Columnsகனடா மூர்த்தி

கனடா | பிரச்சனைகளில் குளிர் காயும் அரசியல்வாதிகள்

கனடா மூர்த்தி

மார்ச் 07, 2020

கனடா மூர்த்தி

ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினரான லோகன் கணபதி சமீபத்தில் ஒரு அறிக்கை விட்டிருந்தார். காரணம்? ஒன்ராறியோ அரசாங்கத்திற்கும், ஆசிரியர்களின் தொழிற்சங்கத்திற்கும் இடையேயான வேலை நிறுத்த முறுகல்நிலை தீர்ந்தபாடில்லை அல்லவா..  அதன் விளைவாக, பல பாடசாலைகள் ஒழுங்காக இயங்குவதாயும் இல்லை. அதனால் “ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்புகள் அனைத்து தரப்பினருடனும் நல்ல நம்பிக்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், வேலை நிறுத்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் நேரம் வந்துவிட்டது, இது எங்கள் குழந்தைகளை அளவுக்கு மீறிப் பாதிக்கிறது” என்று தனது அந்த அறிக்கையில் மார்க்கம் தோர்ன்ஹில் எம்.பி.பியான லோகன் கணபதி கூறியிருக்கிறார்.

ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்புகள் அனைத்து தரப்பினருடனும் நல்ல நம்பிக்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், வேலை நிறுத்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் நேரம் வந்துவிட்டது, இது எங்கள் குழந்தைகளை அளவுக்கு மீறிப் பாதிக்கிறது

ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி


“ஒரு அறிக்கை விடவேண்டும்” என்பதற்காக விடப்பட்ட அறிக்கைதான் அது என்றுதான் அதனை என்னால் காண முடிகிறது. தவிர “ஒப்பந்தததை எப்படி எட்டுவது?”, “வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அந்த ‘நல்ல நேரத்தை’ எப்படி எட்டுவது?” என்பவற்றிற்கான விளக்கங்கள் எதுவும் அந்த அறிக்கையில் இல்லை.  அதையெல்லாம் சொல்ல, தற்போதைய கொன்ஸவேடிவாயும், லிபரல் கட்சியின் முன்னாள் தீவிர உறுப்பினராயும், அதற்கு முன்னால் இலங்கையில் இடதுசாரிக் கட்சிகளின் கீழ் படு தீவிரமாக இயங்கியவராயும் அறியப்படும் லோகன் கணபதி இப்போது தயங்குவதற்கான காரணம் என்ன? (லோகனுக்கு பதவி முக்கியமன்றோ..)  பிரச்சினை எதுவும் இப்போது வேண்டாம். 

ஆனா நாங்க அப்பிடி இருக்க ஏலுமா? இல்லையெல்லோ… இடதுசாரிக் கொள்கைகளையும், தீவிர முதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளையும் ஒருசேரப் பார்த்து, ‘காய்த்தல்’ இல்லாமல், உவத்தலோடு சொல்லும் நடுநிலை கொண்டவர்களாக, இந்த முறுகல் நிலைமையை நாம் அலசி ஆராய்ந்து பார்க்கவேண்டி இருக்கிறது – குறைந்த பட்சம் ஒரு கட்டுரை எழுதலாம் என்பதற்காக! (நம்மால் முடிந்தது அவ்வளவுதான்..)

நிலைமையைக் கவனித்துப் பாருங்கள். அரசாங்கம்-தொழிற்சங்கம் இவற்றிற்கிடையே சமீபத்தில் ஏற்பட்டுவிட்ட இந்த முறுகல் நிலைக்குக் காரணம்தான் என்ன? “கொன்ஸவேடிவ் கட்சியின் அரசாங்கத்திற்கும், லிபரல் கட்சியின் மாபெரும் அனுதாபிகளாகத் திகழும் தொழிற்சங்கத்திற்கும் இடையேயான பிணக்கு இது” என்ற காரணத்தைப் புரிந்து கொள்ள  ரொக்கட் ஸயன்ஸ் தெரிந்திருக்க வேண்டியதில்லை.

