கனடா தேர்தல்|இன்னும் கொஞ்சம்….

Spread the love
சிவதாசன்

அக்டோபர் 21 ம் திகதி கனடாவில் தேர்தல் திருவிழா. பிரதான கட்சிகள் ஒருவரையொருவர் இழுத்து வீழ்த்துவதில் கொஞ்சம் பலன் கண்டு வந்தாலும் இறுதி நாட்களில் லிபரல் கட்சியின் தலை மேலே தெரியவாரம்பித்துள்ளது போல் தெரிகிறது.

Chart Courtesy: CTV New

மேற்குலகில் 80/20 எனப்படும் ‘பறேட்டோ’ தத்துவம் (Pareto Principle) என்று ஒன்று வழக்கிலிருக்கிறது. உலகில் நடைபெறும் 80 வீதமான விளைவுகளுக்கு 20 வீதமானோரே காரணமாக இருக்கின்றனர் என்பதே இத் தத்துவத்தின் மூலப்பொருள். எழுபதுகளில் நம்மூரில் பழக்கத்தில் இருந்த 80/20 ஷேர்ட்டுகள் மாதிரி. அதில் 80 வீதம் பருத்தியும் 20 வீதம் பொலியெஸ்டரும் இருக்கும். ஆனாலும் அந்தச் ஷேர்ட் சுருங்காமல் கசங்காமல் பாதுகாப்பது அதிலுள்ள 20 வீதம் பொலியெஸ்டர் தான்.

மேற்குலகில் அரசியல் நிகழ்வுகளிலும் இந்த 80/20 தத்துவம் தன் விளையாட்டைக் காட்டுவது வழக்கம். அரசியலில் யார் யார் வெல்லவேண்டுமென்பதை 20 வீதம் அதிகார வர்க்கம் தான் தீர்மானிப்பது வழக்கம். அமெரிக்காவில் முதல் முறையாக நமது துரும்பரே 80 வீதத்தால் ஆட்சிக்கு வந்தவர். அவரிடம் 20 வீதம் தோற்றுவிட்டது. இந்த நடைமுறை ‘சாமான்யம்’ (populism) என்ற பெயரில் பிரேசில், ஒன்ராறியோ போன்று இதரவிடங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. வரலாற்றில் இந்த சாமானியர்களின் ஆட்சி ஹிட்லர், முசோலினி, ஃபிராங்கோ ஆகியவர்களால் பரிசோதிக்கப்பட்ட ஒன்றுதான். அது நடைமுறைக்கு ஏற்றதல்லவென்பதும் குறுகிய ஆயுளைக் கொண்டதுமென்பதும் நிரூபிக்கப்பட்டதொன்று.

ஏற்கெனவே அங்கத்தவராக அல்லது ஆட்சியிலுள்ளவர்கள் தேர்தல்களில் மீண்டும் போட்டியிடும்போது அவர்களது ‘பரிச்சயத் தன்மை’ (incumbent factor) அல்லது வாக்காளரிடையே ஏற்படும் ‘களைப்புத் தன்மை’ (fatigue) வேட்பாளர்களுக்கு எதிராகக் கலத்தில் இறங்கிவிடுவதுண்டு. அப்படிப் பார்க்கில் லிபரல் கட்சிக்குத் தான் இது எதிராகப் பணியாற்ற வேண்டும்.

ஆனால், இந்தத் தடவை இந்த incumbent factor என்பது கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிராகவே செயலாற்றுவது போலத் தெரிகிறது. அதற்குக் காரணம் அக் கட்சியின் தலைவர் அல்ல, ஒன்ராறியோ மாகாணத்திலும், தெற்கே அமெரிக்காவிலும் ஆட்சி புரியும் கன்சர்வேட்டிவ் ஆட்சிகளினால் ஏற்பட்ட incumbent factor தான். இவ்வாட்சிகள் 80 வீதத்தாருக்கு எரிச்சலை உண்டுபண்ணுவதாக இருக்கலாம்.

தலைவர்கள் என்று பார்க்கையில் ஜஸ்ரின் ட்ரூடோ பல கறைகளைக் காவித் திரிபவர். அப்பப்போ திமிரையும் வெளிப்படுத்துபவர். நேர்மையான ரகத்தினுள் இவரை அடக்கலாமோ தெரியவில்லை (அரசியல்வாதிகள் எவரை இதற்குள் அடக்கலாம் என்கிறீர்கள்?). இருப்பினும் அவரிடம் ஒரு துடிப்பு இருக்கிறது. கன்சர்வேட்டிவ் தலைவர் அன்ட்ரூ ஷீயரைத் தவிர அனேகமாக தலைவர்களிடம் ஓரளவு துடிப்பு இருக்கிறது. ஒரு தெருச் சாமானியனிடம் காணும் பல அம்சங்கள் எதுவும் ஷீயரிடம் இல்லை.

இந்த 80 வீதத்தார் கொள்கைகளை விளங்கிக் கொள்பவர்களல்லர். புல்லரிக்க வைக்கும் சொல்லாட்சி (rhetoric) என்பது இவர்களிடம் நல்லாக அவியும். இதனால் தான் கன்சர்வேட்டிவ் கட்சிக்காரர் புதிய குடிவரவாளர்களையும், குற்றவாளிகளையும், முற்போக்காளர்களையும், மிதவாதிகளையும் திட்டி இந்த சாமானியரின் வாக்குகளை எடுப்பதுண்டு.

