• Post category:CANADA
  • Post published:August 13, 2020
Spread the love

மாயமான்

ஆகஸ்ட் 13, 2020: கனடிய அரசு சேவைக்கமர்த்திய தொண்டு நிறுவனமான வீ (WE) யுடன் உறவுகளைப் பேணியதன் மூலம் தனிப்பட்ட முறையில் பலன் பெற்றார்கள் என பிரதமர் ட்றூடோ, நிதியமைச்சர் மோர்ணோ ஆகியோர் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதுடன், அவர்களைப் பதவிகளிலுருந்து விலகும்படியும் கேட்டு வருகின்றன.

கோடைகாலப் பாராளுமன்ற அமர்வின்போது, எதிர்க்கட்சிகளில் ஒன்றான கியூபெக் மாகாணத்தின் புளொக் கியூபெக்குவா கட்சி, பிரதமரும், அவரதி இரண்டு மூத்த அதிகாரிகளும் பதவி விலக வேண்டுமென்று இன்று கோரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் பதவி விலக மறுத்தால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து அரசைக் கவிழ்க்கப்போவதாக அக் கட்சியின் தலைவர் எச்சரித்துள்ளார்.

பிரதமர் ட்றூடோ நேற்று பாராளுமன்றத்தில் சமூகமளிக்காமையால் நிதியமைச்சர் மோர்ணோ சபையில், எதிர்க்கட்சிகளின் கடுமையான கேள்விகளுக்கு முகம்கொடுக்க வேண்டியதாயிற்று.

பிரச்சினை என்ன?

கனடாவின் கோவிட்-19 தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் கனடிய மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம், தாமும் பயன் தரும் அனுபவங்களைப் பெறும் அதே வேளை, சமூகங்களுக்கும் அதனால் பலன் கிடைக்கும் என்ற ஒரு திட்டத்தை கனடிய பிரதமர் அறிமுகப்படுத்தியிருந்தார். கனடா மாணவர் சேவை மானியம் (Canada Student Services Grant) என்ற இத்திட்டத்தில் பங்குபெறும் மாணவர்களுக்கு அரசாங்கம் உதவி மானியமாக $1,000 முதல் $5,000 வரை கொடுப்பதாக அறிவித்தது. இம் மானியத்தைப் பெற மாணவர்கள் 100 மணித்தியாலங்கள் முதல் 500 மணித்தியாலங்கள் சமூகத் தொண்டு புரிந்திருக்க வேண்டும்.

இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கனடிய அரசு பதியப்பட்ட தொண்டு நிறுவனங்களை நாடியது. வீ (WE) எனப்படும் தொண்டு நிறுவனம் இம் மானியத்தை நிர்வகிக்கவென சேவையில் அமர்த்தப்பட்டது.

கிறேக் கியெல்பேர்கர் என்பவர் ஆரம்பித்த, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட இன்நிறுவனம் தானமாகப் பெறும் பணத்தைக் கொண்டு உலகில் பல நாடுகளில் வறுமையை ஒழிப்பதற்காகப் போராடும் ஒரு அமைப்பெனக் கூறப்படுகிறது.

இவ்வமைப்பைக் கனடிய அரசு தனது $912 மாணவர் மானியத் திட்டத்தை நிர்வகிக்குமாறு கோரியதுடன் அதற்கான பணத்தையும் கொடுப்பதாக அறிவித்தது.தொடர்பு

இதற்கிடையில், இந்த தொண்டு நிறுவனம் தன்னைப்பற்றி ‘விளம்பரம் செய்து’ தானங்களைப் பெறுவதற்காக சமூகத்தில் பிரபலமானவர்களைப் ‘பேச்சாளர்களாக’ அழைத்து அவர்களுக்கு அதற்காகச் சிறு சன்மானங்களையும் கொடுப்பது வழக்கம். இப்படியான சன்மானமாக பிரதமரின் தாயார், மனைவி, சகோதரர் ஆகியோருக்குப் பெருந்தொகையான பணத்தை இந் நிறுவனம் வழங்கியிருக்கிறது. அதே வேளை கனடிய நிதியமைச்சர் பில் மோர்ணோவின் இரண்டு மகள்களுக்கு விமானச் செலவு மற்றும் இதர செலவுகள் என $41,000 டாலர்களை வழங்கியிருக்கிறது.

