Spread the love

என்னை யாரும் வற்புறுத்தவில்லை, எனது விருப்பத்தின்பேரிலேயே பதவி விலகுகிறேன்

பில் மோர்ணோ

ஆகஸ்ட் 17, 2020: கனடிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் பில் மோர்ணோ பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அத்தோடு, ரொறோண்டோ மத்தி பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

கோவிட்-19 உத்தேசச் செலவுகள் மற்றும் சுற்றாடல் முன்னெடுப்புகள் தொடர்பாக, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவுக்கும் நிதியமைச்சர் பில் மோர்ணோவுக்குமிடையில் சமீபத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும், இதன் காரணமாக பிரதமர் ட்றூடோ அவரைப் பதவியிலிருந்து விலகும்படி கேட்டிருந்திருக்கலாம் எனவும் வதந்திகள் முன்னர் பரவியிருந்தன.

“இன்று நான் பிரதமரைச் சந்தித்து, எனது பாராளுமன்றப் பதவியிலிருந்தும் விலகப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். இரண்டு தவணைகளுக்குமேல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது ஒருபோதுமே எனது விருப்பமாக இருந்ததில்லை” என அவர் இன்று பத்திரிகையாளர் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (Organization for Economic Co-operation and Development (OECD)) செயலாளர் நாயக பதவிக்குத் தான் போட்டிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக் காலத்தில் இருக்கக்கூடிய பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்க புதிய நிதியமைச்சர் ஒருவரின் தேவை இப்போது இருக்கிறது எனவும், தனது பதவி விலகலுக்கு பிரதமர் ட்றூடோ காரணமில்லை எனவும், தனது முழு விருப்பத்துடனேயே தான் பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

‘வீ’ தர்ம நிறுவனம் தொடர்பாகக் கடந்த சில வாரங்களாக நடைபெறும் விவாதங்களின்போது, அச் சர்ச்சைகளில் பிரதமரினதும், நிதியமைச்சரினதும் பங்குகள் குறித்தும், அவருக்கு வழங்கப்பட்ட $41,366 பணத்தை மீளக் கொடுக்க வெண்டுமென்பதுடன், இருவரும் பதவியிலிருந்து விலகவெண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



மோர்ணோவின் மகள் கிரேஸ், ‘வீ’ தர்ம ஸ்தாபனத்தில் பணி புரிகிறார். கிளேயர் என்னும் இன்னுமொரு மகள் ‘வீ’ தர்ம ஸ்தாபனத்தில் தொண்டராகப் பணணிபுரிவதாகவும், அந்நிறுவனத்தின் நிகழ்வுகளில் பேச்சாளராக இருந்துவருவதாகவும் அறியப்படுகிறது. மோணோவும், அவரது குடும்பமும் இத் தர்ம ஸ்தாபனத்தின் செலவில் சுற்றுலா சென்று வந்ததற்கான செலவான $41,000 டாலர்களுக்கான காசோலையை மோர்ணோ மீளக் கையளித்துவிட்டதாகவும் தெரிகிறது.

மத்திய அரசாங்கத்தின் மாணவர் உதவித் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட $900 மில்லியன் தொகையை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய அரசினால் ‘வீ’ ஸ்தானத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது எனவும் இதற்குக் கைமாற்றாக அந்த ஸ்தாபனம் பிரதமரது தாய், மனைவி, சகோதரர், பில் மோர்ணோ குடும்பம் எனப் பலருக்கும் பணம் மற்றும் இதர சலுகைகளையும் கொடுத்திருக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருவதோடு பிரதமர், அவரது உதவியாளர், நிதியமைச்சர் ஆகியோர் பதவி விலகவேண்டுமென்று கேட்டுவருகின்றன.

Print Friendly, PDF & Email
Related:  கனடாவின் சமூக நலத் திட்டத்தில் (Welfare System) பாரிய மாற்றங்கள்
கனடா | நிதியமைச்சர் பில் மோர்னோ பதவி விலகினார்
நிதியமைச்சர் பில் மோர்னோ

கனடா | நிதியமைச்சர் பில் மோர்னோ பதவி விலகினார்