தலையங்கம்

கனடா தினம்

தலையங்கம்

கனடா என்ற பெயர்மாற்றம் அல்லது ஆட்சி மாற்றம் நடைபெற்று 156 வருடங்களாம். பெரும்பாலான தமிழர்களுக்கு இங்கு புகலிடம் தந்து ஏறத்தாழ 40 வருடங்கள். அறுபதுகள் வரைக்கும் வெள்ளையரல்லாதோருக்கு கனடாவின் படலை இறுக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. தற்போதைய பிரதமரின் தந்தையார் பியர் எலியட் ட்றூடோ தான் அதைத் திறந்துவிட்டார். இன்னும் சில வருடங்களில் இங்கும் பிரதமர் ஒரு இலங்கையராகவோ இந்தியராகவோ இருக்கலாம். எல்லாமே இயக்க விதிகளின்படி.

“Welcome to Canada” எனக்கூறி குடிவரவதிகாரிகள் வரவேற்ற அனுபவம் பெரும்பாலானோருக்கு இருக்கும். அதே வேளை தெருக்களில் சாதாரண மனிதர்கள் “why don’t you go back to where you came from” எனக்கூறி கடுப்பேத்திய அனுபவங்களும் சிலருக்கு இருக்கும். ஆனாலும் இம்மண்ணின் மைந்தர்கள் தெருக்களில் வசிக்க நாம் எமது சொந்த வீடுகளில் வசிக்கிறோம். தவறு எங்கு எப்படி நடந்திருக்கிறது என்பதை அறிவதில் மினக்கெட்டுப் பிரயோசனம் இல்லை. வாழ்வு நகரவேண்டும்.

உழைப்பவர்கள் முன்னேற சமநிலம் தருகிறது கனடா. பெரும்பாலான தமிழர்கள் முன்னேறியிருக்கிறார்கள். தெருக்களில் வாழும் தமிழரெனக் கூற எவருமில்லை. எல்லோரும் இன்புற்றுறிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருவது. நாம் கனடாவிடம் பெற்ற கடனை எமது இரண்டாம் தலைமுறையினர் திருப்பிச் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் எமக்கு மகிழ்ச்சி.

கனடாவும் கனடியரும் செழிப்பாக வாழ வாழ்த்துக்கள்! (Photo by Jason Hafso on Unsplash)