Editorialசிவதாசன்

கனடா நாள்

தலையங்கம்

சிவதாசன்

இன்று கனடா நாள். சுதேசிகளுக்காக ஒதுக்கப்பட்ட மாதத்தில் கனடா நாள் கொண்டாடடப்படுவது ஒரு வகையில் பொருத்தமானது தான்.

அறுபதுகள் வரையும் உலகின் இனத்துவேஷம் மிகுந்த நாடு என அறியப்பட்டிருந்த இந்த நாட்டை உலகம் மதிககும் ஜனநாயக, மனிதாபிமான நாடுகளில் ஒன்றாக மாற்றிய பெருமை சில துணிச்சலான அரசியல்வாதிகளைச் சேரவேண்டியது. அதில் ஒருவர் பியர் றூடோ. ஒரு பிரஞ்சு மொழிக்காரனாக இருந்தும் தனது அரசியல் எதிர்காலம் சூனியமாகப் போய்விடும் ஆபத்து இருந்தும், கியூபெக் பிரிவினைவாதிகளுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கையை எடுத்ததன் மூலம் கனடா என்ற ஒரு ஐக்கிய தேசத்தைக் கட்டி எழுப்பியவர் அவர்.

அமெரிக்காவில் தென் மாநிலங்கள் வழமையாகத் தமக்குத் தரும் ஆதரவை நிரந்தரமாக இழக்கப் போகிறோம் எனத் தெரிந்திருந்தும் சிவில் உரிமைச் சட்டத்தைத் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்திய லிண்டன் ஜோன்சன் போன்றவர்களும் இதே ரகத்தினர்தான்.

மக்களிடம் செல்வாக்கை இழந்துவிடுவோம் என்பதற்காக நாட்டிற்கு நல்லதைச் செய்யத் துணியும் தலைவர்களே வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். துர்ப்பாக்கியமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா போன்ற கல்விமான்களிடம் இந்த அறத் துணிச்சல் இல்லாமையினால்தான் இலங்கை இன்று உலகின் பரிகாசத்துக்குள்ளாகியிருக்கிறது. மாறாகத் துணிச்சலான, தூரதிருஷ்டியுடனான கொள்கைகளை வகுத்த தலைவர்களைக் கொண்ட உதாரண நாடுகளில் ஒன்றான கனடாவில் வாழக்கிடைத்தது எம்மில் சிலருக்குப் பெரும் பாக்கியம்.

இருப்பினும் கனடாவுக்கும் செல்லும் தூரம் நீண்டு கிடக்கிறது. தடங்கல்கள் நிறையவிருக்கிறது. உலகிலுள்ள அத்தனை இனங்களையும், மொழிகளையும், மதங்களையும் தாங்கி வளமளித்துத் தழைத்தோங்கச் செய்துவரும் இந்நாடு தன் சுதேசிகளை விட்டுவிட்டுப் போகமுடியாது. அதற்கான முயற்சிகள் நம்பிக்கையளிப்பனவாயினும் வேகம் குறைவெனவே தெரிகிறது. அடுத்துவரும் இளம் தலைவர்கள் இவ் வேகத்தை அதிகரிப்பார்கள் என்று நம்புகிறோம்.

ஏறத்தாள 40 வருடங்களுக்கு முன்னர் மொன்றியல் மிராபெல் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது ‘Welcome to Canada’ என்ற புன்முறுவலுடன் ஒரு குடிவரவு அதிகாரி வரவேற்று “தங்குவதற்கு இடமிருக்கிறதா?” என்று கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமலேயே கைகளுக்குள் ஒரு மொன்றியால் விலாசத்தைத் திணித்து அனுப்பிய அந்த நாள் எப்போதும் எனது கனடா நாள். ஊரார்கள் எல்லோரும் ஒருநாளில் சேர்ந்து சோராமல் தேசத்தின் வடம் பிடிக்கும் நாள்.

இழுப்போம். எதிர்காலம் எமது சந்ததிக்கும் சேர்த்துத்தான்.