால் அவன் தன் தோழன் மக்லவ்ட்டுடன் வேலை தேடுவதற்காக அல்பேர்ட்டா மாகாணத்திற்குச் சென்றான்.  பிறையெர் தனது வால்மாட் வேலையை முடித்துக்கொண்டபோது கிடைத்த சம்பளத்தில் ஒரு அழகிய கருப்பு ‘சூட்’ ஒன்றை வாங்கியிருந்தான். “இப்பொழுது தான் நான் உணர்கிறேன் அது அவனது மரணச் சடங்கின்போது அணிவதற்காக வாங்கப்பட்டதென” என அவனது தந்தையார் வருத்தத்தோடு கூறியிருந்தார்.

போர்ட் அல்பெர்ணியில் தடாகக் கரையில்  ‘ நுழைவு அனுமதியில்லை’ என்ற பதாகையின் பின்னால் காட்சியளிக்கிறது மக்லவ்ட்டின் ‘மாளிகை’. “எனது மகன் காம் ஒரு நல்லவன், மற்றவர்களின் மனம் கோணாமல் நடக்கும் ஒரு பிள்ளை. எனது மகன் வீட்டுக்கு வருவான் அப்போது என்ன நடந்தது என்பது பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளலாம்” எனக் காமின் தந்தை வீட்டினுள்ளே இருந்தபடியே ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை குறிப்பிடுகிறது.

எரிந்த வாகனத்தில் காணப்பட்ட அடையாளம் காணப்படாத உடலுக்குரியவரும், அலாஸ்கா பெருந்தெருவில் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட டீஸ் மற்றும் பவுலர் ஆகிய இருவரும் இந்த இரு இளைஞர்களால் கொல்லப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களின் தந்தையர்கள் கூறியதாக எவ்வித செய்திகளும் அறியப்படவில்லை.

மூலம்: அஸோசியேட்டட் பிரஸ்.