ஒன்ராறியோ அரசாங்கம் செய்திருக்கும் கல்வி மறுசீரமைப்பு திட்டம்சார் முறைமைகளைப் பற்றிப் படித்து  ஆராய்ந்து பார்த்தால் – இந்த நடவடிக்கையைப் பிடிக்காதவர்கள் சொல்வதுபோல – அது ஒன்றும் மக்கள் விரோத நடவடிக்கை அல்ல என்பதைக் கவனிக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் “இதற்கு முந்தைய அரசாங்கங்களின் நடவடிக்கைகளாலும், உலகளாவிய சிக்கல்களாலும் சரிந்து கிடக்கும் ஒன்ராறியோவின் பொருளாதாரத்தைச் சீராக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்தான் அவை. அதனால் சில சிரமங்கள் ஏற்படுகிறது என்பதும் உண்மைதான். ஆனால் அடுத்த தலைமுறையின் நன்மைக்காக ஒன்ராறியோ மக்கள் தம்மால் முடிந்த அளவிற்கு சில தற்காலிக தியாகங்களை செய்யவேண்டும்” என்றும் இதை புரிந்து கொள்ளலாம்.  அப் புரிதல் மூலம் இந்த நடவடிக்கையைப் பிடிக்காத பொதுமக்கள் தம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொழிற்சங்கங்கள் அப்படியான ‘சமாதான நிலைப்பாட்டை’ எடுக்குமா என்பது கேள்வியே.தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களுக்காகத்தான் உருவாக்கப்படுபவை என்பதில் ஐயம் கிடையாது. ஆனால் “பல தொழிற்சங்க நிர்வாகங்கள், தமது தீவிர போராட்ட குணத்தால் முற்று முழுதாக முதலாளிகள் போலவே நடக்கின்றன” என்ற குற்றச்சாட்டுக்களையும் நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். தொழிற்சங்கத்திற்கு பாதகமாக கருத்துக்களை சொன்னால் அது ‘கருங்காலித்தனம்’ என்ற வகையறா முத்திரை குத்தல்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு தொழிற்சங்கங்கள் நடந்து கொள்ளும் விதம்பற்றியும் நாம் அலசி ஆராய வேண்டும். 
இதையெல்லாம் நாம் செய்கிறோமா? இல்லை!

நவீன முதலாளித்துவ அமைப்பில் – தொழிற்சங்கங்களின் தேவைகளை இல்லாதொழிக்க- சோசலிசதத்துவங்கள் சொல்லும் பல திட்டங்களை  முதலாளித்துவ அரசாங்கத் தரப்பினரே செயல்படுத்துவார்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் – கொன்ஸவேடிவ் அரசோ, லிபரல் அரசோ, என்டிபியோ – ஒரு முதலாளித்துவ அமைப்பில் அரசாங்கம் ஒரே போலத்தான் இயங்கும். அரசாங்கத்தின் அடிப்படைக் குணாம்சம் ஒன்றேதான். எம்மை மயக்க நிலையில் வைப்பவைதான் கட்சிகள்.
தற்போதை முறுகல் நிலை ஏற்படதற்கு ஒன்ராறியோ அரசாங்கத்திலும் பிழை இருக்கிறது. தாம் கொணர்ந்திருக்கும் கல்வி மறுசீரமைப்பு முறைமை குறித்து மக்கள் மத்தியில், ஆசிரியர்கள் மத்தியில் உரிய கலந்தாலோசிப்புக்கள், பின்னாலோசனை ஏற்புக்கள் செய்யாமல் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டமையே தற்போது ஏற்பட்டிருக்கும் பல சிக்கல்களுக்கும் பிரதான காரணமாகக் கருதப்பட முடியும். அதேசமயம் விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலைமை தொடர்வதற்கு அரசாங்க தரப்பு சொல்வதுபோல தொழிலாளர் இயக்கம் மட்டுமே காரணம் அல்ல.  அரசாங்கம் – தொழிற்சங்கங்கள் இரு பகுதிகளும் காரணம்.