கனடிய அரசின் இன் நிதி நிர்வாகத்தைப் பெற்று இலாபமடைவதற்காக இத் தொண்டு நிறுவனம் பிரதமரின் குடும்பத்துக்கும், நிதியமைச்சரின் குடும்பத்துக்கும் ஊக்கப்பணம் கொடுத்த நடைமுறை நேர்மையற்றது, நீதியற்றது நெறி பிறழ்ந்தது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதனால் பிரதமரையும், நிதியமைச்சரையும் பதவி விலகும்படி அவை அழுத்தம் கொடுக்கின்றன. அத்தோடு, இச் சர்ச்சைகளினால், வீ தொண்டு நிறுவனத்தை அரசு தனது சேவைகளுக்குப் பாவிப்பது என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டது.

இவ் விடயத்தில் இருவரும் தவறிழைத்திருக்கிறார்கள் என அரசாங்கத்தின் இதர அமைச்சர்கள் ஒத்துக்கொண்டாலும், தற்போதுள்ள கோவிட்-19 அவசரகால நிலையைத் திறம்பட நிர்வகிப்பதால் அவர்களை மன்னித்துவிடலாம் எனக் கருதுகிறார்கள். ஆனாலும் எதிர்க் கட்சிகள் அதற்கு உடன்படுவதாக இல்லை

பிரதமர், நிதியமைச்சரின் நிலைப்பாடுகள்

இவ் விடயத்தில் தான் ஒரு தவறும் இழைக்கவில்லை. தன் குடும்பத்தினர் இவ் விடயத்தில் தொடர்பு பட்டிருப்பதால் தான் ஆரம்பத்திலேயே இதில் சம்பந்தப்படாமல் சம்பந்தப்பட்ட அமைச்சை இதைக் கையாளவிட்டிருக்கலாம் எனபதற்காகத் தான் இப்போது கவலைப்படுவதாகவும் ஆனால் தன்மீது குற்றமெதுவுமுமில்லை எனவும் பிரதமர் ட்றூடோ கூறுகிறார்.

நிதியமைச்சரைப் பொறுத்த வரையில், தன் மகள்களுக்குக் கொடுக்கப்பட்ட $41,000 டாலர்களைத் தான் திருப்பித் தருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள்

இவ் விடயத்தில் சகல எதிர்க்கட்சிகளும் ஒரு மனதுடன் இருப்பதுபோல் தெரிகிறது. இரு அமைச்சர்களும் பதவி விலகவேண்டும் என்பது முதல் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை மீறிவிட்டது எனவே அது கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பதுவரை எதிர்ப்பலைகளின் வேகம் அதிகரித்தபடி இருக்கிறது. இதுவெல்லாம் ஒரு seasonal affair என மக்கள் பாராமுகமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு, கிட்டத்தட்ட மாரித் தவளைகளின் நிலைதான்.மக்கள்

கோவிட்-19 தொற்று தனது முடிவை இன்னும் அறிவிக்காத வரை மக்களும் புதிய தேர்தல் ஒன்றுக்குத் தயாராக இருப்பார்கள் எனக் கூறமுடியாது. பிரதமர் கோவிட்-19 தனக்கு வழங்கிய கவசத்தால் இறுக்கிப் போர்த்துக்கொண்டு அவ்வப்போ மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தைக் கொட்டிக்கொகொண்டு சூரிய நமஸ்காரத்தில் முனைப்பாக இருப்பதுபோல் தெரிகிறது. அவர் இப்படியான விடயங்களுக்குப் பழக்கப்பட்டுப் போனவர். ஆகா கான், எஸ்.என்.சி. லவலின் என்று அவருக்கு ஏகப்பட்ட அனுபவங்கள். அவருக்காகப் பதவியிழக்க யாரோ ஒருவர் வரப்போகிறார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

Print Friendly, PDF & Email