ஷியரும் அந்த வாய்பாட்டையே பாவித்தார். அவரின் சொல்லாட்சியில் ஓர்மம் இல்லை. அதே வாய்பாட்டை மக்கள் கட்சியின் தலைவர் மக்சிம் பேர்ணியெர் மிகத் திறமையாகப் பாவிக்கிறார். கனடா ஒரு குடிவரவாளரின் நாடு என்பதனால் இந்த வாய்பாடு அமெரிக்காவில் போல் பெருமளவு வாக்குகளை ஈர்ப்பதற்கான களநிலைமைகள் இப்போது இல்லை.

மக்களின் பைகளுக்குள் காசுகளை அள்ளிப் போடுவேன் என அண்ட்ரூ ஷியர் சொல்வது பல தடவைகள் கனடிய கன்சர்வேட்டிவ் காரர்களால் பாவிக்கப்பட்டுவிட்டது. கடைசியாகப் பாவித்தவர் ஒன்ராறியோ முதலமைச்சர் ஃபோர்ட். மக்களின் பைகளில் இருந்து அவர் சில்லறைகளையே எடுத்து வருவதும் சேவைகளைக் குறைத்து வருவதும் சாமானியரின் மனங்களில் இன்னும் நெருடிக்கொண்டிருக்கும் விடயம். இது ஷீயருக்கு உதவாது.

சூழல் பற்றிய விடயங்களில் உலக மகா கன்சர்வேட்டிவ்களே மனம் மாறிக்கொண்டிருக்கும் நேரம். ஷீயர் கொஞ்சம் நகர்வைக் காட்டியிருக்கலாம். இந்த வேளையில் சூழல் வெறுப்பாளராகிய அல்பேர்ட்டா முதல்வர் ஜேசன் கெனியை உதவிக்கு அழைத்தது எத்தனை அபத்தம்?

கன்சர்வேட்டிவ் கட்சிக்காரரின் இன்னுமொரு சுலோகம் ‘வரவு செலவு துண்டு விழுதல்’ (budget deficit). இது ஒரு பொருளாதார சூட்சுமம். அரசாங்கத்தின் கல்லாப் பெட்டிக்கு வருகின்ற தொகையை மீறிச் செலவு செய்வதால் ஏற்படும் வித்தியாசம் deficit எனப்படும். இப்ப்டிச் செய்வதால் அரசாங்கம் கடனில் தான் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். பட்ட கடனுக்குத் தொடர்ந்தும் வட்டி கட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற அக்கறையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்காரர் வருமானத்தை அதிகரிக்க வழியில்லாது செலவுகளைச் சுருக்க (austerity) சேவைகளைக் குறைப்பது வழக்கம். தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்துவதும், மருத்துவநிலையங்களை மூடுவதும் அரச சொத்துக்களைத் தனியாருக்கு விற்பதுமென்று பல வழிகளில் இந்த deficit ஐக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். இது மக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதால் ஆட்சி மீது வெறுப்பு ஏற்படுகிறது. வேலையை இழக்கப்போகிறொமென்ற அச்சமே அவர்களது கவலை, deficit குறைப்பல்ல.

மாறாக, பணத்தைக் கடன்பட்டாகிலும் முதலீடு செய்வதன் மூலமே மக்களுக்கு வேலைகளை வழங்கலாம், அவர்களிடமிருந்து வரி வசூலிக்கலாம், அவர்களைக் குற்றச் செயல்களில் ஈடுபட வைக்காது சமூகத்தப் பாதுகாக்கலாம். இதனால் வசூலிக்கப்படும் பணத்தில் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டலாம் என்பது மிதவாதிகளின் பொருளாதாரக் கொள்கை.

வீட்டில் அடமானத்தை எடுத்தாவது பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்யும் பெற்றோர்கள் நான்கோ ஐந்தோ வருடங்களில் அப்பிள்ளைகளின் மீது செய்யப்பட்ட முதலீட்டின் பலன்களைப் பெறுவது போலத்தான் இந்த ‘deficit running’ பொருளாதாரக் கொள்கை. இது சாமானியனுக்குப் புரியும். கன்சர்வேட்டிவ்காரருக்கும் புரியும். தென்னை வளர்த்துத் தேங்காய் பிடுங்குவது போல ஒரு நீண்டகால முதலீடு.

அண்ட்ரூ ஷியர், பார்வைக்கு நல்ல மனுஷன் போல் தெரிகிறார். இன்னும் ‘டயப்பர்’ கட்டிக்கொண்டு திரியும் குழந்தையின் முகம் அழகாகத் தான் இருக்கிறது. அது ஒரு அரசியல்வாதியின் முகமாக உருமாறும் என்ற நம்பிக்கையைத் தருவதாயில்லை. துடிப்பு போதாது. அவரருகே இருக்கும் கொள்கை வகுப்பாளர்கள் பலர் அறிவுச் சூனியங்களாக இருப்பார்கள் போலிருக்கிறது.

எனவே இந்தத் தடவையும் கன்சர்வேட்டிவ் கட்சிக்காரருக்கு ஆட்சியமைக்கும் பாக்கியம் இல்லை. ட்ரூடோவின் சாதகத்தில் பத்தாம் இடம் பலமாக இருப்பது போல் தெரிகிறது. அப் பதியை விட்டு இப்போதைக்கு அவர் நகர்வார் போலத் தெரியவில்லை.

20 வீதத்துக்குக் கொண்டாட்டம்தான்…

Print Friendly, PDF & Email
>/center>