இன்றைய கொரோனா வைரஸ் காலகட்டத்தில் ‘தொழிலாளர் இயக்கத்தின் நவீனமயமாக்கல்’ என்பது ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான ‘மோதல்சார் உறவுகளை’ விட ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட உறவாக இருக்க வேண்டும். பாரம்பரிய ‘முதலாளி விரோத’ தொழிற்சங்க வாதத்தில் ஈடுபடுவதைவிட, முதலாளிகளும், தொழிற்சங்கத் தலைவர்களும் அரசாங்கத்தோடு இணைந்து சட்டரீதியான வாரியங்களை அமைத்து, அங்கு ஒன்றாக உட்கார்ந்து, கொள்கை வகுப்பில் ஈடுபட வேண்டும். வேறு நடுவர் இல்லாமல் தாமாகவே பேச்சுவார்த்தைகளை நடத்தவும் சமரசத்தை எட்டவும் வழி அமைக்க வேண்டும். 
சுருக்கமாகச் சொன்னால் சட்டங்கள் இயற்றப்படும் முன்னரே (1) முதலாளி  (2) தொழிற்சங்கம் (3) அரசாங்கம் ஆகிய முத்தரப்பும் ஒன்றாக உட்கார்ந்து பேசும் முறைமையும், அதன்மூலம் ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.“நடைமுறைப்படுத்த முடியுமா? நடைமுறையில் இது சாத்தியமா?” என்ற கேள்வி ஒன்று இக்கட்டத்தில் அவநம்பிக்கைவாதிகள் மனத்தில் தோன்றாமல் இருக்காது. இது போதாதென, “முதலாளியும் தொழிற்சங்கமும் அரசாங்கமும் எப்படி சேர்ந்து இயங்க முடியும்?” “அரசாங்கம் முதலாளிகளை வாங்கிவிடும்”, “முதலாளிகள் தொழிற்சங்கத்தை வாங்கிவிடுவார்கள்”, “தொழிற்சங்கங்கள் சோரம் போய்விடும்” என்றெல்லாம் பல ஆய்வாளர்கள் – முக்காலமும் உணர்தவர்கள்போல – ஏதோ தமக்குத் தெரிந்ததை அவிழ்த்துவிடுவார்கள். அவநம்பிக்கை வாதம் அப்படித்தான் அவர்களைச் சொல்லச் சொல்லும்.

லோகன் கணபதி கண்ணீர் வடிக்கும் இன்றைய இந்த முறுகல் நிலைக்கு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு  கேட்பது ஒரு காரணமாகும். அரசாங்கம் அதை மறுப்பது மறு காரணமாகும். இதற்கு ஒரு தீர்வைக் கண்டு அதை நடைமுறைப்படுத்த என்னதான் வழி? தீர்வை தொழிற்சங்கங்கள் அல்ல – அரசாங்கத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள்தான் விளக்கிச் சொல்லவேண்டும் என  நாம் எதிர்பார்க்கிறோம். அவர்கள் சொல்லவில்லை என்றால் நாமாவது சொல்லிப் பார்ப்போமா.. ? 
“ஒன்ராறியோவின் (அல்லது கனடாவின்) நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கேற்ப ஊதிய உயர்வுகளை நடைமுறைப்படுத்துவது என்பது மேலே குறிப்பிடப்பட்டவாறு முதலாளி , தொழிற்சங்கம், அரசாங்கம் என்பவற்றை கொண்ட ஒரு  முத்தரப்பு இணக்கத்தாலேயே முடியும்.”  
அப்படியான இணக்கம் ஏற்பட்டால், முத்தரப்பினது பங்களிப்புடனும் ஆசீர்வாதத்துடனும்   ஊதியம் தொடர்பான விடயங்களை இணக்கப்பாட்டுடன் ஆராய்ந்து அறிக்கை தர ஒரு சுயாதீன செயல்குழு ஒன்று சக்திவாய்ந்த நிலையில் சட்டபூர்வமாக முத்தரப்பின் கீழ்  உருவாகும். மேலும் அந்த சுயாதீன செயல்குழு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில்  ஊதியம் தொடர்பான வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு அறியத்தர வைக்க முடியும். அக்குழுவின் தீர்மானங்கள் இறுதியானவை எனக் கணிக்கப்படவும் முடியும்.

இந்த முத்தரப்பு – சுயாதீன செயல்குழு மாதிரியானது, கனடாவின் பொருளாதார ரீதியில் அமைந்த போட்டித்திறன், இணக்கமான தொழிலாளர்-மேலாண்மை உறவுகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை நிச்சயமாக ஊக்குவிக்கும். மோதல் நிலைகளைத் தவிர்க்கும். 
இத்தகைய மாதிரி முத்தரப்பு முறை ஒரு கற்பனை வாதம் அல்ல. அது ஏற்கனவே சிங்கப்பூரில் நடைமுறையில் இருந்து வருகிறது. உலகளாவிய நிலையில் சிங்கப்பூரின் போட்டித் திறன் அதிகரித்ததற்கும், முதலாளி தொழிலாளி ஒத்திசைவு ஏற்பட்டதற்கும் இந்த ‘முத்தரப்பு’  கருத்தியல் வெற்றிகரமாக சிங்கப்பூரில் இயங்க வைக்கப்பட்டதே காரணமாகும்.  
‘முத்தரப்பு’ ( Tripartism) என்ற சொல்லே சிங்கப்பூரில் தொழிற்சங்கங்கள், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. MOM என்ற மனிதவள அமைச்சு ( Ministry of Manpower ), MTUC என்ற  தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (National Trades Union Congress ) மற்றும் SNEF என்ற சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ( Singapore National Employers Federation ) ஆகிய மூன்றும் அங்கு இந்த முத்தரப்புப் பங்காளிகள்.

அதாவது (1) தொழிலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் வேலைக்கான ஆரோக்கியமான சூழல் உருவாகவும், (2) அதற்காக தொடர்ந்து பாடுபடுவதற்கும் (3) தொழிலாளர் நலம்சார்பான உறவுகளை நிர்வகிக்கும் குறிப்பிட்ட கொள்கைகளை அணுக்கமாக அமல்படுத்தி, இணக்கமான வேலைவாய்ப்பு உறவுகளை பேணுவதற்கும் இந்த ‘முத்தரப்பு’ அங்கு உருவாக்கப்பட்டது.  இன்றுவரை வெற்றிகரமாக இயங்கியும் வருகிறது.

இந்த ‘முத்தரப்பு’  கருத்தியல் சிங்கப்பூரை ஒரு பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக மாற்றிவிட்டதுமல்லாமல், இன்று வளர்சியடைந்த நாடுகளில் நாம் காணும் பிரச்சனைகளான ஊதிய உயர்வு, நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகள்,  வேலை வாய்ப்பு இழப்பு, வேலை மறு உருவாக்கம், ஓய்வூதிய வயதை உயர்த்துவது, பணியாளர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பலவற்றையும் கையாண்டு, நாட்டினைச் சிக்கலல்லாத நிலையில் வைத்திருக்கவும் பங்களிக்கிறது.சிங்கப்பூரின் இந்த ‘முத்தரப்பு’  கருத்தியல் கனடாவுக்கு நல்லதொரு உதாரணம்.
இந்த இடத்தில், “சிங்கப்பூரின் அரசாங்கத்தின் கடும்போக்கால்தான் இப்படியாக திட்டங்கள் உருவாகி வெற்றிகரமாக அங்கு நடக்கின்றன.  கனடா ஒரு ஜனநாயக நாடு.. அழுத்தங்கள் இங்கு வேலைக்காகாது” என்று ஒருசில ‘நொண்ணை’கள் கடும்போக்குக்கு எதிராக கருத்து சொல்வார்கள். போங்கடா… ஒரு அரசாங்கம் கடும்போக்கை கையாளாமல் வேறு எப்படி இருக்க வேண்டும்? உரிமைகள் தரப்பட்ட நிலையில் இனங்களை முதலில் வைத்துவிட்டு, பிறகு சட்டம் ஒழுங்கில் கடும்போக்கு காட்டுவது அரசாங்கத்தின் பணியாகும்.  கொன்ஸவேடிவ் அரசாங்கமோ அல்லது கொம்யூனிஸ்ட் அரசாங்கமோ எதுவாயினும் அப்படித்தான் செய்யும். செய்யலாம்! செய்ய வேண்டும்!!

“அரசாங்கத்தின் கடும்போக்கு இருக்கிறது”, “முத்தரப்பு ஒத்துழைப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்பதற்காக சிங்கப்பூரில் தொழிலாளர்கள் வாயில்லாப் பூச்சிகளாக எப்போதும் இருப்பதில்லை. வேலை நிறுத்தங்களை சிங்கப்பூரும் கண்டிருக்கிறது. 1986 ஆம் ஆண்டில் கப்பல் கட்டும் தொழிலாளர்கள், 2012 ஆம் ஆண்டில்  சீனநாட்டிலிருந்து வந்த பேருந்து ஓட்டுநர்கள் செய்த வேலை நிறுத்தங்கள் என்பன கண்டிப்புக்களையும் மீறி அங்கு நடந்த தொழிலாளர் செயல்பாடுகள்! அவற்றை  ‘முத்தரப்பு’ தனக்கான பாடங்களாக எடுத்துக் கொள்கிறது.

இவ்வாறாக பலதும் உலகில் இருக்க, லோகன் கணபதி போன்றோர்  வெறும் அறிக்கைகளை மட்டும் ‘வுட்டுக்’ கொண்டு இருப்பதை கண்டு ஒருபுறத்தில் சிரிப்பு வருகிறது. மறுபுறத்தில் கனடாவில் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் மற்றும்  தொழிற்சங்கங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதைவிட பிரச்சனைகளில் குளிர் காய்கிறார்கள் என்பதைக் கண்டு அழுகையும் வருகிறது.